sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

கோயிலும் பிரசாதமும் - 18

/

கோயிலும் பிரசாதமும் - 18

கோயிலும் பிரசாதமும் - 18

கோயிலும் பிரசாதமும் - 18


ADDED : செப் 25, 2025 01:20 PM

Google News

ADDED : செப் 25, 2025 01:20 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிங்கபெருமாள்கோவில் - மிளகு தோசை

சிங்கபெருமாள்கோவில் என்றால் உடனே நினைவிற்கு வருபவர் பாடலாத்ரி நரசிம்மர். அடுத்ததாக நினைவிற்கு வருவது இங்கு கிடைக்கும் மிளகு தோசை பிரசாதம். குழந்தைகள் முதல் பெரியவர் வரை இதை விரும்பி உண்பதால் இக்கோயிலை 'தோசைப் பெருமாள் கோயில்' என்றே அழைக்கின்றனர். மிளகு தோசையுடன் மிளகாய்ப் பொடியையும் தருகின்றனர். பல்லவர்களின் காலத்தில் உருவாக்கப்பட்ட இது ஒரு குடைவரைக் கோயிலாகும்.

'நாளை என்பது இல்லை நரசிம்மனிடம்' என்பது தேசிகரின் வாக்கு. பக்தனின் வேண்டுதலுக்கு உடனே செவி சாய்த்து அப்போதே நம்மை துன்பங்களில் இருந்து காக்கும் கண்கண்ட தெய்வம் நரசிங்கப்பெருமாள்.

செங்கல்பட்டு மாவட்டம் செங்கல்பட்டு - தாம்பரத்திற்கு இடையில் உள்ள 'சிங்கபெருமாள் கோவில்' என்னும் தலத்தில் 'பாடலாத்ரி நரசிம்மா்' என்ற திருநாமத்துடன் வரப்பிரசாதியாக அருள்புரிகிறார்.

இங்கு வலது காலை மடித்து வைத்தும், இடது காலை தொங்க விட்ட நிலையிலும் அர்த்த பத்மாசன கோலத்தில் காட்சி தருகிறார். இது ஒரு அரிதான அமைப்பாகும். நான்கு கைகளுடன் மேல் இரு கைகளில் சங்கு, சக்கரம் ஏந்தியும் கீழ் இரு கைகளில் ஒரு கையில் அபய முத்திரை காட்டியும் ஒரு கையை தொடை மீது வைத்தும் கிழக்கு நோக்கியபடி காட்சி தருவதும் சிறப்பு. நரசிங்கப் பெருமாள் இங்கு நெற்றிக்கண்ணுடன் 'த்ரிநேத்ரதாரியாக' காட்சி தருவது

மற்றொரு சிறப்பு.

இங்கு ஆரத்தியின் போது எம்பெருமானின் நெற்றிக் கண்ணை பக்தர்களுக்கு காண்பிக்கிறார்கள். இங்கு உற்ஸவராக ஸ்ரீதேவி, ஸ்ரீபூமிதேவியுடன் பிரகலாத வரதர் அருள்புரிகிறார்.

மூலவரின் வலதுபுறத்தில் தனி சன்னதியில் கிழக்கு நோக்கியபடி 'அகோபிலவல்லித் தாயார்' இருக்கிறார். இவர் இரு கைகளில் தாமரை ஏந்தியும், மற்ற இரண்டு கைகளில் அபய, வரத ஹஸ்த கோலத்தில் வைத்தும் புன்னகையுடன் சேவை சாதிக்கிறார். ஆண்டாள், ஆழ்வார்கள், விஷ்வக்சேனர், மணவாள மாமுனிகள், ராமானுஜர் முதலான ஆச்சாரியார்களையும் தரிசிக்கலாம்.

இங்குள்ள அழிஞ்சல் மரம் மிக அபூர்வமானதும், சக்தி மிக்கதுமாகும். இங்குள்ள தீர்த்தம் 'சுத்த புஷ்கரணி' என அழைக்கப்படுகிறது.

ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று இங்குள்ள அத்ரி மலையை சுற்றி வந்து நரசிங்கப் பெருமாளை வழிபடுகின்றனர். மார்கழி, தை மாதத்தில் மூலவரின் திருவடியிலும், தை மாதத்தில் வரும் ரத சப்தமி அன்றும் மூலவரின் திருமேனியிலும் சூரியபகவான் ஒளிக்கதிர்களை பரப்பி வழிபடுவது சிறப்பு.

