sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

பாரதியாரின் ஆத்திசூடி - 6

/

பாரதியாரின் ஆத்திசூடி - 6

பாரதியாரின் ஆத்திசூடி - 6

பாரதியாரின் ஆத்திசூடி - 6


ADDED : ஆக 07, 2025 02:00 PM

Google News

ADDED : ஆக 07, 2025 02:00 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நேர்படப் பேசு

பேசுவது ஒரு கலை என்றால் பேசாதிருப்பது இன்னொரு கலை. எப்படி பேசுவது, என்ன பேசுவது என்பதெல்லாம் சாதாரண விஷயம் அல்ல. காரணம், ஒருவர் வாயில் இருந்து வரும் வார்த்தைகள் அவரின் வாழ்வையே மாற்றி விடும். ஒரு வார்த்தை வெல்லும் - ஒரு வார்த்தை கொல்லும் என்பார்கள். இரண்டு வயதுக்குள் நாம் பேசக் கற்கிறோம். ஆனால் எத்தனை வயதானாலும், எப்படி பேச வேண்டும் என்பதை யாரும் கற்பதில்லை.

தகவல் தொடர்பின் மிக முக்கிய காரணியாகத் தான், 'நேர்படப் பேசு' என்கிறார் பாரதியார். பேசும் வார்த்தைகள் நேர்மை, நேர்மறை சிந்தனையுடன் இருந்தால்தான் வாழ்வும் நேராகும் என்பதே அவரின் எண்ணம்.

உள்ளதை, உள்ளபடி பேசுவதே சரி என்றாலும், பிறர் மனதைக் காயப்படுத்தும் படி பேசக் கூடாது.

எழுத்தாளரும், பேச்சாளருமான தீபம் நா.பார்த்தசாரதி எப்போதும் நேர்மை, நேர்மறை எண்ணத்துடன் வாழ்ந்தவர். ஒருமுறை தன் உதவியாளரிடம், 'என்னப்பா எழுதி இருக்கிறாய்? உனக்குச் சாவே வராதா எனக் கூறியவர் அடுத்த நிமிடம் தவறை உணர்ந்து மவுனமாகி விட்டார். அவர் சொல்ல நினைத்த விஷயம் இதுதான் - 'உனக்கு 'ச' என்ற எழுத்து சரியாக எழுத வராதா? 'க' வைப் போலவே சுழித்து விடுகிறாயே' என்றுதான். பிறகு உதவியாளரிடம் உண்மையை எடுத்துச் சொன்னார். எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும், பேச்சில் கவனம் வேண்டும் என்பதற்கு இது உதாரணம்.

உள்ளத்தில் உண்மை உண்டாயின்

வாக்கினில் ஒளி உண்டாகும்

என்கிறார் பாரதியார்.

சீவாளியை வாயில் வைத்து வெறுமனே ஊதினால் சத்தம்தான் கேட்கும். நாபிக் கமலத்தில் இருந்து எழுந்து வரும் சத்தமே நாதஸ்வர இசையாக தெய்வீகத்துடன் வெளிவரும். அதே போல் தான் உள்ளிருந்து வரும் வார்த்தைகளும். அதற்கு போலிப் பூச்சு கிடையாது. பணம், பதவி, புகழுக்காகப் பிறரைப் பாராட்டுவது, தன்னைத் தானே புகழ்ந்து கொள்வது இவை எல்லாம் பாரதியாரின் வார்த்தைக்கு நேர் எதிரானது. இந்த வார்த்தைகள் ஒட்ட வைத்த மீசை போலத்தான். எப்போது கீழே விழும் எனத் தெரியாது.

கண்ணதாசனும்

ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்

உள்ளத்தில் உள்ளது அமைதி

என்றும்,

ஆசை கோபம் களவு கொண்டவன்

பேசத் தெரிந்த மிருகம்

அன்பு நன்றி கருணை கொண்டவன்

மனித வடிவில் தெய்வம்

என்றும் பாடுகிறார்.

