ADDED : ஆக 07, 2025 02:00 PM

உளியால் செதுக்கும் போது கேட்கும் ஒலியை வைத்தே சிற்பிகள் கல்லின் தன்மையை கணிப்பர். ஆண் கல், பெண் கல், இரண்டும் அல்லாத கல் என கற்களை மூன்றாக பிரிப்பர். ஆண் தெய்வத்தை வடிக்க வேண்டிய கல்லில் பெண் தெய்வத்தையோ, பெண் தெய்வத்தை வடிக்க வேண்டிய கல்லில் ஆண் தெய்வத்தையோ மாற்றி வடிக்க முடியாது.
சிற்பி ஒருவர் சிலை வடிப்பதற்காக குறிப்பிட்ட கல்லைத் தேர்ந்தெடுத்தார். அதை மஹாபெரியவரிடம் காட்டி ஆசி பெற்ற பின் பணியில் ஈடுபட விரும்பினார். இதற்காக காஞ்சிபுரத்திற்கு சென்ற போது மஹாபெரியவர், 'இந்த கல் சிலை செய்வதற்கு பயன்படாது' என்றார்.
'சுவாமிகள் மறுப்பது ஏன்' என யோசித்தார் சிற்பி.
''சில பாறைக்குள் தவளை இனத்தைச் சேர்ந்த தேரை இருக்கும். இதை 'கல்லுக்குள் தேரை' என்பார்கள். தேரை இருக்கும் கல்லில் தெய்வங்களுக்கு சிலை வடிக்கக் கூடாது'' என விளக்கியதோடு கல்லை உளியால் உடைக்கச் சொன்னார் காஞ்சி மஹாபெரியவர்.
உளியால் உடைத்த போது, அதில் இருந்த தேரை ஒன்று வெளியே தாவியது. அதைக் கண்டதும் அங்கிருந்த பக்தர்கள் பிரமித்தனர். இதைப் போலவே இன்னொரு சம்பவமும் நடந்தது. டில்லி உத்தர சுவாமிமலையில் முருகன் கோயில் கட்டுவதற்கு ஏற்பாடானது.
மூலவர் முருகன் சிலைக்கான கல் இருக்கும் இடத்தை காஞ்சி மஹாபெரியவரே அடையாளம் காட்ட, அதன்படி தாமிரபரணி ஆற்றில் கல் எடுக்கப்பட்டது. அது சிலை செய்வதற்கு ஏற்றது தானா என உளியால் தட்டி பார்த்தார் சிற்பி.
ஒலியைக் கேட்ட போது பெண் கல்லாக இருக்குமோ என சந்தேகம் வந்தது. தன் எண்ணத்தை மஹாபெரியவரிடம் தெரிவிக்க காஞ்சிபுரம் சென்றார். சுவாமிகளோ, 'கவலை வேண்டாம். சிலை செய்யும் பணியில் தைரியமாக ஈடுபடு. முருகனருள் முன் நிற்கும்' என ஆசி கொடுத்தார். அதன்படியே முருகன் சிலை செய்யப்பட்டு கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்
* பூஜைக்கு பயன்படுத்திய பூவை மீண்டும் பயன்படுத்த வேண்டாம்.
* பெண் தெய்வத்திற்கு கருப்பு நிற ஆடையை சாத்தக்கூடாது.
* சாப்பிடும் போது காலணி அணியாதீர்கள்.
* நோயின்றி வாழ பகலில் துாங்க வேண்டாம்.
உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்
அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!
- நாராயணீயம்
எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.
பி.சுவாமிநாதன்
swami1964@gmail.com

