
சுந்தரரின் சாமர்த்தியம்
திருவாரூருக்கு அருகே குண்டையூர் என்ற ஊரில் குண்டையூர்க்கிழார் என்னும் பெரியவர் வாழ்ந்தார். நல்ல மனம் கொண்ட அவர் அடியார்களுக்கு என்ன வேண்டுமோ அவற்றை எல்லாம் கொடுத்து உதவினார். அன்றாட உணவுக்கு தேவையான நெல், பருப்பு, காய்கறிகள் என அனைத்தும் அடியார்களின் வீட்டுக்கே அனுப்பி வைப்பார். ஏன் இவ்வளவு பொருட்களை தினமும் அனுப்ப வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை. அவ்வளவு தாராள குணம் கொண்டவர் அவர்.
அந்த வகையில் திருவாரூரில் வாழ்ந்த சுந்தரருக்கு நெல், பருப்பு போன்றவற்றை தவறாமல் அனுப்பினார் குண்டையூர்க்கிழார். பொருள்களை அனுப்பி விட்டு மனதிருப்தியும், இன்பமும் அடைவார். இப்படி உணவுப் பொருட்களை சுந்தரருக்கு அனுப்பி வைக்கும் சமயத்தில் ஒருமுறை பெருமழை பெய்தது. எங்கும் ஒரே வெள்ளம் பெருக்கெடுத்தது. விளைநிலம் எல்லாம் என்ன கதியாயிருக்கும் என ஊகித்துப் பாருங்கள். எல்லாம் பாழாகி, விளைச்சல் குறைந்தது. மக்கள் யாவரும் அவதிக்குள்ளாயினர். சுந்தரருக்கு பொருட்களை எப்படி அனுப்புவது என கவலை கொண்டார் குண்டையூர்க்கிழார். அதையே சிந்தித்தபடி மன உளைச்சலுடன் துாங்கி விட்டார். கனவில் சிவபெருமான் காட்சியளித்து, ''சுந்தரனுக்குப் படி அமைப்பதற்காக உமக்கு நெல் தந்தோம்'' எனக் கூறிவிட்டு மறைந்தார். நெல், பருப்பு வகைகளை தொண்டர்களுக்குக் கொடுப்பதை 'படியமைத்தல்' என்பர்.
செல்வத்தின் அதிபதியாக இருப்பவர் குபேரன். இவர் விஸ்ரவன், இலவித தேவிக்கு மகனாக பிறந்தவர்.
ராவணன், கும்பகர்ணன், விபீஷணன்
என்ற சகோதரர்களும், சூர்ப்பனகை என்ற சகோதரியும் இவருக்கு உண்டு. இவருடைய மனைவி சித்ரலேகா. மகன்கள் நளகூபன், மணிக்ரீவன்.
குபேரனை வடக்கு திசைக்கு அதிபதியாக்கினார் சிவன். அதன் காரணமாக எண்திசை காவலர்களில் ஒருவர் எனப் பெயர் பெற்றார். சிவபக்தியின் காரணமாக சுவர்ண பைரவர் என்னும் பெயரில் செல்வத்தை நிர்வகிக்கும் பொறுப்பை பெற்றார். திருப்பதி ஏழுமலையானின் திருமணத்திற்கு கடன் கொடுத்ததும் இவரே.
பத்மம், மகாபத்மம், மகரம், கச்சபம், குமுதம், நந்தம், சங்கம், நீலம், பத்மினி
என்ற ஒன்பது நிதிகளுக்கும் அதிபதியாக இருப்பவர் குபேரன். இதில் சங்க நிதி,
பதும நிதி இரண்டும் எடுக்க எடுக்கக்
கூடிக் கொண்டே இருப்பவை. இந்த நிதிகளுக்கு அதிபதியான சங்க லட்சுமி,
பதும லட்சுமி இருவரும் குபேரனின் மனைவியர் என்றும் சொல்வர்.
