sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

பாரதியாரின் ஆத்திசூடி - 10

/

பாரதியாரின் ஆத்திசூடி - 10

பாரதியாரின் ஆத்திசூடி - 10

பாரதியாரின் ஆத்திசூடி - 10


ADDED : செப் 05, 2025 07:39 AM

Google News

ADDED : செப் 05, 2025 07:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஞாயிறு போற்று

பாரதியார் அறத்தை மட்டும் பாடவில்லை; வாழ்வின் தரத்தையும் படைப்புகளில் தந்திருக்கிறார். இயற்கையை கடவுளாக வணங்குவது நம் மரபு. பொங்கல் உள்பட நம் பண்டிகை அனைத்தும் இயற்கையோடு ஒட்டி கொண்டாடுவது தான்.

வேதங்கள், இலக்கியங்கள் எல்லாம் வாழ்வியல் முறைகளை அப்படித்தான் நமக்கு கற்றுத் தருகிறது. சூரிய நமஸ்காரம், ஆதித்ய ஹ்ருதயம் இவை ஞாயிறின் வழிபாடே. அந்த மந்திரங்கள் எல்லாம் வெறுமனே பக்திக்காக மட்டுமல்ல; உடல், உணர்வுகளை நேர்மறையான எண்ணத்துடன் வாழ வைக்கும் வாழ்வியல் நெறிமுறை கொண்டவை.

இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில், ' ஞாயிறு போற்றுதும்! ஞாயிறு போற்றுதும்' என பாடுகிறார்.

ஞாயிறு பற்றி பாரதியார் வசன கவிதை உள்பட பல படைப்புகளில்,

ஞாயிற்றின் உயிர் தெய்வம்

ஞாயிற்றின் புகழ் பேசுதல் நன்று

ஞாயிறே உன்னைப் புகழ்கின்றோம்

ஞாயிற்றை வீடுகளை விண்மீன்களை

புகழ்கின்றோம்

ஞாயிறு திங்கள் வானத்து சுடர்கள்

எல்லாம் தெய்வங்கள்

ஞாயிறு மிக சிறந்த தேவன்

அவன் கைபட்டால் எல்லாம் நல்லதாகும்

ஞாயிறு உன்னைப் போற்றுகிறேன்

ஞாயிறு நீ தான் தெய்வம்

ஞாயிற்றின் புகழ் பேசுதல் நன்று

என்றெல்லாம் பாடி

இருக்கிறார்.

இவ்வுலகம் இயங்குவதற்கு ஆதாரமாக விளங்கக் கூடியவர் சூரியக்கடவுள். நவகிரகங்களின் தலைவனாக விளங்கக் கூடியதால் சூரிய பகவானை ராஜ கிரகம் என்று அழைக்கிறார்கள். ஆதிசங்கரரால் முறைப்படுத்தப்பட்ட ஆறு சமயங்களில் சூரியனை முழு முதற் கடவுளாக கொண்டு வழிபடும் சமயத்திற்கு சவுர சமயம் என்று பெயர். சூரியனை, சிவனோடு ஒப்பிட்டு சிவ சூரியன் என்றும், விஷ்ணுவுடன் ஒப்பிட்டு சூரிய நாராயணர் என்றும் புராணங்கள் குறிப்பிடுகின்றன இயற்கையை குறிப்பாக சூரியனை வழிபடும் முறை கற்காலம் தொட்டே வழக்கத்தில் இருந்து வருகிறது. சூரிய சக்தி என்பது நம் உடல் இயக்கத்திற்கு மட்டுமின்றி, பூமியின் இயக்கத்திற்கும் மிக முக்கியமானதாகும். அதனால் சூரியனை வணங்கிய பின் உடற்பயிற்சியை துவக்கும் முறை ஏற்படுத்தப்பட்டது.

