ADDED : செப் 05, 2025 07:43 AM

சபரிமலை ஐயப்பன் - அரவணை
கேரளத்தில் மேற்கு தொடர்ச்சி மலைத் தொடரில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ளது புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயில். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருந்து சபரிமலை ஐயப்பனை வழிபடுகிறார்கள். ஐயப்பனை வழிபட்டு சபரிமலையில் இருந்து திரும்பும் போது பக்தர்கள் வாங்கி வரும் தெய்வீகப் பிரசாதம் அரவணை. இதைச் செய்ய சிவப்பு அரிசி அதாவது கேரளாவில் பயன்படுத்தப்படும் மட்டை அரிசி எனப்படும் அரிசியை பயன்படுத்துகின்றனர்.
மகிஷாசுரனின் தங்கை மகிஷி. இவள் தன் சகோதரனின் அழிவிற்கு தேவர்களே காரணம் என எண்ணி அவர்களை அழிக்க முடிவு செய்தாள். இதற்காக சாகாவரம் பெற விரும்பிய அவள், பிரம்மாவை நோக்கி தவம் செய்கிறாள். சிவனுக்கும் மகாவிஷ்ணுவிற்கும் பிறக்கும் புத்திரனால் மட்டுமே தனக்கு மரணம் நேர வேண்டும் என வரம் பெற்றாள்.
சாகாவரம் பெற்ற மகிழ்ச்சியில் வானுலக தேவர்களை கொடுமைபடுத்தத் தொடங்கினாள். மகிஷியின் கொடுமை தாங்காமல் சிவபெருமானிடம் அவர்கள் முறையிட்டனர். மகாவிஷ்ணுவின் அம்சமான மோகினியின் மூலமாக பம்பா நதிக்கரையில் ஐயப்பன் அவதரித்தார். காட்டில் வேட்டையாட வந்த பந்தள அரசன் ராஜசேகரன் குழந்தையைக் கண்டு குழந்தை பாக்கியம் இல்லாத தனக்கு கடவுள் கொடுத்த பரிசு என முடிவு செய்தார்.
குழந்தையை மகாராணியிடம் ஒப்படைத்து மகிழ்ந்தார். குழந்தையின் கழுத்தில் மணி இருந்ததால் 'மணிகண்டன்' என பெயர் சூட்டினர். இதன் பின் மகாராணி கருவுற்று ஆண் குழந்தையை பெற்றாள். அக்குழந்தைக்கு 'ராஜராஜன்' எனப் பெயர் சூட்டினர்.
அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்திருக்க பந்தள மன்னரின் அமைச்சர் மட்டும் கவலையில் ஆழ்ந்தார். ராஜாவுக்கு வாரிசு இல்லாமல் இருந்தால் அவருக்குப் பின் தானே நாட்டின் மன்னராக வேண்டும் என திட்டம் தீட்டியிருந்தார்.
இச்சமயத்தில் மணிகண்டனின் வருகை அவருக்கு கவலையை ஏற்படுத்தியது. பந்தள மகாராஜா மணிகண்டனுக்கு முடி சூட்ட விரும்பி அதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். மணிகண்டனை அழிக்க அமைச்சர் பல முயற்சிகளில் ஈடுபட்டார். ஆனால் மணிகண்டனை ஏதும் செய்ய முடியவில்லை.
அமைச்சர் கடைசி முயற்சியாக மகாராணியை சந்தித்து “தங்களுக்குப் பிறந்த மகன்தானே முறைப்படி நாடாள வேண்டும். அப்படியிருக்க மணிகண்டனுக்கு முடிசூட்டுவது முறையல்ல” எனக் கூறினார். இதைக் கேட்ட மகாராணியும் குழப்பமடைந்து, அமைச்சரின் சூழ்ச்சிக்குக் கட்டுப்பட்டாள். அதற்கு அமைச்சர் “தாங்கள் நோய்வாய்ப்பட்டது போல நடிக்க வேண்டும். தங்களின் நோயைத் தீர்க்கும் மருந்து புலிப்பால் என அரண்மனை வைத்தியர்கள் மூலம் நான் சொல்ல வைக்கிறேன். புலிப்பாலைக் கொண்டு வர மணிகண்டனை காட்டிற்கு அனுப்பி அங்கே அவனைக் கொல்வோம்” என திட்டம் தீட்டினார். தான் பெற்றெடுத்த மகனின் மீது கொண்ட பாசத்தின் காரணமாக அமைச்சரின் திட்டத்திற்கு மகாராணியும் சம்மதித்தாள். கடுமையாக தலை வலிப்பதாகக் மகாராணி கூற அமைச்சரின் துாண்டுதலால் வைத்தியர் புலிப்பால் கொண்டு வந்தால் மகாராணி குணம் அடைவார் எனத் தெரிவித்தார்.