அறத்தின் அடிப்படையில், நேர்மையின் பிரதிபலிப்பாக வார்த்தைகள் வெளி வரும்போது, பேசுபவர்களுக்கு மட்டுமல்ல, அந்த வார்த்தைகளுக்கே மதிப்பு கூடுகிறது. மகாபாரதத்தில், வியாசர், விதுரர் கூறும் வார்த்தைகள் அனைத்தும் நேர்படப் பேசுவதற்கு உதாரணங்கள். அதேபோல யட்சப் பிரச்னத்தில், தர்மர் சொல்லும் பதில்களும் இப்படி இருப்பதால்தான், யட்சன் மனம் மகிழ்ந்து வரம் தருகிறான்.

பாரதியார் பாடிய முரசு கவிதையில்,

ஊருக்கு நல்லது சொல்வேன்

எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்

யாரும் பணிந்திடும் தெய்வம்

பொருள் யாவினும் நின்றிடும் தெய்வம்

பாருக்குள்ளே தெய்வம் ஒன்று

இதில் பற்பல சண்டைகள் வேண்டாம்

அன்பென்று கொட்டு முரசே

மக்கள் அத்தனை பேரும் நிகராம்

வயிற்றுக்குச் சோறிட வேண்டும் - இங்கு

வாழும் மனிதருக்கெல்லாம்

பயிற்றிப் பல கல்வி தந்து - இந்தப்

பாரை உயர்த்திட வேண்டும்

என்று யதார்த்தமான உண்மையை, வார்த்தைகளின் நேர்மையை எடுத்துரைக்கிறார்.

நேர்படப் பேசும்போது, மனதில் எழுகின்ற வார்த்தைகளை எல்லாம் கொட்டித் தீர்த்தால் நண்பர்களும் எதிரியாக மாறுவர். வரலாற்றிலேயே எத்தனை உதாரணங்கள். சீதை, லட்சுமணனனைப் பார்த்து கேட்ட வார்த்தைகள், திரவுபதி கர்ணனை கேட்டது இதற்கெல்லாம் பதில்கள் அப்போதே கிடைக்கின்றன. இந்த இதிகாசங்கள் தான் சனாதன தர்மத்தை, அதாவது வாழ்வியல் முறைகளை நமக்குக் கற்றுத் தருகின்றன.

நேர்முகத் தேர்வுக்கு, தான் தேர்வாகவில்லை என்பதால், கல்கத்தாவில் (கோல்கட்டா) மனம் வெறுத்துப் போய் அமர்ந்திருந்த மாணவனை அழைத்து, நேர்மறை எண்ணங்களை அவன் மனதில் நிலைநிறுத்தி வாழ்வைத் தொடர வைத்த சுவாமி சிவானந்தரால் தான், ஒரு அப்துல் கலாம் வெளிவர முடிந்தது. சுவாமி சிவானந்தர் நேர்படப் பேசி, அந்த இளைஞனுக்கு புரிய வைத்தார்.

சில நேரங்களில் உண்மையை நேருக்கு நேர் சொல்லும் போது சிலருக்கு வருத்தம் ஏற்படலாம். அப்போது வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும். ஆதிசங்கரரின் 'பிரச்நோத்தர ரத்னமாலிகா' கூறும் பதில்கள் பாரதியாரின் வரிகளுக்கு உதாரணம்.

சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மஹாஸ்வாமிகள் கூறும் போது, நேர்படவே பேச வேண்டும், ஆனால் வார்த்தைகளில் கவனம் வேண்டும் என்பார். கம்பு அல்லது தார்க்குச்சியைக் காட்டினால் மாடு தெறித்து ஓடும். ஆனால் புல்லைக் காட்டினால் நம்மை நாடி வரும். அது போல நம் வார்த்தைகள் பிறரைக் காயப்படுத்தாமல் இருக்க வேண்டும் என்பார்.

