ADDED : செப் 11, 2025 01:44 PM

படித்ததை பின்பற்று
மனிதனைச் சமுதாயத்தோடு இணைக்கும் பாலம் கல்வி. மெய், வாய், கண், மூக்கு, காது ஆகியவை அறிவின் வாசல்கள். அவை வழியாக எல்லா விஷயங்களையும் அறிந்து கொள்ள கல்வி உதவுகிறது. இதுவே கற்றல் அனுபவம். இது உணர்ச்சியை அடக்கி வளர்ச்சிக்கு உதவுகிறது.
'அறிவு அற்றம் காக்கும் கருவி' என்கிறார் திருவள்ளுவர். அறிவு என்பது அழிவைத் தடுக்கும் கருவி மட்டுமல்ல; யாராலும் அழிக்க முடியாத கோட்டை.
விநாயகர் நான்மணி மாலையில்,
கேட்கா வரத்தைக் கேட்க நான் துணிந்தேன்
மண் மீதுள்ள மக்கள் பறவைகள்
விலங்குகள் பூச்சிகள் புற்பூண்டு மரங்கள்
யாவுமென் வினையால் இடும்பைத் தீர்ந்தே
இன்பமுற்று அன்புடன் இணங்கி வாழ்ந்திடவே
செய்தல் வேண்டும்
என பாரதியார் வேண்டுகிறார். இதில் அனைவரும் இன்பமாக வாழ கல்வியைக் கற்பதோடு அதை பின்பற்றி நடக்க வேண்டும் என்றும் சொல்கிறார். வேதங்கள், இலக்கியங்கள் எல்லாம் கல்வியின் பெருமையை முன்பே சொல்லி உள்ளன.
அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்
ஆலயம் பதினாயிரம் நாட்டல்
பின்னருள்ள தருமங்கள் யாவும்
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்
அன்ன யாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்
என்கிறார்.
கோயில் கட்டுதல், அன்ன தானம் செய்தல் உள்ளிட்ட எல்லா தர்மங்களை விட புண்ணியம் தருவது எது தெரியுமா எனக் கேள்வி கேட்டு அதற்கு விடையையும் சொல்கிறார். ஏழை ஒருவருக்கு கல்விக்கண்ணை திறப்பதே எல்லா தர்மங்களிலும் சிறந்தது எனப் பாரதியார் பாடுகிறார்.
'சொல் விற்பனமும் அவதானமும்
கவி சொல்லவல்ல
நல்வித்தையும் தந்து அடிமை கொள்வாய்'
'சகலகலாவல்லி மாலை' பாடலில் கல்வியின் வளம் யாவையும் சரஸ்வதியிடம் கேட்டு விட்டு, என்னை அடிமை கொள்வாய் என புலவர் குமரகுருபரர் வேண்டுகிறார்.
கற்றல் பெரிதல்ல. அதன்படி நிற்றல் என்பதுதான் சவால். அதனால் தான் திருவள்ளுவர்,
கற்க கசடறக் கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
எனச் சொன்னார். அதை இரண்டே சொல்லில், 'கற்றது ஒழுகு'( படித்ததை பின்பற்று) என்கிறார் பாரதியார்.
கற்றபடி நிற்பது இருக்கட்டும் - கற்றவுடனேயே பலருக்கும் 'வித்யா கர்வம்' (படிப்பால் வரும் ஆணவம்) தலையில் ஏறி விடுவதைப் பார்க்கிறோம். மற்றவருக்கு மதிப்பு தராமல், மற்றவரிடம் தவறு இருப்பதைக் கண்டுபிடித்து தான் கூறுவதே சரி என பலர் இருக்கிறார்கள்.
இதில் இன்னொரு விஷயம், கல்வி அறிவு இல்லாத பலரும், பதவி, பணம், அதிகாரத்தால் அகங்காரத்துடன் இருப்பதை பார்க்கிறோம். அதனால் தான் வித்தையும், வினயமும் சேர்ந்து இருக்க வேண்டும் என்கிறது சனாதனம். (வித்தை - கல்வி, வினயம் - பணிவு) கல்வி பற்றி பாடும் போது பாரதியார்,
கம்பன் என்றொரு மானிடன் வாழ்ந்ததும்,
காளி தாசன் கவிதை புனைந்ததும்
சேரன் தம்பி சிலம்பை இசைத்ததும்,
தெய்வ வள்ளுவன் வான்மறை செய்ததும்
என்கிறார்.
'கல்வி எல்லாம் சரஸ்வதி அளித்தது' என்கிறார் கம்பர். 'யாதுமாகி நின்றாய் காளி' என்று பாரதியார் கூறியதைப் போல, மகாகவி காளிதாசர் தன் திறமையை மகாகாளிக்கு சமர்ப்பணம் செய்கிறார்.
காளிதாசர் மீது சபையில் இருந்த மற்ற கவிஞர்கள் பொறாமை கொண்டனர். மன்னருக்கு காளிதாசனின் புலமை தெரியும். ஒருமுறை பாடலின் கடைசி அடியை (ஈற்றடி) தந்து, கவிதை எழுதச் சொன்னார் மன்னர்.
அந்த பாடல் அடி -
டடன் டடண்டன் டடன் டடண்டன் டன்டா.
எல்லா கவிஞர்களும், 'யாராலும் எழுத முடியாது' என்று கூற காளிதாசன் மட்டும் அடக்கத்துடன் எழுதிய பாடல் அவரது புலமையை மட்டுமல்ல, கர்வமின்மையையும் காட்டுகிறது.
