ADDED : ஜன 13, 2025 09:03 AM

பிரியமானவர் யார்
மாலையில் பள்ளியை விட்டு வீட்டுக்கு வந்தான் கந்தன். டிபன் கூட சாப்பிடாமல் ராமசாமி தாத்தாவிடம் ஓடினான். நாற்காலியில் உட்கார்ந்திருந்த தாத்தா பகவத் கீதையை புரட்டிக் கொண்டிருந்தார். அவரிடம், ' தாத்தா... இன்னிக்கு கடையேழு வள்ளல்கள் என்ற தலைப்பில் பாடம் நடத்தினாங்க'' என்றான். ''அவர்கள் பெயர்கள் தெரியுமா? எனக் கேட்டதற்கு ''தெரியுமே... பேகன், பாரி, காரி, ஆய், அதியமான், நள்ளி, ஓரி. இவர்களில் அதியமான் பற்றித் தான் நிறைய சொன்னாங்க. அரிய நெல்லிக்கனி ஒன்றைப் பெற்ற அதியமான், அதை தான் உண்ணாமல் அவ்வைப் பாட்டியின் தமிழ் தொண்டுக்காக கொடுத்தார்'' என்றான் கந்தன்.
மேலும் அவன், 'பகவத்கீதை, திருக்குறளில் வள்ளல் பற்றி சொல்லி இருக்காங்களா'' எனக் கேட்டான்.
பகவத் கீதையின் 12ம் அத்தியாயத்தில் 13, 14 ஸ்லோகங்களை சொல்லி விளக்கம் அளித்தார் தாத்தா.
அத்³வேஷ்டா ஸர்வபூ4தாநாம் மைத்ர: கருண ஏவ ச |
நிர்மமோ நிரஹங்கார: ஸமது³:க²ஸுக²: க்ஷமீ ||12-13||
ஸந்துஷ்ட: ஸததம் யோகீ ³ யதாத்மா த்³ருட4நிஸ்²சய: |
மய்யர்பிதமநோபு³த்³தி 4ர்யோ மத்³ப 4க்த: ஸ மே ப்ரிய: || 12- 14||
எந்த உயிர்கள் மீதும் பகை கொள்ளாதவர்கள், நட்பு, கருணை கொண்டவர்கள், நான், எனது என்ற எண்ணம் இல்லாதவர்கள், இன்பம், துன்பத்தை சமமாக கருதுபவர்கள், பொறுமையாக வாழ்பவர்கள், எப்போதும் மகிழ்ச்சியுடன் இருப்பவர்கள், தன்னடக்கம், திடசிந்தனை கொண்டவர்கள், மனம், புத்தியை எனக்கு அர்ப்பணித்து வாழும் யோகிகள் அனைவரும் எனக்கு இனிமையானவர்கள். இப்படிப்பட்ட நற்குணசாலிகள் தனக்கென உள்ளதை பிறருக்கு கொடுத்து மகிழும் வள்ளல்களாக இருப்பார்கள்.
இதையே திருவள்ளுவர்,
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர் -228
சேர்த்து வைத்த பொருளை பிறருக்குக் கொடுக்காமல் வைத்திருந்து கடைசியில் அதை இழக்கும் வன்கண்மை உடையவர்கள், கொடுப்பதால் வரும் இன்பத்தை அறிய மாட்டார்கள்.
''வன்கணவர் என்கிறாரே வள்ளுவர். அப்படீன்னா என்ன தாத்தா'' எனக் கேட்டான் கந்தன்.
பிறருக்கு கொடுப்பதால் கிடைக்கும் இன்பத்தை அனுபவிக்காத பாவிகள் என்று பொருள். நிலையற்ற செல்வத்தை 'என்னுடையது என்னுடையது' என பிறருக்கு கொடுக்காமல் பாதுகாப்பர். இது மிக கொடுமையானது. கடைசியில் ஒருநாள் அந்த செல்வத்தை இழந்து வேதனைப்படுவர்.
இங்கு கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், கொடுக்காமல் வாழ்ந்தவர் செல்வத்தை இழக்கிறார் எனச் சொல்கிறாரே தவிர கொடுப்பதால் செல்வத்தை இழந்தார் என திருவள்ளுவர் கூறவில்லை.
ஏனெனில் கீதையில் கூறியுள்ளபடி, வள்ளலாக கொடுத்து மகிழ்பவர்கள் கடவுளுக்கு பிரியமானவர்கள். அதனால் அவர்களிடம் செல்வம் பெருகும்'' என்றார் தாத்தா.
-தொடரும்
எல்.ராதிகா
97894 50554