தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/பாரதியாரின் ஆத்திசூடி - 4

பாரதியாரின் ஆத்திசூடி - 4

பாரதியாரின் ஆத்திசூடி - 4


ADDED : ஜூலை 25, 2025 07:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 25, 2025 07:55 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வையத் தலைமை கொள்

வீட்டுத் தலைமையே எத்தனை சிரமமானது என்பதை நாம் அறிவோம். இதில் வையத் தலைமை அதாவது உலகிற்கே தலைமை வகிப்பது பற்றி பாரதியார் குறிப்பிடுவது அதிகம் அல்லவா? எனத் தோன்றலாம். வீதித் தலைமை, ஊர்த் தலைமை, மாவட்டத் தலைமை, மாநிலத் தலைமை என மேலே செல்லச் செல்ல அதை அடைபவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வரும். இப்படி இருக்க, வையத் தலைமைக்கு ஆசைப்பட முடியுமா எனக் கேட்கலாம். அதனால்தான் புதிய ஆத்திசூடியிலேயே பாரதியார் சொல்கிறார் 'பெரிதினும் பெரிது கேள்'.

உலகப் பார்வை என்பது தமிழ் மரபு, தமிழர் இயல்பு. உலகைக் குறிக்கத்தான் தமிழில் எத்தனை சொற்கள் உள்ளன. வையம், உலகம், ஞாலம், அவனி, புவி, பூமி, குவலயம். உலகத்தைச் சுட்டி அல்லது வாழ்த்தித் தொடங்கும் இலக்கியங்கள் பல உள்ளன.

“அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு” எனத் தொடங்குகிறது திருக்குறள்.

“உலகம் உவப்ப வலனேர்பு திரிதரு

பலர் புகழ் ஞாயிறு கடல் கண்டாஅங்கு”

என திருமுருகாற்றுப்படையும்,

“உலகம் யாவையும் தாமுள வாக்கலும்”

என கம்பராமாயணமும்,

“உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்”

என சேக்கிழாரின் பெரிய புராணமும் தொடங்குகிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் வரவேற்பு வாசலில் புறநானுாறு பாடலில் கணியன் பூங்குன்றனார் எழுதிய 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்னும் பாடலைத் தேர்ந்தெடுத்து அங்கே பொறித்துள்ளனர். இந்தத் தமிழ் மரபில் நின்று உலகப் பார்வை பெற்ற பாரதியார் 'வையத் தலைமை கொள்' எனச் சொல்வது இயல்பு தானே.

கண்ணதாசன் யார் தலைவன் என்பதை,

ஊருக்கென்று வாழ்ந்த நெஞ்சம் சிலைகள்

ஆகலாம் உறவுக்கென்று விரிந்த உள்ளம்

மலர்கள் ஆகலாம் யாருக்கென்று

அழுதபோதும் தலைவன் ஆகலாம்

எனப் பாடுகிறார்.

தலைவனின் பண்புகளை அற்புதமாகக் கூறுகிறார் வாலி. கருணை இருந்தால் வள்ளல் ஆகலாம்

கடமை இருந்தால் வீரன் ஆகலாம்

பொறுமை இருந்தால் மனிதன் ஆகலாம்

மூன்றும் இருந்தால் தலைவன் ஆகலாம்

எவ்வளவு அற்புதமான வரிகள் இவை.

ராமாயணத்தில் இடம்பெறும் ஒவ்வொரு நிகழ்வும் அறமும், வாழ்க்கை நெறியும் கற்றுத் தரும் அற்புத பாடங்கள். அந்த வகையில் தாடகை வதம் என்ற சம்பவம், தலைவனின் பார்வையில் “Delegation” (பணியளிப்பு) என்ற நவீன நுட்பத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டது.