சாப்பிட்டு விட்டுப் போ என்றாலும், தின்னுப்புட்டுப் போ என்றாலும் பொருள் ஒன்று தான். நான் நேர்படத்தான் பேசுகிறேன் என இரண்டாவது சொற்றொடரைக் கூறுவது எப்படி நியாயமாகும்?. இதையே கந்தர் அனுபூதியில் அருணகிரிநாதர், சும்மா இரு; சொல் அறஎன்கிறார். 'சும்மா இரு' என்று சொன்னாலே போதும். ஆனால் 'எதுவும் பேசாதே' என மீண்டும் அழுத்தமாக சொல்வதன் காரணம், நேர்படப் பேசுதலில் இருக்க வேண்டிய கவனம் தான்.

பாரதியார் நடிப்புச் சுதேசிகளைச் சாடும் போது,

நெஞ்சில் உரமும் இன்றி

நேர்மைத் திறமும் இன்றி

வஞ்சனை செய்வாரடி கிளியே

வாய்ச் சொல்லில் வீரரடி

உப்பென்றும் சீனி என்றும்

உள்நாட்டுச் சேலை என்றும்

செப்பித் திரிவாரடி கிளியே

செய்வதறியாரடி

என மனம் வெறுத்துப் பாடுகிறார்.

புதுச்சேரியில் கடற்கரையில் பாரதியார், வ.வே.சு., அய்யர், வ. ரா., மூவரும் காற்று வாங்கி கொண்டிருந்தனர். வ.வே.சு., அய்யரின் நண்பரான திருச்சி வழக்கறிஞர் ஒருவர் அங்கு வந்து அமர்ந்தார். பாரதியார் ஒரு பாடலை பாடி முடித்த போது,

வ.வே.சு., அய்யரை நோக்கி அந்த வழக்கறிஞர், ''ஏன் சார்... உங்க டிலக் இப்போ எங்கே இருக்கார்'' எனக் கேட்டார்.

'டிலக்' என்ற வார்த்தையைக் கேட்டதும் பாரதியாருக்கு கண்களில் கோபம் கொப்பளித்தது. ''ஏண்டா நீ தமிழனா... இல்லை வெள்ளைக்காரனா! என்னடா டிலக்! திலகர் எனச் சொல்ல நாக்கு கூசுகிறதா'' என பொரிந்து விட்டார். இதுதான் நேர்படப் பேசுவது என்பது. இந்த நிகழ்வை வ.ரா., எழுதிய 'மகாகவி பாரதி' என்னும் நுாலில் பதிவு செய்துள்ளார்.

மூதறிஞர் ராஜாஜி, தீரர் சத்தியமூர்த்தி, லால் பகதுார் சாஸ்திரி, மொராஜி தேசாய் போன்ற தலைவர்கள் நேர்மைக்கு உதாரணம் மட்டுமல்ல, நேர்படப் பேசுவதற்கும் உதாரணமாக வாழ்ந்தனர். ராஜாஜி முதல்வராக இருந்த போது, அவரிடம் சிலர் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் லஞ்சம் வாங்குகிறார் என்றும், அவரை உடனடியாக வேறு மாவட்டத்திற்கு மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

ராஜாஜி சிரித்தபடி, ''அந்த அதிகாரியை இன்னொரு மாவட்டத்திற்கு மாற்றினால் லஞ்சம் ஒழியுமா... அங்கு போய் அதைத் தானே தொடர்வார். எனவே அவரின் முறையற்ற செயல்பாடு பற்றிய ஆதாரங்களை கொடுங்கள். பணிமாற்றல் என்ன... அவரைப் பணியை விட்டே நீக்குகிறேன்'' என்றார்.

இதுதான் நேர்படப் பேசு என்ற வார்த்தைக்கு சரியான உதாரணம். இந்த மாதிரி நிகழ்வு தமிழகத்தில் ஒரு தமிழரால் தான் நடந்திருக்கிறது என்பது இன்றைய தலைமுறை அறிய வேண்டும். பாரதியார் கூறி இருக்கும் விழுமியங்களை பின்பற்றுவதே நாம் செய்யும் நன்றிக்கடனாகும்.



-ஆத்திசூடி தொடரும்

முனைவர் தென்காசி கணேசன்

94447 94010






      Dinamalar
      Follow us