
நாரதரும், தும்புருவும் வீணை இசைப்பதில் வல்லவர்கள். இவர்களில் சிறந்தவர் யார் என்ற சர்ச்சை எழுந்தது. தீர்ப்பளிக்க தகுதியானவர் சிவபெருமானே என முடிவு செய்து கைலாயம் நோக்கி புறப்பட்டனர். வழியில் அடர்ந்த காடு ஒன்று குறுக்கிட்டது. அங்கிருந்து ''ஜெய் ஸ்ரீராம்! ஜெய் ஸ்ரீராம்!'' என்ற ராம நாமம் ஒலித்தது.
இருவரும் காட்டிற்குள் நுழைந்த போது, அங்கே பாறையின் மீது அமர்ந்தபடி ராமநாமத்தை ஜபித்துக் கொண்டிருந்தார் அனுமன். அவரை வணங்கிய போது, தங்களுக்குள் போட்டி ஏற்பட்டதையும், தீர்வு கேட்டு சிவனை சந்திக்க செல்வதையும் தெரிவித்தனர். ''சபாஷ் சரியான போட்டி! எனக்காக வீணை இசைப்பீர்களா?'' என அனுமன் கேட்க இருவரும் இசைத்துக் காட்டினர்.
''அருமையாக இசைக்கிறீர்கள்! நானும் ஒருமுறை இசைக்கிறேன்'' என வீணையை இசைத்தார் அனுமன்.உடனே அண்ட சராசரமே அவரின் இசையில் மயங்கியது.
நதியில் பாயும் நீர் கூட அசைவின்றி கிடந்தது. மரங்கள் அசையவில்லை. பறவைகள் சிறகை விரித்தபடி வானில் நின்றன. உலகமே ஸ்தம்பித்தது. அனுமன் அமர்ந்திருந்த பாறை உருகி வழியத் தொடங்கியது.
இதை பார்த்து நாரதரும் தும்புருவும் வெட்கம் அடைந்தனர். யார் சிறந்தவர் என நமக்குள் போட்டியிடுகிறோமே? கல்லையும் கரைய வைக்கிறதே அனுமனின் இசை! இவரல்லவா இசையில் வல்லவர். இத்தனை திறமை இருந்தும் அடக்கமுடன் இருக்கிறாரே என வருந்தினர்.
சிறிது நேரத்தில் அனுமன் இசைப்பதை நிறுத்தி வீணையை பாறையில் வைத்தார். உருகிய பாறை குழம்பில் வீணை ஒட்டிக் கொண்டது.
அப்போது அனுமன், ''முனிவர்களே! பாறையில் வீணை ஒட்டிக் கொண்டது. மீண்டும் இசைக்கத் தொடங்குங்கள். உங்களில் யார் இசைக்கும் போது பாறை உருகுகிறதோ அவரே சிறந்தவர். இதற்குப் போய் சிவனை ஏன் தொந்தரவு செய்கிறீர்கள்?'' என்றார் குறும்புடன்.
அனுமனின் பாதம் பணிந்த அவர்கள், ''சுவாமி... எங்களின் கர்வம் ஒழிந்தது. கல்லையும் கரைக்கும் திறமை எங்களுக்கு இல்லை'' என வணங்கினர். அனுமன் மீண்டும் இசைக்கத் தொடங்கியதும் பாறை இளகத் தொடங்கியது. வீணையை எடுத்த அனுமன். ''முனிவர்களே! 'எல்லாம் எனக்கு தெரியும்' என்ற கர்வம் நம்மை அழித்து விடும். அடக்கமே சிறந்தது'' என்றார்.
அனுமன் இசைக்கும் போது ஒவ்வொரு ஸ்வரத்திலும் ராம் ராம் என்னும் நாமம் கேட்கும். அப்போது எழும் நாதத்தில் ஸ்ரீராம பிரானே ஒன்றி விடுவார். அனுமனுக்கு பிடித்த ராகம் ஹனுமத்தோடி. கும்பகோணம் ராமசுவாமி கோயிலில் வீணை ஏந்திய கோலத்தில் அனுமனை தரிசிக்கலாம்.