ADDED : ஜன 13, 2025 09:02 AM

கொளஞ்சியப்பர்
கந்த சஷ்டி கவசம் ஒலித்துக் கொண்டிருக்க பாட்டி பூஜை அறையில் சுவாமி படங்களுக்கு பூ வைத்துக் கொண்டிருந்தார்.
''என்ன யுகா, இன்னைக்கு காலையிலேயே எழுந்து ஆபீஸ் வேலை பார்க்க ஆரம்பிச்சிட்ட?” என விசாரித்தார் பாட்டி.
“ஒரு கம்பெனி மேல ஒரு கம்பிளைண்ட் பைல் பண்ண வேண்டி இருந்தது. அதை இன்னிக்கு தான் முடிச்சேன். இத பாத்துட்டு அவன் எப்ப பதில் அனுப்புவானோ தெரியல. நாலு மாசம் கூட ஆகும்”
“ஓ! ஆனா நம்ம கொளஞ்சியப்பர் கோயில்ல நம்ம கையால எழுதி பிராது கட்டினா மூணு மாசத்தில் பதில் தருவார் கொளஞ்சியப்பர். நீ வேணா கட்டிப் பாரேன்”
“ ம்... என் கஷ்டம் விளையாட்டா போச்சு! ஓ! போன வாரம் நீ பேனா பேப்பரோட போக வேண்டிய முருகர் கோயில்னு சொன்னியே, அது கொளஞ்சியப்பர் கோயில் தானா? இப்ப புரிஞ்சது! ஆமா, புதுசு புதுசா ஏதோ சொல்றியே! கோயிலுக்கு போனா நம்ம மனசுக்குள்ள இருக்கிற குறையை கடவுள்கிட்ட இறக்கி வச்சிட்டு வருவோம். இதை நம்ம மனசே செஞ்சு முடிச்சிடும்... ஆனா நீ ஏதோ எழுதணும்னு சொல்றியே. அந்த கோயில் எங்க இருக்கு?”
“கடலுார் மாவட்டம் மணவாளநல்லுாரில் கொளஞ்சியப்பர் கோயில் இருக்கு. அடர்ந்த காடாக இருந்த இந்தப் பகுதியில உருவான இக்கோயிலில் அருள்பவர் சாட்சாத் முருகப்பெருமான் தான்.
ஒரு சமயம் இப்பகுதிக்கு மேய்ச்சலுக்கு வந்த மாடு ஒன்னு குளஞ்சிச் செடிகள் புதராய் மண்டிக் கிடந்த ஒரு இடத்தை தன் கால்களால் தேய்த்து ஒரு கற்சிலையின் மீது பால் சொரிந்தது. தினமும் இதை ஒரு வழக்கமாக அது செய்ய, இதைப் பார்த்த மக்கள் அந்த பலிபீடம் புனிதத்துக்குரியது என உணர்ந்து அதை வழிபட தொடங்கினர். அடையாளம் இல்லாததால் அது என்ன தெய்வம் எனத் தெரியாமலே வழிபட்டனர்.
காலப்போக்கில் இதற்கான தேடல்களை அவர்கள் தொடங்கியபோது விருதாச்சலம் தல வரலாற்றில் இதற்கான விடை கிடைச்சது. ஒரு சமயம் தம்பிரான் தோழன் எனப்படும் சுந்தரர் சிதம்பரத்துக்கு மேற்கில் உள்ள தலங்களையெல்லாம் தரிசித்து விட்டு விருத்தாச்சலத்திற்கு வந்தார். அப்படி வந்தவர் இந்த ஊரையும் சுவாமியின் பெயரையும் கேள்விப்பட்டு இவ்வளவு பழமை வாய்ந்த கோயிலைப் பற்றி பாட தனக்கு தகுதி இல்லை எனச் சொன்னாராம்.
