
டிச.13 - கணம்புல்லார் குருபூஜை
வடவெள்ளாறு ஆற்றங்கரையில் அமைந்த இருக்குவேளூர் என்னும் ஊருக்கு தலைவராக இருந்தவர் கணம்புல்லர். சேலம் வாழப்பாடியில் இருந்து 6 கி.மீ., தொலைவில் உள்ள பேளூரே இந்த ஊர்.
தினமும் சிவன் கோயிலுக்கு சென்று மாலை முதல் காலை வரை நெய் விளக்கேற்றி தொண்டு புரிந்தார். மகிழ்ந்த சிவபெருமான் சோதிக்கும் விதமாக வறுமையை உண்டாக்கினார். ஆனாலும் மனம் தளரவில்லை.
இதற்கான காரணம் தெரியுமா... விளக்கேற்றும் போது அந்த இடம் வெளிச்சமாகும். இடம் மட்டுமல்ல. மனமும். ஆம். விளக்கேற்றும்போது மனதில் உள்ள பொறாமை, ஆசை, கோபம் என்னும் தீய குணங்கள் ஒழியும். ஞானம் பிறக்கும். இதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் அல்லவா. அதைத்தான் கணம்புல்லாரும் செய்தார்.
இருக்குவேளூரில் உள்ள நிலத்தை விற்று தில்லைக்கு (சிதம்பரம்) குடிபெயர்ந்தார். அங்கு திருப்பணி செய்ய தேர்ந்தெடுத்த தலம் திருப்புலீச்சுரம். 'வியாக்ரபாதர்' என்னும் புலிக்கால் முனிவர் பூஜை செய்த தலம் இது.
நெய் வாங்குவதற்காக கணம்புல்லை அறுத்து அதை தினமும் விற்பார். ஒருநாள் அதிலும் சோதனை குறுக்கிட்டது. ஆம். அன்று புல் விற்கவில்லை. இருந்தாலும் விளக்கேற்ற வேண்டும் என்ற உறுதி மட்டும் மனதில் அணையவில்லை. சரி. நெய் இல்லையென்றால் என்ன? புல் இருக்கே நமக்கு என நினைத்து கணம்புல்லை திரிபோல செய்து விளக்கு ஏற்றினார். ஆனால் அதற்கும் சோதனை... அத்தனை புல்லும் திரியாக எரிந்து முடிந்தது. பொழுது புலரும் நேரம் வந்தது.
எதை வைத்து எரிப்பது? சிவனே இனி நான் என்ன செய்வேன் என புலம்பினார். கடைசியில் ஒரு யோசனை தோன்றியது.
எண்ணெய் பிசுக்கேறிய தன் குடுமியை அவிழ்த்தார். நீண்ட தலைமுடியை விளக்கின் அருகில் வைத்து குடுமியை எரிக்கத் தொடங்கினார்.
தங்கள் பிரான் திரு உள்ளம் செய்து தலைத் திருவிளக்குப்
பொங்கிய அன்புடன் எரித்த
பொருவில் திருத்தொண்டருக்கு
மங்கலம் ஆம் பெரும் கருணை
வைத்து அருளச் சிவலோகத்து
எங்கள் பிரான் கணம் புல்லர் இனிது
இறைஞ்சி அமர்ந்து இருந்தார்என்கிறது பெரியபுராணம்.
இதற்கு மேலும் காக்க வைப்பாரா அந்த பரம்பொருள். உடனே பார்வதியுடன் ரிஷப வாகனத்தில் காட்சி கொடுத்தார். கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தன்று இந்நிகழ்ச்சி நடந்தது.