ADDED : செப் 25, 2025 01:19 PM

நீதிநுால்களை படி
இலக்கிய வளம் நிறைந்த மொழி தமிழ். அறம், நீதி, தத்துவ ஞான நுால்கள் தமிழில் நிறைய உண்டு. அதனால் தமிழர்கள் வளர்ந்தனர். தமிழ் மொழியும் வளர்ந்தது.
சமஸ்கிருதமும் வளம் நிறைந்த மொழியாக, வாழ்விற்குத் தேவையான அத்தனை சாஸ்திரம், நீதி நுால்களை தந்திருக்கிறது. பதினெட்டு மகரிஷிகள் சேர்ந்து வேதங்களின் சாரத்தை தர்ம சாஸ்திரம் என்ற பெயரில் தந்துள்ளனர். பி.வி.கபே வெளியிட்ட 'தர்ம சாஸ்திரங்களின் வரலாறு' புத்தகம் வாழ்வியல் நீதியை அழகாகக் கூறுகிறது. இதுபோல நிறைய புத்தகங்கள் உள்ளன.
உலகின் செம்மொழிகள் 7. அவற்றில் இரு மொழிகள் நம் நாட்டில் இருப்பது எவ்வளவு பெரிய கொடை. இந்த நீதி நுால்கள்தான் நம் வாழ்வை அறத்துடன் வாழ வைத்துக் கொண்டிருக்கிறது. தேவையற்ற அரசியல் காரணங்களால் மொழி வெறுப்பு என்பது நம்மை அறியாமைக்குக் கொண்டு செல்வது மட்டுமல்ல, வாழ்வியல் நெறிகளை அறிய விடாமல் செய்துவிடும்.
இந்த தேசமே சனாதனம் என்னும் வாழ்வியல் முறைகளை அடிப்படையாகக் கொண்ட புண்ணிய பூமி. ஒரு உதாரணம் - இன்று நாட்டின் மக்கள்தொகை 140 கோடி என்றால், கட்டுப்படுத்தும் போலீஸ் மொத்தம் இருப்பது மூன்று லட்சம் பேர்தான். இந்தக் காவலர்களின் எண்ணிக்கை, இவ்வளவு பெரிய மக்கள் தொகையைக் காப்பது என்பது, இயற்கையாகவே மக்களின் மனங்களில் இருக்கும் அறம், மனசாட்சி, பயம்தான் என்பதில் சந்தேகம் இல்லை.
ஆயினும் இடைக்காலத்தில் ஒரு தேக்கம்! நம் மக்கள் பெருமையை இழந்தனர்; அரசுகளை இழந்து அடிமையாக மாறினர். இருள் நிறைந்த நிலையில் ஓர் எழுஞாயிறு தோன்றுகிறது; பலர் புகழ் ஞாயிறு தோன்றுகிறது. அதுதான் பாரதியார்.
அவர் வரலாற்றில் இடம்பெற்ற கவிஞர் அல்ல - வரலாற்றை எழுதிய கவிஞர்.