சுந்தரர் வந்து தன்னை பாடுவார் எனக் காத்திருந்த சிவனுக்கு இது ஏமாற்றமாக இருந்துச்சு. அதனால் வாய்மொழியாக முருகனிடம் முறையிட்டார். உடனே முருகன் ஒரு வேடனாக மாறி சுந்தரரிடம் போய் அவர் கையில் இருந்த பணத்தை எல்லாம் திருடினார். 'இந்த செல்வங்கள் எல்லாம் என்னுடையது அல்ல, அந்த சிவனின் திருப்பணிக்காக வைத்திருப்பது. எனவே இதை எல்லாம் என்னிடம் திருப்பி கொடு' என வேடனிடம் வேண்டினார் சுந்தரர். 'உனக்கு பணம் எல்லாம் திரும்ப வேண்டுமென்றால் விருத்தாசலத்திற்கு வா' எனச் சொல்லிவிட்டு வேடன் முருகன் மறைந்தார்”
“அப்புறம் என்ன ஆச்சு? சுந்தரருக்கு பணம் கிடைச்சதா?”
“ கிடைக்காம போகுமா! அந்த சிவனின் திருவிளையாடல் தான் இது என்பதை உணர்ந்த சுந்தரர் அங்கே போய் மன்னிப்பு கேட்டு பாடல் பாடி இழந்ததை திரும்ப பெற்றார். பாடலைக் கேட்டு மகிழ்ந்த சிவன் பன்னீராயிரம் பொற்காசுகளைத் தந்தார். ஏற்கனவே வழிப்பறிக்கு ஆளான சுந்தரர், 'இவ்வளவு பொற்காசுகளை எப்படி எடுத்துச் செல்வேன்' எனக் கேட்டார்.
அதற்கு சிவன், 'பொற்காசுகளை இங்குள்ள மாத்து உரைத்த பிள்ளையாரிடம் காட்டி பொற்காசுகளின் மாத்தை உரசி பார்த்து விட்டு, மணிமுத்தாற்றில் போட்டு விட்டு திருவாரூர் கமலாலயம் குளத்தில் சென்று அங்கு இது போல குளக்கரையில் உள்ள மாத்து உரைத்த பிள்ளையாரிடம் காட்டி சரிபார்த்து எடுத்துக் கொள்' எனத் தெரிவிச்சார். சுந்தரரும் அப்படியே செய்தார். திருவாரூர், விருத்தாசலத்தில் மாத்து உரைத்த பிள்ளையார் கோயில்கள் இருக்கு”
“ம்... இதுல இருந்து என்ன தெரியுது? அப்பவே கூரியர் சர்வீஸ் எல்லாம் இருந்திருக்கு பாட்டி”
யுகனின் பேச்சுக்கு கலகலத்த பாட்டி விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்தார். சுந்தரரை வழிமறித்த வேடன் முருகன் தான் என்பதை உணர்த்துவதற்காக ஓரிடத்தில் சுந்தரருக்கு காட்சியளித்தார் முருகன். அந்த இடத்தில் குளஞ்சி மரங்கள் அதிகமாக இருந்ததால் சுவாமிக்கு குளஞ்சியப்பர் என் பெயர் வந்தது. காலப்போக்கில் கொளஞ்சியப்பர் என்றானது. அப்படி சுந்தரர் மீது சிவன் பிராது கொடுத்த இடம்தான் கொளஞ்சியப்பர் கோயில். அப்படி நம்முடைய பிராதுகளுக்கும் உடனடியாக கொளஞ்சியப்பர் செவி சாய்க்கிறார்”
“பாட்டி, ரூல்ட் பேப்பரில் எழுதணுமா இல்ல, அன்ரூல்ட் பேப்பரில் எழுதணுமா?” என சந்தேகம் கேட்டான் யுகன்.
“ரொம்ப அவசியமான சந்தேகம் பாரு! நீ எதை வெச்சும் எழுதலாம். இந்த கோயிலோட சிறப்பம்சமே பிராது கட்டுறது தான். உன் நியாயமான கோரிக்கைகளை பிராதா எழுதலாம். அப்படி எழுதிய பிராதுகளை இங்குள்ள முனியப்பர் சன்னதியில கட்டி விட்டு நிம்மதியா ஊருக்கு போகலாம். அப்படி பிராது செலுத்திய நாளில் இருந்து 90 நாளுக்குள் கோரிக்கை நிறைவேறுவதை கண்கூடாக பார்க்கலாம்.