மாமுனிவர் விஸ்வாமித்திரர், உலக நலனுக்காக யாகம் நடத்த திட்டமிடுகிறார். அரக்கி தாடகை, காட்டில் அச்சத்தை ஏற்படுத்தி யாகத்தை தடுக்கிறாள். விஸ்வாமித்திரருக்கு தாடகையை அழிக்க சக்தி இருந்தும், அதற்காக தன் தவவலிமையை பயன்படுத்தக் கூடாது என்ற தெளிவு இருந்தது. ஏனெனில், அந்த சக்தி தவிர்க்க முடியாத முக்கிய செயல்களுக்கு தேவைப்படக் கூடும்.

இதுவே ஒரு மேலாளரின் புரிதல் - முக்கிய செயல்களை செய்ய தன்னை முழுமையாக ஒதுக்கிக் கொள்ள வேண்டும், மற்ற வேலைகளை தகுதியான நபர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

அதனால்தான், ராமனை உதவியாளராக அழைத்து தாடகையை அழிக்கச் செய்கிறார். ராமனுக்கு அது ஒரு புதிய அனுபவமாக இருந்தாலும், விஸ்வாமித்திரர் தேவையான பயிற்சியும், ஆன்மிக ஒளியும் அளித்து, அவரை அந்த பணிக்கு தயாராக்குகிறார். ராமனும் திறமையால் பணியை வெற்றிகரமாக நிறைவேற்றுகிறார். இதன் மூலம், விஸ்வாமித்திரர் தனது முக்கிய நோக்கங்களில் கவனம் செலுத்த முடிகிறது.

இது நவீன மேலாண்மையில் காணப்படும் பணியளிப்பு என்ற முக்கியத்துவமிக்க கருத்தைக் கூறுகிறது. இங்கே

விஸ்வாமித்திரர் - மேலாளர்

ராமன் - ஊழியர்

தாடகையை அழித்தல் - செயல்பாட்டு பணி

யாகம் - முக்கிய நோக்கம்.

நல்ல தலைவன் தன்னை முக்கிய செயல்களுக்கே ஒதுக்கிக் கொண்டு, பிற செயல்களை நம்பகத்தன்மை கொண்டவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதற்கான நேரடி உதாரணம் இந்த சம்பவம்.

மகாகவி, வல்லமை வேண்டும் எனக் கேட்கும் போதும் அது எதற்கு வேண்டும் என்னும் தெளிவான கோரிக்கை 'வல்லமை தாராயோ? இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே' பாட்டுத் திறன் வேண்டும் எனக் கேட்கும் போதும் அது எதற்கு என்ற தெளிவான நோக்கம்: “என்றன் பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திட வேணும்”

இதுவே உண்மைத் தலைமையின் வெளிப்பாடு.

இப்போது “வையத் தலைமை கொள்” என்ற வார்த்தைக்கு அர்த்தம் புரியும். எந்தத் துறையில் இருந்தாலும் அந்தத் துறையில் வல்லமை பெற்றால் “வையத் தலைமை” கொண்டவர் என பொருள். எந்தத் துறையை கையில் எடுத்தாலும் அதில் ஈடுபாடு கொண்டால் உச்சத்தை தொடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். அது ஒவ்வொருவரிடத்திலும் இருக்கிறது.

இந்தியாவின் மாபெரும் தலைவர்கள் போதித்ததை விட, அதிகமாக செயலில் காட்டியுள்ளனர். இன்று பெரிதும் பேசப்படும் தலைமைப் பண்பு குணாதிசயங்கள் அனைத்தும் அவர்களின் வாழ்வில் இயற்கையாகவே வெளிப்பட்டுள்ளன. ஆதிசங்கரர், ராமானுஜர் தொடங்கி, விவேகானந்தர், அரவிந்தர், திலகர், வ.உ.சிதம்பரனார், நேதாஜி, படேல் என அந்தப் பட்டியல் நீள்கிறது.