ராஜ்யாபிஷேக எனத் தொடங்கும் அந்த வடமொழி ஸ்லோகத்தின் பொருள் -
இளவரசனுக்கு பட்டாபிஷேகம்
நடக்க இருந்த போது
இளம் யுவதி தங்கக்குடத்தில்
தண்ணீர் எடுத்து வர
படி தடுக்கி தங்கக் குடம்
படிகளில் உருண்டு விழுந்த சத்தம்
டடன்ட டண்டன் டடன்ட டண்டன் டன்டா
என்று பாடினார். மன்னர் உட்பட மற்ற புலவர்கள் காளிதாசரை வணங்கினர்.
கற்றபடி நிற்றல் என்பது அனைவரையும் மதித்து, சமுதாயத்திற்கு பயன்படும்படி வாழ்தல். அப்படி, கல்வி கற்றும் ஒழுக்கம், அடக்கம் இல்லாதவர்கள் தேவையில்லை என்பதை
உற்றாரை யான் வேண்டேன்,
ஊர் வேண்டேன், பேர் வேண்டேன்,
கற்றாரை யான் வேண்டேன்,
கற்பனவும் இனி அமையும்,
குற்றாலத்து அமர்ந்து உறையும் கூத்தா
என பாடுகிறார் மாணிக்கவாசகர்.
இன்னும் ஒருபடி மேலே போய்,
கரவாகிய கல்வி உளார் கடை சென்று
இரவா வகை மெய்ப்பொருள் ஈகுவையோ
என கந்தரனுபூதியில் முருகப்பெருமானிடம் வேண்டுகிறார் அருணகிரிநாதர். அதாவது கல்வி கற்றும் அதன்படி நடக்காதவரிடம் போய் மண்டியிட்டு நிற்காமல் இருக்க அருள்புரிய வேண்டும் என்கிறார்.
கல்வி ஏற ஏற கனிவும், கருணையும், பணிவும் அதிகமாக வேண்டும். எதிர்வாதம் செய்ய இருந்த தத்துவவாதி மண்டன மிஸ்ரரிடம் கூட பணிவுடன் நடந்தார் ஆதிசங்கரர்.
நாதஸ்வரம் என்றாலே திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை என பெயர் பெற்ற அந்த வித்வானுக்கு 'நாதஸ்வர சக்கரவர்த்தி' என்ற விருது வழங்க ஏற்பாடானது. அதை ஏற்க மறுத்ததுடன் சொன்ன பதில் தான் அடக்கத்திற்கு உதாரணம்.
''நாட்டியத்திற்கும் மற்ற எல்லாக் கலைகளுக்கும் அதிபதியான சிவனை 'நடராஜா' என அழைக்கும் போது, ராஜாவுக்கும் உயர்ந்த சக்கரவர்த்தியா நான்... என்றார். இதுதான் கல்வி தரும் அடக்கம்.
''கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு சொல் வேறு பட்டார் தொடர்பு'' என்று கூறி, இப்படிப்பட்டவர்களுடன் தொடர்பு கொள்வது கனவில் கூட துன்பத்தை தரும் என்கிறார் திருவள்ளுவர்.
சொல்லுக்கும் செயலுக்கும் முரண்பாடு இல்லாத வாழ்வே 'கற்றபடி வாழ்தல்' என்கிறார் பாரதியார்.
கல்வி என்பது கற்றபடி நின்று, சமுதாயத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்பதுதான் மகாகவி பாரதியாரின் ஆசை.
வயிற்றுக்குச் சோறிடவேண்டும் - இங்கு
வாழும் மனிதருக்கு எல்லாம்;
பயிற்றிப் பல கல்வி தந்து - இந்தப்
பாரை உயர்த்திட வேண்டும்
என இதைப் பாடுகிறார் பாரதியார்.
பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவி வழங்க முன்னாள் பிரதமர் இந்திரா நினைத்த போது, 'இந்தப் பதவியை பெறுவதற்கு என்னை விட படித்தவர்கள், தகுதி உடையவர்கள் பலர் இருக்கிறார்கள். அதனால் எனக்கு வேண்டாம்' என மறுத்தார். இதுவே கல்வி தரும் அடக்கம்.
மூதறிஞர் ராஜாஜி, முன்னாள் ஜனாதிபதிகள் ராதாகிருஷ்ணன், அப்துல் கலாம் என பல மேதைகள் கற்ற கல்வியால் பணிவாக நின்று நமக்கு உதாரணமாக இருக்கிறார்கள்.
நீதிமன்றத்தில், பாராளுமன்றத்தில், சட்டசபையில் உறுதிமொழி எடுப்பதைப் பார்க்கிறோம். அதன்படி நடத்தலே கற்றபடி நிற்றல் என்பது.
பாரதியாரின் பார்வையில் கல்வி என்பது மனிதனை செழுமைப்படுத்த வேண்டும். ஒழுக்கம், சமூக அக்கறையை ஊட்ட வேண்டும். பயனுள்ள மனிதனாக வாழ அது துணை செய்ய வேண்டும். எனவே தான்
'படிப்பு வளருது பாவம் தொலையுது
படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால்
போவான் போவான் ஐயோவென்று போவான்' என 'பாடுகிறார் பாரதியார்.
படித்தவன் பாவம் செய்தால் அவன் வாழ்வே துன்பமாகும் என்கிறார்.
கிளிப்பிள்ளை போல நாம் இருக்கக் கூடாது. கல்வி கற்று அதை உணர்ந்தவராகவும், கற்றதை பின்பற்றுபவராகவும் இருக்க வேண்டும். மகாகவியின் மந்திரச் சொல்லான ' கற்றது ஒழுகு' (படித்ததை பின்பற்று) சொல்வது இதைத் தான்...
-ஆத்திசூடி தொடரும்
முனைவர் தென்காசி கணேசன்
94447 94010