வேண்டுதல் முடித்தவர்கள் சுவாமியிடம் செலுத்திய பிரார்த்தனையை திரும்ப பெறும் நடைமுறையும் இங்கிருக்கு. இங்க சுவாமி உள்ள இடமான மணவாளநல்லூரை தலைமை இடமாகக் கொண்டு கோரிக்கை வைத்த ஊரின் தொலைவைக் கணக்கிட்டு கி.மீ., ஒன்னுக்கு 25 பைசா கட்டணமும் சம்மன், தமுக்கு போட 20 ரூபாயும் செலுத்தணும். அதே போன்று கோரிக்கை நிறைவேறியவர்கள் பிராதை வாபஸ் வாங்க ஐம்பது ரூபாய் கொடுத்து பிராதை வாபஸ் வாங்கலாம்” உடனே தன் அலைபேசியை எடுத்த யுகன் ஆராய்ந்து விட்டு எதையோ கணக்கு போட்டான்.
“சென்னையில் இருந்து 230 கி.மீ., வருது பாட்டி. அப்ப தமுக்குக்கெல்லாம் சேர்த்து 78 ரூபாவ நாம கோயிலுக்கு செலுத்தினா போதும்”
“ம்... உடனே கணக்கு போட்டுட்டியா! அப்ப தேவந்தி யுகன் மீது இருக்குற பிராதையெல்லாம் எழுதி தயாரா வெச்சிடும்மா” பாட்டி இப்படிச் சொன்னதும் மூவரும் சேர்ந்து சிரித்தார்கள். துாக்கக் கலக்கத்தில் இருந்த அமுதன் ஒன்றும் புரியாமல் விழித்தான். அவனை கட்டி அணைத்துக் கொண்ட பாட்டி அப்படியே தொடர்ந்தார்.
“உருவம் இல்லாம அருவுருவ நிலையில் முருகன் அருள்புரியும் ஒரே தலம் இந்தக் கோயில் தான். இது சித்தர்களில் ஒருவரான பாம்பாட்டி சித்தரின் குருவான அகப்பை சித்தர் ஜீவசமாதி இங்குள்ளது. இங்கு முருகப்பெருமான் கேட்டதைத் தரும் வரப்பிரசாதியாக உள்ளார். அது மட்டுமில்ல நீதி வழங்குபவராகவும், வைத்தியராகவும் இருந்து நம்மை காக்கிறார். தீராத நோய் உள்ளவர்கள் இங்கு ஒரு மண்டலம் அல்லது அரை மண்டலம் என அவரவர் வசதிக்கேற்ப தங்கி கொளஞ்சியப்பரை தரிசித்து பிரசாதமாக தரப்படும் வேப்ப எண்ணெய்யை உடம்பில் பூசியும் அருந்தியும் பூரண குணமடைகிறாங்க”
“கோயில் எத்தனை மணி வரை திறந்திருக்கும் பாட்டி?”
“தினமும் காலை 6:30 மணி முதல் இரவு 8:00 மணி வரைக்கும் திறந்திருக்கும். அதோட இங்க தினம் நான்கு கால பூஜை நடக்கும். பவுர்ணமி, கார்த்திகை, சித்ரா பவுர்ணமி, வைகாசி விசாகம், கந்த சஷ்டி, ஆங்கிலப் புத்தாண்டு, தமிழ்ப்புத்தாண்டு, பங்குனி உத்திரம் என திருவிழாக்கள் நடந்துகிட்டே இருக்கும். பங்குனி உத்திரத்தின் போது நேர்த்திக்கடன் செலுத்த இங்கு ஏராளமான பக்தர்கள் வருவாங்க.”
“சரி சரி, எப்படியும் தேவந்தி எழுதிக் குவிக்கப் போற பிராதுகளை எல்லாம் ஒரு நாள் போய் திரும்ப வாங்க தான் போறோம். பங்குனி உத்திரத்தன்றே போய் வாங்கிட்டா போச்சு. என்ன தேவந்தி?” என ஆர்வமுடன் பார்த்தான் யுகன்.
--இன்னும் இனிக்கும்
பவித்ரா நந்தகுமார்
94430 06882