ADDED : ஜூலை 11, 2025 08:07 AM

நரசிம்மருக்கு உகந்த பானகம்
பக்தர்களுக்கு கேட்டதை உடனடியாகக் கொடுக்கக் கூடியவர் நரசிம்மர். 'நாளை என்பது நரசிம்மனிடம் இல்லை' என்பார்கள். இரணியனை வதம் செய்வதற்காக சிங்கத்தலையும் மனிதஉடலும் கொண்டு அவதரித்தவர் இவர்.
நரசிம்மருக்கு உகந்த நைவேத்தியம் பானகம். இரணியாட்சனை அழித்த பின்பும் நரசிம்மர் உக்கிரம் தணியாமல் இருந்தார். அவரைக் குளிர்விக்க பானகம் நைவேத்தியமாகப் படைக்கப்படுகிறது.
வராக அவதாரம் எடுத்து தன் தம்பி இரணியாட்சனை மகாவிஷ்ணு வதம் செய்த செய்தியை அறிந்த இரணியன் கோபம் கொண்டான். 'மகாவிஷ்ணுவே என் முதல் எதிரி; அதனால் கொல்லாமல் விடமாட்டேன்' என சபதம் செய்தான். சாகா வரம் பெற பிரம்மாவை நினைத்து தவம் செய்தான்.அதைக் கண்டு மகிழ்ந்த பிரம்மா காட்சியளித்து, “ என்ன வரம் வேண்டும்?” எனக் கேட்க “மூவுலகத்தையும் ஆளும் சக்தி வேண்டும். சாகா வரம் வேண்டும்” எனக் கேட்டான்.
“மரணம் என்பது எல்லா உயிர்களுக்கும் உண்டு. என்னால் தர முடிந்த வரத்தைக் கேள்”இரணியன் யோசித்தான். பின்னர் நுட்பமான ஒரு வரத்தைக் கேட்டான்.
“பிரம்மதேவனே... தங்களால் படைக்கப்பட்ட மனிதர்கள், விலங்குகள் போன்ற உயிரினங்களால் மரணம் நிகழக் கூடாது. தேவர்களாலும் மரணம் நிகழக் கூடாது. விண்ணிலும் மண்ணிலும் மரணம் நிகழக் கூடாது. பகலிலோ, இரவிலோ, மாளிகையின் உள்ளேயோ, வெளிப்புறத்திலோ மரணம் நிகழக் கூடாது. எந்த ஒரு ஆயுதத்தாலும் மரணம் வரக்கூடாது” எனக் கேட்க பிரம்மாவும் அதற்கு சம்மதித்தார். மகாவிஷ்ணுவின் எதிரியான இரணியனின் மகன் பிரகலாதன் சிறந்த பக்தனாக இருந்தான்.
நாராயண நாமத்தையே மந்திரமாக உச்சரிப்பவன். “பிரகலாதா... நாராயணன் நமக்கு பரமஎதிரி. ஆகையால் அவனது பெயரை நீ உச்சரிக்கக் கூடாது” என மகனுக்கு அறிவுறுத்தினான். ஆனால் மகனோ, “நாராயணனே முழுமுதற்கடவுள்” என தந்தையிடம் தெரிவித்தான்.
“எங்கும் நிறைந்த பரம்பொருளான நாராயணனை வழிபட்டால் உங்களுக்கு மோட்சம் கிடைக்கும். அவரை எதிரியாக நினைப்பதை விட்டு விடுங்கள்” என அடிக்கடி நினைவுபடுத்தினான். இரணியன் கோபத்துடன் “உன்னுடைய நாராயணன் எங்கும் நிறைந்திருக்கிறானா” எனக் கேட்டான். “ஆம் தந்தையே. எங்கும் நிறைந்திருப்பவன். துாணிலும் இருப்பான்; சிறு துரும்பிலும் இருப்பான்” என்றான்.
இரணியன் அக்கணமே தன் கதாயுதத்தை எடுத்து அங்கிருந்த ஒரு துாணை அடிக்க அது இரண்டாகப் பிளந்தது. அதற்குள் இருந்து சிங்கமுகமும், மனிதஉடலும் கொண்டு நாராயணன் அவதாரம் செய்தார். அது அந்தி சாயும் நேரம். பகலும் அல்ல இரவும் அல்ல. நரசிங்கப்பெருமாள் இரணியனைத் துாக்கி நிலைப்படியில் அமர்ந்து தன் மடி மீது கிடத்தினார். தனது கூரிய நகத்தால் அவனைப் பிளந்து ரத்தத்தைக் குடித்தார். இரணியன் மாண்டான்.
