ADDED : ஜூலை 11, 2025 08:03 AM

அச்சம் தவிர்
மூடநம்பிக்கை, ஜாதி பாகுபாடு, பெண்களுக்கு எதிரான வன்முறை, தீண்டாமைக்கு எதிராக 'ரௌத்திரம்(கோபம்) பழகு' என அன்றே சொன்னவர் மகாகவி பாரதியார். ஆத்திசூடியில் 'அச்சம் தவிர்' என சொன்னதில் இருந்தே அவருடைய கோபத்தை நாம் உணரலாம். நமக்கு இருக்க வேண்டிய குணமே தைரியம் தான்.
ஆபத்து வரப் போகிறது என நினைத்தாலே மனம் குறுகி விடும். இதையே, 'மனதை விரிவாக்கு - மனதின் விரிவே வாழ்வு; மனதின் குறுகல் மரணம்' என்கிறார் விவேகானந்தர்.
எதிரியான ஆங்கிலேயரை விட, பயத்துடன் வாழ்ந்த மக்கள் மீதே அதிகம் கோபப்பட்டார் பாரதியார்.
''நெஞ்சு பொறுக்குதில்லையே - இந்த
நிலை கெட்ட மனிதரை நினைந்து விட்டால்
அஞ்சி யஞ்சி சாவார் -இவர்
அஞ்சாத பொருளில்லை அவனியிலே
வஞ்சிப் பேய்கள் என்பார்- இந்த
மரத்தில் என்பார்; அந்த குளத்தில் என்பார்
துஞ்சுது முகட்டில் என்பார்- மிகத்
துயர்படுவார் எண்ணி பயப்படுவார்
சிப்பாயைக் கண்டஞ்சுவார்- ஊர்ச்
சேவகன் வருதல்கண்டு மனம் பதைப்பார்
துப்பாக்கி கொண்டோருவன் -வெகு
துாரத்தில் வரக் கண்டு வீட்டிலொளிப்பார்
அப்பாலெவனோ செல்வான்- அவன்
ஆடையைக் கண்டு பயந்தெழுந்து நிற்பார்
எப்போதும் கைத்தட்டுவார்- இவர்
யாரிடத்தும் பூனைகள் போலேங்கி நடப்பார்''
எதிரியை விட, வறுமையை விட
ஏன் விஷத்தை விட பயம் கொடியது.
பயம் என்பது நம் மனதின் ஓட்டம் மட்டுமே. விபரீத கற்பனையின் விளைவு இது. பயங்களின் கூடாரம்; தன்னம்பிக்கையின் சேதாரம். தோற்று விடுவோமோ என்ற பயத்தில் முயற்சிக்கான முதல் அடியை கூட நாம் எடுத்து வைப்பதில்லை. முதல் அடியை வைக்காவிட்டால் எப்போதும் பயணம் செல்ல முடியாது.
தோல்வியும், வெற்றியும் நாணயத்தின் இரு பக்கம். வெற்றியாளர்கள் நிச்சயம் தோல்வியை சந்தித்திருப்பார்கள். விழிப்புணர்வு வேறு; பயம் வேறு. தோல்வியைக் குறித்த விழிப்புணர்வு இருக்கலாம். அதுவே ஆளை விழுங்கும் பயமாக மாறக் கூடாது.
பயணத்தின் போது விபத்து நேராமல் இருக்க 'சீட் பெல்ட்' அணிவது எச்சரிக்கை உணர்வு. அதற்காக வாகனத்தை புறக்கணிப்பது கோழைத்தனம். இந்த வித்தியாசத்தை புரிந்து கொள்ள வேண்டும். அதனால் தான் பாரதியார்.
''உச்சிமீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பதில்லையே''
ஒரு மரமோ, கிளையோ, கட்டடமோ இடிந்து விழும் போது கொஞ்சம் சுதாரித்தால் காயத்துடன் தப்பலாம். ஆனால் வானமே இடிந்து விழுந்தால் தப்பிக்க வழி இல்லை. ஆனால் அப்படி வானமே விழுந்தாலும் அச்சம் (பயம்) கூடாது என்கிறார் பாரதியார்.
நரேந்திரன் என்ற மாணவன், ராமகிருஷ்ண பரமஹம்சரின் முதன்மைச் சீடன் ஆனான் என்பது மட்டுமல்ல; இந்தியப் பெருமையை உலகிற்கு கொண்டு சென்றதற்கு முதல் காரணம் அவரின் தைரியம் என்பதை நாம் அறிவோம்.
மகாபாரதப் போர் நடக்கப் போகிறது. எதிரில் இருக்கும் படைகளைப் பார்க்கிறான் அர்ஜுனன். மனம் குழம்புகிறது. பயத்துடன் அம்பு, வில்லை எறிந்து விட்டு தேரிலேயே அமர்ந்தான். கீதையின் முதல் அத்தியாயம் முழுவதும் அர்ஜுனனின் புலம்பல்கள்! இரண்டாம் அத்தியாயத்தில் பகவான் கிருஷ்ணர் அவனுக்கு பதில் சொல்கிறார்.
மனதில் உள்ள பீதி, கலக்கம் எல்லாம் மனிதனின் எதிரிகள். முடிவெடுத்த பின் கலங்குவது கோழைத்தனம். உலகமும் உன்னை கேலி செய்யும். எனவே பயத்தை கைவிட்டு கடமையைச் செய் என்கிறார் பகவான் கிருஷ்ணர்.
இளம்வயதில் இருந்தே நமக்கு பயமும் சேர்ந்து ஊட்டப்படுகிறது. இந்த பயமே கவலை, துக்கத்தை தருகிறது. இதை ஆழ்ந்து சிந்தித்தால் பயத்தில் இருந்து விடுபடும் வழிகளை நாம் அறியலாம்.