அவரது கவிதைகளில் கவித்துவம் உண்டு: உணர்ச்சி உண்டு. உரைநடையில் கதைகள், கட்டுரைகள் நிறைய எழுதியுள்ளார். உரைநடை இலக்கியங்களில் தெளிவான சிந்தனை, கொள்கை, கோட்பாடுகள் இடம் பெற்றுள்ளன. எனவே தான், நீதிநுால் பயிலவேண்டும் என்ற அக்கறையுடன்,
திறமை கொண்ட தீமையற்ற
தொழில் புரிந்து யாவரும்
தேர்ந்த கல்வி ஞானம் எய்தி
வாழ்வம் இந்த நாட்டிலே
என பாடுகிறார். சிறப்பான கல்வி மூலம் ஞானம் பெற்று நாங்கள் வாழ்வோம் இந்த நாட்டினில் என கற்பனை செய்கிறார்
நீதி நுால்கள் படிக்கப் படிக்கத்தான், மனம் விரியும். தெளியும். சுயநலப் போக்கு மறைந்து பொதுநல எண்ணம் தோன்றும் என்பதை,
வாழி கல்வி செல்வம் எய்தி
மனம் மகிழ்ந்து கூடியே
மனிதர் யாரும் ஒருநிகர்
சமானமாக வாழ்வமே
செல்வம் தருகிற, மகிழ்ச்சி தருகிற, பிணக்கு இன்றி ஒருவரை ஒருவர் கூடி வாழ வைக்கும் கல்வி மூலம் மக்கள் அனைவரும் சமம் என்ற சிந்தனையுடன்,
சாதிகள் இல்லையடி பாப்பா - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்;
நீதி உயர்ந்த மதி கல்வி - அன்பு
நிறை உடையவர்கள் மேலோர்
என பாப்பா பாட்டில் நீதியை உயர்த்திப் பிடிக்கிறார். அறிவும், கல்வியும் அன்பும் நிறைய உடையவர்களே பெரியவர்கள் என்கிறார்.
தமிழில் பல நீதிநுால்கள் உள்ளன. சங்ககால நுால்கள் பலவற்றில் நீதிக் கருத்துகள் ஆங்காங்கே பரவிக் கிடக்கிறது.
முன்பு பள்ளிகளில் நீதி போதனை வகுப்பு இருந்தது. பள்ளிப் பாடங்கள் தவிர, நமது நாடு, பண்பாடு, கலாசாரம், நீதி, சான்றோர் வாழ்வு என்றெல்லாம் கதைகள், வரலாற்று உதாரணத்துடன் ஆசிரியர்கள் விளக்குவார்கள்.
நீதிநுால்களை படித்தால் மனதிலுள்ள பொறாமை, கோபம் போன்ற தீய குணங்கள் கொஞ்சம் கொஞ்சமாக விலகும். மனம் அவ்வளவு சீக்கிரம் நல்லவற்றை ஏற்காது. அதனால்தான் பாரதியார், மனம் வெளுக்கச் சாயம் உண்டோ எங்கள் முத்து மாரியம்மா என பாடுகிறார்.
பொறாமை உணர்வில் இருந்து விடுபட வேண்டும் என்றால் நீதிநுால் கற்க வேண்டும். அல்லது நீதி உணர்ந்த பெரியவர்களின் வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும்.
பதினெண்கீழ்க்கணக்கில் உள்ள 18 நுால்களுள் 11 நீதி நுால்களாக உள்ளன. இவற்றுள் புகழ் பெற்றதும், பரவலாக அறியப்பட்டதும், வெளிநாட்டு அறிஞர்களின் கவனத்தை ஈர்த்ததுமான நுால் திருக்குறள். மற்றவை நாலடியார், ஏலாதி, ஆசாரக்கோவை போன்றவை.
ராமலிங்க வள்ளலார் கூறிய பசித்திரு, தனித்திரு, விழித்திரு என்ற வார்த்தைகள் வாழ்வில் முக்கியமான ஒன்று.
பசித்திரு என்பது நல்ல விஷயங்களை அறிய வேண்டும் என்ற அறிவுப்பசி. இது வெற்றியடைய மற்றவர்களை விட வேறுபாடு சிந்தனைகளைக் கொண்டிருப்பது.
தனித்திரு என்பது அந்தச் சிந்தனைகளுடன் மனம் ஒன்றுவது.
விழித்திரு என்பது, எந்த நேரமும் வாய்ப்பு கதவை தட்டும் என உணர்வது.
இந்த பசித்திரு, தனித்திரு விழித்திரு என்ற மூன்று முதல் வார்த்தைகளையும் இணைத்தால், பதவி என்பது தானாக வரும். அந்தப் பதவி தான் மன நிம்மதி. அந்த பதவி தான் மகிழ்ச்சி.அந்த பதவி தான் தன்னலமற்ற, நேர்மையான வாழ்வு.