பாடலாத்ரி நரசிம்மப் பெருமாளை புதன் அல்லது சனிக்கிழமை அன்று நெய் தீபம் ஏற்றி வழிபட கடன் பிரச்னை தீரும். சனிக்கிழமையில் இங்கு வருவோருக்கு கிரகதோஷம் அகலும்.

பாடலாத்ரி நரசிம்மர் கோயில் காலை 7:00 - 12:00 மணி, மாலை 4:30 - 8:30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு செல்லும் வழியில் 20 கி.மீ., தொலைவில் கோயில் உள்ளது.

மிளகுதோசை செய்வதற்கு தேவையான பொருள்

பச்சரிசி - 2 கப்

முழு கருப்பு உளுந்து - - 1/2 கப்

உப்பு - - சிறிதளவு

சீரகத் துாள் - - 3 டீஸ்பூன்

வெந்தயம் - 1 டீஸ்பூன்

மிளகுத் துாள் - - 1 டீஸ்பூன்

சுக்குத் துாள் - - 1 டீஸ்பூன்

பெருங்காயத் துாள் - - 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை - 1 கொத்து

நல்லெண்ணெய் - தேவையான அளவு

செய்முறை

பச்சரிசி மற்றும் முழு கருப்பு உளுந்தை தனித்தனியாக இரண்டு மணி நேரம் நன்கு ஊற வைக்கவும்.

ஊற வைத்த பச்சரிசி, கருப்பு உளுந்து இரண்டையும் சேர்த்து அரைக்கவும். உப்பு சேர்த்து நன்றாக கலந்து எட்டு மணி நேரம் புளிக்க வைக்கவும். சீரகத் துாள், பொடித்த மிளகுத்துாள், வெந்தயத்துாள், சுக்குத் துாள், பெருங்காயத் துாள், கறிவேப்பிலையைக் கலந்து சற்று நேரம் கழித்து தடிமனான அளவில் தோசையை வார்த்து நல்லெண்ணெய் விட்டு நன்றாக வெந்ததும் திருப்பிப் போட்டு பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும். சூடான மிளகு தோசை தயாராகி விடும்.

மிளகாய்ப் பொடி

மிளகு தோசைக்குத் தொட்டுக் கொள்ள மிளகாய்ப் பொடி தயாரிக்கும் முறையை பார்க்கலாம்.

தேவையான பொருள்

உளுத்தம்பருப்பு - 1 கப்

கடலைப் பருப்பு - 1 கப்

கருப்பு எள் - 1/4 கப்

வர மிளகாய் - பத்து

கறிவேப்பிலை - ஒரு கொத்து

புளி - 1 சிறு துண்டு

நல்லெண்ணெய் - 50 மி.லி.,

வெல்லம் - ஒரு துண்டு

உப்பு - - சிறிதளவு

செய்முறை

ஒரு கடாயில் கருப்பு எள்ளை வறுத்து தட்டில் எடுத்துக் கொள்ளவும். பின்னர் அதே கடாயில் சிறிது நல்லெண்ணெய் விட்டு கறிவேப்பிலையை மொறுமொறுப்பாக வறுத்து வைக்கவும். நல்லெண்ணெய்யை சூடாக்கி அதில் உளுத்தம்பருப்பு, கடலைப் பருப்பு, வரமிளகாயைப் போட்டு வறுக்கவும். பொன்னிறமானதும் உப்பு, புளி சேர்த்து மீண்டும் இரண்டு நிமிடம்வறுக்கவும். அவற்றை ஒரு தட்டில் எடுத்து ஆற வைக்கவும்.

மேற்காணும் பொருட்களுடன் சிறிது வெல்லம் சேர்த்து ஒரு மிக்சியில் சற்றே கொர கொரப்பாக அரைக்கவும். மிளகு தோசையுடன் மிளகாய்ப் பொடியை சேர்த்து சாப்பிட்டால் பிரசாதம் சுவையாக இருக்கும்.

-பிரசாதம் தொடரும்

ஆர்.வி.பதி






      Dinamalar
      Follow us