விடுதலைப் போராளியான வ.வே.சு.அய்யர், செண்பகராமன் பிள்ளை போன்றோர் நம்மை, அடிமைப்படுத்திய ஆங்கிலேயன் நாட்டிற்கும், மற்ற நாடுகளுக்கும் சென்று அவர்களை நிலை குலைய வைத்ததற்குக் காரணம் அவர்களின் தலைமைப் பண்பே.

விடுதலை வேள்வி சமயத்திலேயே ஆங்கில அரசை அதிர வைத்த பாரதியார், ஆயுதம் செய்வோம் எனக் கூறிவிட்டு, நல்ல காகிதம் செய்வோம் என்கிறார். இரண்டுக்கும் என்ன தொடர்பு?

தொழிற்சாலை ஒருபுறம் பத்திரிகை ஒருபுறம். இயந்திரங்கள் தயாரித்து இயந்திரத்தனமாகவே வாழ்க்கை மாறாமல் இருக்க வாசிப்பும், புத்தகங்களும் தேவை என்பதைத்தான் பாரதியார் கூறுகிறார். தலைமைப் பண்பு என்பது இப்படி விரிந்த நோக்கமாக இருக்க வேண்டும்.

அப்படித் தலைமைப் பண்புகள் கொண்ட பலர் இருந்திருக்கிறார்கள் - இருக்கிறார்கள். இந்தத் தலைமைப் பண்பு இல்லாமல் தன்னலம், ஆணவம், நான் என்ற எண்ணம் கொண்டவர்கள் வீழ்ந்த கதைகள் உலகளவில் தொடர்ந்து வருவதை நாம் பார்க்கிறோம்.

ராவணன், சூரபத்மன், துரியோதனன் போன்றோர் புராண உதாரணங்கள். ஹிட்லர், முசோலினி, ஸ்டாலின், 14ஆம் லுாயி போன்றோர் வரலாற்று உதாரணங்கள். துடிப்பாகவும் முனைப்பாகவும் செயல்பட்டு அனைத்து சாதக பாதகங்களை ஆராய்ந்து தீர்க்கமாக முடிவு எடுப்பவருக்கே இந்த வையம் மகுடம் சூட்டி அழகு பார்க்கும். அடுத்தவர்களுக்காக உழைத்தால் அது சேவகம்; நம் உள்ளுணர்வுக்காகப் பணியாற்றினால் மட்டுமே அது உழைப்பு.

நமக்காக உழைக்கிறோம் என்ற ஈடுபாட்டுடன் செயலாற்றுபவரே தலைமைப் பொறுப்பை அலங்கரிக்க முடியும் என்பதே யதார்த்தம். தலைமைப் பண்பு மட்டுமே ஒரு சமுதாய முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும். சரியான தலைமை அமைந்தால் ஒழிய ஒரு கூட்டமோ, குழுவோ, அமைப்போ, சமுதாயமோ எதுவும் வெற்றி பெற இயலாது.

ஆற்றலை உணர வைக்கும் தன்மை நல்ல தலைமைக்கு உண்டு. வாய்ப்புகளை உருவாக்க வேண்டும். இன்று சாத்தியக் கூறுகள் அதிகம். வாய்ப்புகள் விரிந்து கிடக்கின்றன. வானமே எல்லை. வானத்திற்கு எல்லையே இல்லை. எந்தத் துறைக்குச் சென்றாலும் முத்திரை பதிக்கலாம்.

எழில்மிகு இந்தியா ஏற்றமிகு நடைபோட இளைய தலைமுறை தலைமையேற்பது ஒன்றே சரியான வழியென பாரதியார் அறிவுறுத்துகிறார் 'வையத் தலைமை கொள்' என்று. நல்ல தலைமைப் பண்புகள் ஒருவனைத் தலைவனாக்கும். முண்டாசுக் கவிஞர் மொழிந்த வண்ணம் வருவது வரட்டும்; நாம் வையத் தலைமை கொள்வோம்.



-ஆத்திசூடி தொடரும்

முனைவர் தென்காசி கணேசன்

94447 94010

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us