அவன் பெற்ற வரத்தின்படியே மனித உடலும் அல்லாமல் விலங்கு உடலும் அல்லாமல் இரண்டும் சேர்ந்த ஒரு உருவத்தில் அவதரித்து பகலும் அல்லாமல் இரவும் அல்லாமல் அந்திசாயும் நேரத்தைத் தேர்ந்தெடுத்து மாளிகைக்கு உள்ளேயும் அல்லாமல் வெளியேயும் அல்லாமல் நிலைப்படியில் அமர்ந்து அவன் உயிரைக் குடித்தார். இரணியன் விரும்பியபடியே அவனது மரணம் நிகழ்ந்தது.
நரசிம்மர் இரணியனின் வயிற்றைக் கிழித்து குடலை மாலையாக அணிந்து கொண்டார். பின்னர் பயங்கரமாக கர்ஜனை செய்தவாறே இரணியனின் சிம்மாசனத்தில் அமர்ந்தார். அவருடைய கண்களை யாராலும் நேருக்கு நேராகப் பார்க்க இயலவில்லை. கண்களில் உக்கிரம் தகித்துக் கொண்டிருந்தது. அவருடைய கோபம் அடங்கியபாடில்லை.
பானகம் இனிப்பும், புளிப்பும் கலந்த சுவையுடைய ஒரு பிரசாதம். ஆயுர்வேத மருத்துவத்தில் பானகம் “பானக கல்பனா” என அழைக்கப்படுகிறது. குடித்தவுடன் உடலுக்கு உடனடி சக்தியைத் தரக்கூடிய சக்தி மிக்க பிரசாதம் பானகம். கோடை வெப்பம், வெயிலின் தாக்கத்தில் இருந்து நம்மைக் காப்பாற்றும் புத்துணர்ச்சி தரும் பானம். புதன், சனிக்கிழமைகளில் நரசிம்மருக்கு துளசி மாலை சாற்றி பானகத்தை நைவேத்தியம் செய்து மனதார வழிபட்டால் நன்மை கிடைக்கும்.
ஆந்திர மாநிலத்தில் உள்ள பல கோயில்களில் ஸ்ரீராமநவமி அன்று ஸ்ரீராமர் ஸ்ரீசீதாதேவியின் திருமணத்தைக் கொண்டாடும் கல்யாணோத்ஸவம் நடைபெறும். அன்றைய நாளில் ராமபிரானுக்கு பானகம் சமர்ப்பிப்பது வழக்கம்.
ஆந்திர மாநிலம் மங்களகிரி மலை மீது பானக நரசிம்மர் குடைவரைக் கோயில் உள்ளது. பானக நரசிம்மர் கோயிலில் பெரிய பாறையைக் குடைந்து உருவாக்கப்பட்ட கருவறையில் சிலாமூர்த்தம் இல்லாமல் உட்சுவரில் நரசிம்மரின் முகம் மட்டும் வாய் திறந்த நிலையில் இருக்கும். இத்தலத்தில் நரசிம்மருக்கு பானக நைவேத்தியம் மிக விசேஷம். பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப ஒரு குடம் அல்லது அரை குடம் என கோயிலில் சொல்லி தயாரித்து நைவேத்தியம் செய்வர். இதில் ஆச்சரியம் என்னவென்றால் நைவேத்தியம் செய்யும் பானகத்தை ஒரு சங்கினால் நரசிம்மரின் வாயில் விட குடிப்பது போல் 'களக்... களக்” என்ற சப்தத்துடன் பானகம் உள்ளே செல்லும். எவ்வளவு நைவேத்தியம் செய்கிறோமோ அதில் பாதிதான் உள்ளே இறங்கும். மற்ற பாதி வழியத் தொடங்கி விடும். மீதியை பானகத்தை சமர்ப்பிக்கும் பக்தரிடம் பிரசாதமாக தந்து விடுவார்கள். ஆந்திர மாநிலத்தில் விஜயவாடாவில் இருந்து குண்டூர் செல்லும் வழியில் 26 கி.மீ., தொலைவில் உள்ளது மங்களகிரி.
தேவையானவை
பொடித்த வெல்லம் - 1 கப்
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய்த் துாள் - ½ டீஸ்பூன்
சுக்குத் துாள் - ½ டீஸ்பூன்
தண்ணீர் - 4 கப்
செய்முறை
வெல்லத்தை தண்ணீரில் அரைமணி நேரம் ஊற வைக்க வேண்டும். வெல்லம் நன்றாக கரைந்ததும் அதை வடிகட்டிக் கொள்ள வேண்டும். வடிகட்டிய வெல்ல நீரில் எலுமிச்சை சாறு, ஏலக்காய்த் துாள், சுக்குத் துாளைச் சேர்த்து கலக்கவும். இப்போது நரசிம்மருக்கு பிடித்த பானகம் தயார்.
-பிரசாதம் தொடரும்
ஆர்.வி.பதி