சூரிய மந்திரங்களைச் சொல்லி சூரியனை வழிபட்டால் பலவித நன்மை ஏற்படும். சூரிய நமஸ்காரம் செய்வது உடல், மனதிற்கு மிக நல்லது. சூரிய நமஸ்காரத்திற்கு உரிய மந்திரங்கள் சொல்லி வணங்கினால் காலை, மாலை நேர சூரிய ஒளி வைட்டமின் 'D'யை உற்பத்தி செய்ய உதவும் என்கிறது அறிவியல்.

உடலில் உள்ள 12 பாகங்கள் சீராக இயங்க துவங்கும். 12 ஆசனங்கள் கொண்ட சூரிய நமஸ்காரம் உடற்பயிற்சி, யோகாசன பயிற்சியின் அடிப்படையாக சொல்லப்படுவதாகும். போருக்கு செல்லும் முன் அகத்தியர், சகோதரர்களான ராமர், லட்சுமணருக்கும் ஆதித்ய ஹ்ருதய மந்திரங்களைக் கூறி வெற்றிக்கு வழிகாட்டினார் என்கிறது வரலாறு.

காயத்ரி மந்திரம் என்பதே எந்த மதம், இனம், மக்கள் என்றில்லாமல் அனைவருக்கும் உரிய மந்திரமாகும். அதன் பொருளைப் பார்த்தால் இந்த உண்மை புரியும். இந்த மந்திரம் குரு மந்திரம், மகாமந்திரம் எனப் போற்றப்படுவது. ராஜரிஷி விஸ்வாமித்திரரால் வழங்கப்பட்டது,

மந்திரங்களின் தாய் என்ற பெருமை கொண்டது. பகவத்கீதையில் கிருஷ்ணர் 'மந்திரங்களில் நான் காயத்ரி மந்திரம்' என குறிப்பிட்டுள்ளார். மனிதகுலம் முழுமைக்கும் சொந்தமான இந்த மந்திரம் சக்தியைக் குறித்து வியந்து பாடப்பட்டது. ரிக் வேதத்தின் மூன்றாவது மண்டலத்தின் பாடலாக உள்ள இந்த மந்திரத்தை 'சாவித்ரி மந்திரம்' என்றும் சொல்வர்.

மனித குலத்திற்கு கடவுள் அளித்த மந்திரம் இது.

''ஓம் பூர்: புவ: ஸுவ:

தத் ஸவிதுர் வரேண்யம்

பர்கோ தேவஸ்ய தீமஹி

தியோ: யோந: ப்ரசோதயாத்''

மூன்று உலகங்களையும் படைத்த ஒளி பொருந்திய, வணக்கத்திற்குரிய சக்தியை தியானிக்கிறோம். மேலான உண்மையை உணர அந்த பரம்பொருள் எங்களின் அறிவை மேம்படுத்தட்டும் என்பது பொருள். இதை ஜபிப்பவர்கள் அதிக பிராண சக்தியைப் பெற்று நீண்ட ஆயுளுடன் வாழ்வர் என்கிறது வேதம்.

பாரதியார் அவரது ஆன்மிக குருவான குள்ளச் சாமியார் (திருக்கோவிலுார் ஞானானந்தகிரி சுவாமிகள் என்பார்கள்) பெருமையைப் பற்றி சொல்லும் போது, ''ஞாயிறைச் சங்கிலியால் அளக்கலாமோ, ஞானகுருவின் புகழை நாம் வகுக்கலாமோ?'' என குறிப்பிடுகிறார்.

அதாவது, சூரியனைப் போன்ற பெரிய விஷயங்களை சிறுகருவி கொண்டு அளக்க முடியாது, அதுபோல ஞானகுருவின் புகழை நாம் வகுத்துச் சொல்லவோ, வரையறுக்கவோ முடியாது என்கிறான். ஞாயிறு என்பதே சுறுசுறுப்பு, உற்சாகத்தை தானே குறிக்கிறது.

காலை எழும் போதே, அந்த முனைப்பு அனைவரிடமும் இருக்கவேண்டும் என்பதற்காகவே '' ஞாயிறு போற்று'' என பாடியுள்ளார். ஞாயிறைப் போற்றும் பாரதியார், சூரியன் தினமும் காலையில் உதிப்பது போல 'இன்று புதிதாய் பிறந்தோம்' என்ற உணர்வுடன் ஒவ்வொரு நாளையும் தொடங்கவேண்டும் என்கிறார்.

