ADDED : டிச 13, 2024 08:34 AM

கடவுளை அடையும் வழி
ராமசாமி தாத்தா அரச மரத்தடியில் அமர்ந்திருந்த போது தியான வகுப்பில் இருந்து வந்தான் கந்தன்.
''தியான வகுப்பில 'ஓம்' என்னும் மந்திரத்தை திரும்பத் திரும்ப மனதிற்குள்ளே சொல்ல வேண்டும் எனச் சொல்றாங்க. நானும் அதை திரும்பத் திரும்ப சொல்றேன். ஆனா என்னால கவனம் வைக்க முடியல. விளையாட்டு போட்டியில் ஜெயிப்போமா மாட்டோமா? இந்த வார விடுமுறையில எங்கே போகலாம்? இப்படிப்பட்ட எண்ணங்களைத்தான் யோசிக்கத் தோணுது. மனச ஒருமுகப்படுத்த வழிமுறை இருக்கா? கிருஷ்ணரும் திருவள்ளுவரும் இது பற்றி என்ன சொல்றாங்க'' எனக் கேட்டான் கந்தன்.
''பகவத்கீதையின் 8ம் அத்தியாத்தில் உள்ள 12, 13 ஸ்லோகங்கள், திருக்குறளின் 6வது திருக்குறளில் இதற்கான விடை இருக்கு'' என்றார் தாத்தா.
ஸர்வத்³வாராணி ஸம்யம்ய மநோ ஹ்ருதி ³ நிருத்4ய ச |
மூர்த்4ந்யாதா4யாத்மந: ப்ராணமாஸ்தி ²தோ யோக³தா4ரணாம் || 8- 12||
ஓமித்யேகாக்ஷரம் ப்³ரஹ்ம வ்யாஹரந்மாமநுஸ்மரந் |
ய: ப்ரயாதி த்யஜந்தே³ஹம் ஸ யாதி பரமாம் க³திம் || 8- 13||
ஐம்புலன்கள் உள்ளிட்ட எல்லா வாசல்களையும் நன்கு கட்டினால் மனதை அசையாமல் நிறுத்தலாம். உயிரைத் தலையின் உச்சியில் நிலை நிறுத்தி யோக தாரணையில் உறுதி பெற்று, ஓம் என்ற பிரணவ எழுத்து ஒன்றையே ஜபித்துக் கொண்டு என்னை சிந்திப்பவன் உடம்பைத் துறந்து பரமகதியை அடைவான்.
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.
ஐம்பொறி வாயிலாக பிறக்கும் ஆசைகளை அவித்து பொய்யில் இருந்து விலகி ஒழுக்க நெறியைப் பின்பற்றுபவர் நீண்டகாலம் வாழும் பாக்கியத்தை அடைவர்'' என்றார்.
''எனக்கு புரியற மாதிரி எளிமையான விளக்கம் சொல்லுங்க தாத்தா'' எனக் கேட்டான்.
''கண்ணால் தேவையில்லாத விஷயங்களை பார்க்கவோ, காதால் தேவையில்லாத விஷயங்களை கேட்கவோ, வாயால் தேவையில்லாத விஷயங்களை பேசவோ கூடாது. மூக்கினால் உடம்பிற்கு நல்லது செய்யும் பொருட்களை மட்டுமே நுகர வேண்டும். அதுபோல இப்போ நல்ல தொடுகை, கெட்ட தொடுகை பற்றி பள்ளிக்கூடத்தில் சொல்லித் தர்றாங்க தானே. அதுபோல கெட்ட தொடுகைகளை தவிர்த்து விட வேண்டும். இப்படி செய்தால் தியானம் கைகூடும். கடவுள் நம்மை தன்னோடு சேர்த்துக் கொள்வார்'' என விளக்கினார் தாத்தா.
பகவான் கிருஷ்ணரும், திருவள்ளுவரும் சொன்னபடி தியானப் பயிற்சியைச் செய்தால் கடவுளை அடையலாம்.
-தொடரும்
எல்.ராதிகா
97894 50554