அன்றாடப் பள்ளி பாடங்கள், மனப்பாடம் செய்து எழுதி, தேர்வில் மதிப்பெண் பெறுவதை நோக்கமாக கொண்டது. ஆனால் வாழ்க்கையின் நெறிமுறை, நல்லொழுக்கம், நற்குணங்களை நம்முள் விதைப்பவை நல்ல நுால்கள் மட்டுமே. எத்தனை முறை படித்தாலும் ஆர்வத்துடன் பயிலத் துாண்டுவது, எடுத்த புத்தகத்தை இடையில் வைத்து விடாமல் இருக்க செய்வது, ஒவ்வொரு பக்கமும் தேவையான குறிப்புகளை தேர்ந்தெடுக்க செய்யும் நுாலே சிறந்த புத்தகம்.
தினசரி இரவில் துாங்குவதற்காக படிப்பதல்ல புத்தகம், நம்மை துாங்கவிடாமல் அறிவு விழிப்பை ஏற்படுத்துவதே சிறந்த புத்தகம். நல்ல நுால்கள் என்பது படிப்பதற்கு ஆகும் நேரத்தை விட அதை தேர்ந்தெடுக்கவே நிறைய நேரம் தேவைப்படும். எனவே வாழ்வில் வளர்ச்சி, முன்னேற்றம் தரும் புத்தகங்களை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். எது நியாயம் என்பதை சொல்வது நீதிநுால்கள். எது சரி? எது முறை? என்பதைச் சொல்வது அறநுால்கள்.
அறம் சார்ந்த சிந்தனை வளர நம் எண்ணம், செயல் சமூக நலன் சார்ந்ததாக பண்படுத்தப்பட்ட எண்ணமாக மாற வேண்டும். அதற்கு அறநுால்களைப் படிக்க வேண்டும். நல்ல விஷயங்களை கேட்க வேண்டும். திருக்குறள், இனியவை நாற்பது, நீதிநெறி விளக்கம், ஆசாரக்கோவை, நாலடியார், நான்மணிக்கடிகை, ஏலாதி, சிறுபஞ்சமூலம் என கருத்து புதையல்கள் காலத்தால் அழியாத செல்வங்கள் இருக்கின்றன.
'பாரதியார் பெருமை' என்ற நுாலில் , 'நீதிக் கருத்துக்களை தேசியம், தெய்வீகம் என பாடியதுடன் எல்லாப் பாடல்களையும் உணர்ச்சி ததும்ப பாடியதுதான் அவரின் சிறப்பு' என்கிறார் மூதறிஞர் ராஜாஜி.
காரிருளில் செல்பவருக்கு பேரொளியாகவும், வழி தவறியவருக்கு வழிகாட்டியாகவும் நுால்கள் உள்ளன. மாமேதைகள் அனைவரும் புத்தகம் படிக்கும் பழக்கத்தின் மூலம் உருவானவர்களே. இன்றைய நாளில் புத்தகம் வாசிப்பு என்பது மிக குறைந்துள்ளது.
இன்றைய குழந்தைகள் அனைவருக்கும் புத்தகம் வாசிப்பது குறித்தும் அதன் நன்மைகள் குறித்தும் தெரியப்படுத்தி புத்தகங்கள் பயிலத் துாண்ட வேண்டும். ஒருவர் படிக்கும் சிறந்த புத்தகமே அவரின் உற்ற நண்பன்.
நேர்மையுடன் வாழ்ந்தால் என்ன சாதிக்கப் போகிறோம் எனக் கேட்கலாம். நேர்மையுடன் வாழ்வது என்பதே பெரிய சாதனை தானே!
மனிதன் தான் வாழ்வதோடு, சமுதாயத்தையும் உயர்த்தும்படி வாழ்வதற்கு நீதி நுால்களைப் படிப்பதும். அதன்படி வாழ்வதும் அவசியம் என்பது மகாகவி பாரதியாரின் எண்ணம்.
--ஆத்திசூடி தொடரும்
முனைவர் தென்காசி கணேசன்
94447 94010