ADDED : ஜன 30, 2025 01:24 PM

தகுதி இருந்தால்...
அழுதபடியே தாத்தாவைத் தேடி வந்தான் கந்தன். 'என்னடா விஷயம்' எனக் கேட்டு கண்ணீரைத் துடைத்து குடிப்பதற்கு தண்ணீர் கொடுத்தார் தாத்தா.
'பிரச்னை என்ன' எனக் கேட்க, ''தாத்தா... வகுப்பில என்னோட பெஸ்ட் பிரண்ட் ரகு. நல்லா படிக்கும் அவனுக்கு பெற்றோர் கிடையாது. பாட்டி தான் அவனை வளர்க்கிறாங்க. பணம் இல்லாததால் பீஸ் கட்டலை. என் அம்மாவிடம் கேட்டேன்; தரவில்லை. அவனுக்கு எப்படி உதவி செய்யுறதுன்னு புரியலை'' என வருத்தப்பட்டான். 'இதுக்கு ஏண்டா கவலைப்படுற? உன் வீட்டின் நிலைமையை யோசித்து தானே அம்மாவால உதவி செய்ய முடியும்? தாத்தா இருக்கேன். நாளைக்கே ரகுவை அழைச்சிட்டு வா' என்றார்.
சம்மதித்த கந்தன், 'உதவி செய்வதைப் பற்றி பகவத்கீதை, திருக்குறளில் என்ன சொல்லியிருக்கு' எனக் கேட்டான்.
பகவத் கீதை 17வது அத்தியாயம் 20ம் ஸ்லோகத்தில்,
தா3த1வ்யமிதி1 யத்3தா3னம் தீ3யதே1னுப1கா1ரிணே |
தே3ஶே கா1லே ச1 பா1த்1ரே ச1 த1த்3தா3னம் ஸாத்1த்1விக1ம் ஸ்ம்ருத1ம் || 17.20
என்கிறார் பகவான் கிருஷ்ணர்.
இதன் பொருள், திருப்பி தர முடியாது எனத் தெரிந்தும், சரியான நேரத்தில் தகுதியானவருக்கு செய்யும் உதவி மிக உயர்ந்தது.
இதே போல திருவள்ளுவரும்,
இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே யுள - 223
'பணம் இல்லாமல் துன்பப்படும் ஒருவர் தன் நிலையைப் பற்றி சொல்லும் முன்பே, குறிப்பால் உணர்ந்து உதவுவது சான்றோரின் இயல்பு' என்றார் தாத்தா.
மகிழ்ச்சியுடன் கந்தனும் விடை பெற்றான். நாமும் விடை பெறுவோம். அத்துடன் பகவான் கிருஷ்ணரின் உபதேசத்தை பின்பற்றுவோம்.
-முற்றும்
எல்.ராதிகா
97894 50554
இந்த தொடரை புத்தகமாக பெற 1800 425 7700ல் தொடர்பு கொள்ளலாம்.