சென்றதினி மீளாது; மூடரே நீர்

எப்போதும் சென்றதையே சிந்தை செய்து

கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து

குமையாதீர்; சென்றதனைக் குறித்தல் வேண்டா;

இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நெஞ்சில்

எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு

தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;

படிக்காமல் விட்ட பாடம், வாங்காமல் விட்ட சொத்து, செய்த தவறு, பட்ட அவமானம், அனுபவித்த துன்பம், என்றோ எப்போதோ நடந்து விட்ட தவறுகள் என்று பழசை நினைத்தே நிகழ்காலத்தை வீணாக்குகிறோம்.

இனிமையான இளமைக் காலங்கள், அனுபவித்த சுகங்கள், கிடைத்த பாராட்டுகள், பட்டங்கள், பதவி உயர்வுகள், அதிகாரங்கள் என அவற்றை நினைத்து அசை போட்டுக் கொண்டே நிகழ்காலத்தை வீணடிக்கிறோம்.

சொல்லிக் கொடுத்தவை, படித்தவை, நாம் நமக்குச் சொல்லிக் கொண்ட அனுபவப் பாடங்கள் எல்லாம் நமக்கும் உண்மைக்கும் நடுவே நிற்கின்றன. நல்லதோ, கெட்டதோ போனது மீண்டும் வராது. இறந்த காலத்தை முற்றும் மறந்து இன்று புதியதாய் பிறந்தோம்; வாழ்வு இன்று முதல் தொடங்குகிறது என எண்ணத் தொடங்குவோம்.

பழைய குப்பைகளை துாக்கி வீசுவோம். பிறந்த குழந்தைக்கு எதிர்காலம் மட்டும் தான் உண்டு; அதற்கு இறந்த காலம் என்பது இல்லை. குழந்தைக்கு எல்லாமே புதிது... இந்த உலகமே புதிது... மனிதர்கள், உறவுகள், பொருள்கள், சப்தங்கள், காட்சிகள் என எல்லாம் புதிது. அது போல புத்துணர்வுடன் உண்டு, விளையாடி, இன்பமாக இருப்போம்.

புதிய தொடக்கம்

புதிய வேலை, படிப்பு அல்லது வாழ்க்கைப் பாதை தொடங்கும் போது, 'இன்று புதிதாய் பிறந்தோம்' என சொல்லி உற்சாகப்படுத்தலாம்.

மனஅழுத்தத்தில் இருந்து மீள

மன அழுத்தம் அல்லது சோகத்தில் இருந்து மீண்டு வரும்போது, 'இன்று புதிதாய் பிறந்தோம்' எனச் சொல்லி மகிழலாம்.

புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கை

வாழ்வில் நம்பிக்கையை இழந்து விட்ட ஒருவருக்கு, ''இன்று புதிதாய் பிறந்தோம்'' என்று சொல்லி நம்பிக்கை ஊட்டலாம்.

ஒரு புதிய பயணம்

புதிய பயணம் அல்லது அனுபவத்தை தொடங்கும் போது, ''இன்று புதிதாய் பிறந்தோம்'' எனச் சொல்லி ஆரம்பிக்கலாம்.

சுருங்கச் சொன்னால் ஒரு புதிய தொடக்கம், நம்பிக்கை, புதுப்பித்தலையும் குறிக்கும் அழகான சொற்றொடர் இதுவாகும்.

காலை எழுந்தவுடன் ஞாயிறை வணங்கி வாழ்வைத் தொடங்கினால் வாழ்வு சிறக்கும் என்பதே எட்டயபுரத்துக் கவிஞரின் தீர்க்கமான சிந்தனை.

-ஆத்திசூடி தொடரும்

முனைவர் தென்காசி கணேசன்

94447 94010






      Dinamalar
      Follow us