ADDED : ஜன 23, 2025 11:07 AM

குளித்தால் போதுமா...
திண்ணையில் இருந்த தாத்தாவைக் கண்டதும் ஓடி வந்தான் கந்தன். ''தாத்தா... இன்னிக்கு எங்க வீட்டுக்கு ஒரு அம்மா வந்தாங்க... நல்லா டிரஸ் பண்ணியிருந்தாங்க... 'என் மகளுக்கு கல்யாணம் வச்சிருக்கேன், ஏதாவது உதவி செய்யுங்கன்னு' என் அம்மாவிடம் கேட்டாங்க. எதுவும் கொடுக்காமல் அம்மா விரட்டி விட்டாங்க. ஏம்மா... இப்படி விரட்டுறீங்கன்னு கேட்டதற்கு, 'பார்த்தாலே தெரியுது பொய் சொல்ற பேர்வழி'ன்னு சொல்றாங்க. பகவான் கிருஷ்ணர், திருவள்ளுவர் இந்த மாதிரி மனிதர்களை பற்றி என்ன சொல்றாங்க'' எனக் கேட்டான் கந்தன்.
'பகவத் கீதையின் 16ம் அத்தியாயத்தின் முதல் அடியில் கிருஷ்ணர் சொல்கிறார்.
அப 4யம் ஸத்த்வஸம்ஸு ²த் ³தி 4ர்ஜ்ஞாநயோக ³வ்யவஸ்தி²தி: |
தா³நம் த³மஸ்²ச யஜ்ஞஸ்²ச ஸ்வாத் 4யாயஸ்தப ஆர்ஜவம் || 16- 1||
மனத்துாய்மை, பயமின்மை, ஞானம், மனஉறுதி, தர்மசிந்தனை, மன அடக்கம், நேர்மை கல்வி, தவம் இவை எல்லாம் தெய்வீகம் கொண்ட நல்லவர்களின் இயல்பு. இந்த நற்பண்புகள் இல்லாத கொடியவர்களிடம் இருந்து விலகி நில்லுங்கள்.
இதே போல 298வது திருக்குறளில்,
புறந்துாய்மை நீரான் அமையும் அகந்துாய்மை
வாய்மையால் காணப் படும்.
என்கிறார் திருவள்ளுவர்.
புறத்துாய்மை என்பது குளித்தால் வந்து விடும். ஆனால் உண்மையாக வாழ்ந்தால் மட்டுமே மனத்துாய்மை உண்டாகும். குளியலை அன்றாடம் அனைவரும் செய்யலாம். ஆனால் எண்ணம், சொல், செயலில் உண்மை இருக்கிறதா என்பதைக் கொண்டே ஒருவரின் மனத்துாய்மையை கண்டறிய முடியும். அகத்தின் அழகு முகத்தில் தெரியும். ஏமாற்றுவோரின் முகத்தை பார்த்தால் உண்மை புரிந்து விடும். கண்ணாடி போல மனதின் ஓட்டத்தை முகம் பிரதிபலிக்கும். அதனால் தான் உன்னோட அம்மா அவளை விரட்டினாங்க' என்றார் தாத்தா.
-அடுத்த வாரம் முற்றும்
எல்.ராதிகா
97894 50554