'கடவுள் எனது சிறந்த நண்பர்' என்ற புத்தகத்தில், ''கவலை, வலி, துக்கம், பயம் இவை யாவும் செயற்கையானவை. அதனால்தான் அவற்றில் இருந்து வெளியேற நாம் முயற்சி செய்கிறோம். இன்னும் சொல்லப் போனால் நாமே மகிழ்ச்சி, மகிழ்ச்சியே நாம். இதுதான் இயற்கை. இதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்'' என்கிறார் சுவாமி சுத்தானந்தா.
அரண்மனை வாழ்க்கையை துறந்து விட்டு காட்டில் தியானத்தில் ஆழ்ந்தார் மகாவீரர். அவரைக் கண்ட சிறுவன் ஒருவன், தன் மாடுகளை எல்லாம் பார்த்துக் கொள்வார் எனக் கருதி வேறொரு வேலையில் ஈடுபட்டான். சற்று நேரத்தில் அவன் திரும்பி வந்த போது மாடுகள் அங்கு இல்லை. கோபத்துடன் மகாவீரரைத் தாக்க முயற்சித்தான். அந்த நேரத்தில் மகாவீரரின் சகோதரர் நந்திவர்தன் அங்கு வரவே, அந்த சிறுவனை விரட்டினார். 'நேற்று வரை மன்னரான உன்னை நெருங்கும் துணிவு யாருக்கும் இல்லை. இன்றோ சாதாரண மனிதனாகி விட்டாய். நான் வேண்டுமானால் உன் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யட்டுமா' எனக் கேட்டார் நந்திவர்தன்.
அதற்கு மகாவீரர், 'பயம் இல்லாத ஒருவனே மற்றவருக்கு பாதுகாப்பு அளிக்க முடியும். பயம் என்பது நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்ளும் செயற்கை குணம்' என்றார். இருட்டில் இருக்கும் வரை கயிறா... பாம்பா என தெரியாமல் மனதில் பயம் குடியிருக்கும். ஒளி வந்த பிறகே 'உண்மை புரியும்' என்கிறார் ஆதிசங்கரர்.
புகழ் பெற்ற மருத்துவரான ஹிப்பாக்ரேடஸ் ஒருமுறை நண்பருடன் காரில் சென்று கொண்டிருந்தார். திடீரென வயிற்று வலியால் துடித்தார் நண்பர். 'எனக்கு ஏதாவது மாத்திரை கொடு' எனக் கேட்டார். 'மருந்து ஏதும் கைவசம் இல்லை' என்றார் மருத்துவர். திடீரென ஞாபகம் வந்தவராக, 'அற்புதமான வெளிநாட்டு மாத்திரை என்னிடம் இருக்கு. ரொம்ப காஸ்ட்லி. உன் கண்களை மூடி, வாயை மட்டும் திற. மாத்திரையை நாக்கில் வைக்கிறேன். நொடியில் வலி போய் விடும். அப்புறம் மாத்திரையை எடுத்துக் கொள்வேன். அதை கழுவி விட்டு மறுபடியும் பயன்படுத்தலாம்' என நண்பரின் நாக்கில் மாத்திரையை வைத்து அழுத்தினார். உடனே வலி மறைந்தது.
'உண்மையிலேயே அற்புதமான மருத்துவன் நீ தான்' என சந்தோஷப்பட்டார் நண்பர். அந்த மாத்திரையை பார்க்க ஆசைப்பட்ட போது, 'இதோ... காட்டுகிறேன்' என்றார் மருத்துவர். அது அவருடைய சட்டை பட்டன்!
சட்டை பட்டனைத் தான் சத்தான மாத்திரை எனச் சொல்லி கொடுத்தார் மருத்துவர். உண்மையிலேயே மாத்திரை என்ன செய்யுமோ அதை இந்த பட்டனும் செய்தது! இதை மருத்துவ உலகில் 'ப்ளேசிபோ எபக்ட்' (Placebo Effect) என்பர்.
தண்ணீர் குறித்த பயம், நீச்சல் கற்பதற்கு துாண்டுதலாக இருக்க வேண்டுமே தவிர தண்ணீரைக் கண்டால் ஓடும் மனநிலையை ஏற்படுத்தக் கூடாது. அதாவது பயம் நமக்கு அதைத் தாண்டிச் செல்லும் தகுதிக்கான துாண்டுதலாக இருக்க வேண்டும். அதைக் கண்டு விலகி ஓடும் நிலையை ஏற்படுத்தக் கூடாது.
பயஉணர்வு மனிதனை தினமும் கொன்று கொண்டே இருக்கும். விபத்தில் ஏற்படும் இறப்பை விட, விபத்து ஏற்படப் போகிறதே என்ற பீதியில் இறப்பவர் அதிகம். அதனால் தான் எமனை நோக்கி,
'காலா! உனை நான் சிறு புல்லென மதிக்கிறேன்
எந்தன் காலருகே வாடா! சற்றே உனை மிதிக்கிறேன்'
எனப் பாடினார் பாரதியார்.
வாழ்க்கை என்பது பயந்தாங்கொள்ளிகளின் கையில் பதக்கங்களைத் திணிப்பதில்லை. பயத்தைத் தவிர்த்து மனதை உறுதியாக்கி வாழ்க்கை பயணத்தை நேர்வழியில் நடத்தினால் இந்த மண்ணிலேயே விண்ணைக் காணலாம் என்கிறார் பாரதியார்.
--ஆத்திசூடி தொடரும்
முனைவர் தென்காசி கணேசன்
94447 94010