சூழ்ச்சி என்று அறிந்தும் மணிகண்டன் புலிப்பாலுக்காக காட்டிற்குச் செல்கிறார். அங்கு பொன்னம்பலமேட்டில் பூஜை செய்து மணிகண்டனை சந்தித்த தேவர்கள் தங்களை அரக்கியான மகிஷியிடம் இருந்து காப்பாற்றுமாறு வேண்டினர். மணிகண்டனும் அரக்கியைக் கொன்று தேவர்களை காப்பாற்றினார்.
சிவனின் அருளால் தேவேந்திரன் உள்ளிட்ட தேவர்கள் அனைவரும் ஆண், பெண் புலிகளாக உருமாறினர். பெண்புலியாக வந்த தேவேந்திரனின் மீது மணிகண்டன் ஏறி அமர்ந்தான். பிற புலிகள் புடைசூழ அரண்மனையை வந்தடைந்தார். புலியின் மீது அமர்ந்து மணிகண்டன் வருவதைக் கண்டனர். அவரது அருட்சக்தியை உணர்ந்து ராணியும், அமைச்சரும் மன்னிப்பு கோரினர். பந்தள மன்னராக பதவியேற்க மறுத்த மணிகண்டன் 'சுவாமி ஐயப்பனாக' சபரிமலையில் தவக்கோலத்தில் எழுந்தருளினார்.
ஒரு மண்டலம் விரதம் (41 நாட்கள்) இருந்து இருமுடியைச் சுமந்தபடி பதினெட்டு படிகள் ஏறிச் சென்று ஐயப்பனை தரிசித்தால் மட்டுமே பலன் கிடைக்கும். ஐயப்பன் மகிஷியை வதம் செய்ய வில், வாள், பரிசை, குந்தம், ஈட்டி, கைவாள், முள்தடி, முசலம், கதை, அங்குசம், பாசம், பிந்திப்பாலம், வேல், கடுநிலை, பாஸம், சக்கரம், பரிகம், சரிகை முதலான 18 வகையான ஆயுதங்களைப் பயன்படுத்தினார்.
18 ஆயுதங்களும்
18 படிகளாக அமையப் பெற்றதாகச் சொல்வர். இரவில் கோயிலின் நடை சாத்தப்படும் முன்பு ஹரிவராசனம் என்ற பாடல் இசைக்கப்படுகிறது.
மண்டல பூஜை நாட்களிலும் (நவ. 15 - டிச. 26), மகர விளக்கு (ஜன. 14 - மகர சங்கராந்தி), சித்திரை விஷு (ஏப். 14), மலையாள மாதத்தின் முதல் ஐந்து நாட்கள் மட்டும் நடை திறக்கப்படும்.
தேவையான பொருள்
சிவப்பு அரிசி (மட்டை அரிசி) - 200 கி
பொடித்த வெல்லம் - 300 கி
ஏலக்காய்த் துாள் - சிறிதளவு
பச்சைக் கற்பூரம் - சிறிதளவு
தேங்காய்த் துண்டு - 1 கப்
நெய் - 100 கி
செய்முறைசிவப்பு பச்சரியை நன்றாகக் கழுவி அடி கனமான பாத்திரத்தில் கழுவிய அரிசியை இட்டு அதில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து உதிரியாக வேக வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி பொடித்த வெல்லம் கரைந்து பாகுபதம் வந்ததும் ஏற்கனவே வேக வைத்த சாதத்தை அதில் சேர்த்துக் கிளற வேண்டும். அப்போது நெய்யை சிறிது சிறிதாக ஊற்றிக் கிளற வேண்டும்.
தேங்காய்த் துண்டுகளை நெய்யில் வறுத்து சேர்த்து, ஏலக்காய்த் துாள், பச்சைக் கற்பூரத்தை துாவி இறக்கி வைக்க வேண்டும். பத்து நிமிடம் ஆற விட்டதும் அரவணை கெட்டியான பதத்திற்கு வரும். இப்போது சபரிமலை ஐயப்பனுக்கு உகந்த அரவணை தயாராகிவிட்டது.
-பிரசாதம் தொடரும்
ஆர்.வி.பதி