செல்வத்திற்கு அதிபதியான குபேரனைக் கூப்பிட்ட சிவன், ''குண்டையூரில் கிழார் என்ற சிவனடியார் ஒருவர் இருக்கிறார். நெல் தானம் செய்யும் வழக்கம் கொண்டவர் அவரின் வீட்டிற்கு நெல் குவியலை கொண்டு போய் சேர்த்திடு'' என ஆணையிட்டார். அதன்படி குபேரனும் நெல்லை மலை மலையாக குண்டையூரில் கிழாரின் வீட்டு வாசலில் கொட்டினார்.
அதிகாலையில் எழுந்த கிழார், வீட்டு வாசலில் குவிந்திருந்த நெல் குவியல்களைக் கண்டு பிரமித்துப் போனார். இந்த இனிப்பான செய்தியை சுந்தரருக்குத் தெரிவிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் திருவாரூரை நோக்கி நடந்தார். அங்கு சுந்தரரிடம் கனவில் சிவபெருமான் காட்சி அளித்ததையும், காலையில் வீட்டு வாசலில் நெல் குவியல் கிடப்பதையும் தெரிவித்தார்.
மேலும் குண்டையூர்க்கிழார்,“படியளக்கும் சிவனின் செயல் எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. ஆனால் அவ்வளவு நெல்லையும் வண்டியேற்றிக் கொண்டு வருவது என்பது கடினமான செயல். என் வீட்டுக்கு வந்து தாங்களே நெல்லை ஏற்றுக் கொள்ள வேண்டும்'' என சுந்தரரிடம் பணிவாக வேண்டினார்.
கிழாரின் வேண்டுகோளை ஏற்ற சுந்தரரும் குண்டையூரிலுள்ள நெல் மலைகளைப் பார்வையிட்டார். என்னே ஆச்சரியம் ! அப்பப்பா! விண்ணை முட்டி நின்றது நெற்குவியல்.
“ எப்படி நெல்லை திருவாரூருக்கு எடுத்துச் செல்வது?” என்ற எண்ணம் அவர் மனதில் ஓடியது.
சுந்தரர் ஒரு முடிவுக்கு வந்தவராக, குண்டையூர்க் கிழாரை அழைத்துக் கொண்டு அருகிலுள்ள ' திருக்கோளிலி' என்னும் சிவத்தலத்திற்கு விரைந்தார். தற்போது இத்தலம் 'திருக்குவளை' எனப்படுகிறது. அங்கு குடி கொண்டிருக்கும் சிவபெருமானிடம் சென்று மனம் உருகி பதிகம் பாடினார்.
என்ன பாடினார் தெரியுமா? இவ்வளவு நெற் குவியல்களையும் தம்மிடம் கொண்டு செல்வதற்கு வேண்டிய வேலையாட்களைத் தரும்படி வேண்டினார்.
அடியாரின் வேண்டுகோளை ஏற்காமல் இருப்பாரா சிவன்? அதுவும் தோழனாயிற்றே! அப்போது, “ இன்றிரவில் பூத கணங்கள் நெல்லைக் கொண்டு வந்து திருவாரூரில் குவிப்பர். கவலை வேண்டாம்'' என அசரீரி ஒலித்தது. அதே போல நெற்குவியல் வந்து சேர்ந்தது என சொல்லவும் வேண்டுமோ?
திருக்கோளிலியில் நெல்லை எடுத்துச் செல்ல பணியாள் கேட்டு விண்ணப்பித்த பாடல்
நீளநினைந்தடியேன் உனை
நித்தலுங் கைதொழுவேன்
வாளன கண் மடவாள் அவள் வாடி வருந்தாமே
கோளிலி எம்பெருமான் குண்டையூர்ச்சில
நெல்லுப் பெற்றேன்
ஆளிலை எம்பெருமான் அவை
அட்டித் தரப்பணியே.
திருக்கோளிலியில் எழுந்தருளியுள்ள எம்பெருமானே! வாள் போன்ற கண்களையுடைய என் மனைவி வாழ்வு நடத்த இயலாமையால் உடல் மெலிந்தாள். அவள் வருந்தாமல் இருக்கவே குண்டையூரில் நெல்லைக் குவியலாகப் பெற்றேன். அவற்றை எடுத்து வர ஆளில்லை.
அடியேன் உன்னையே நினைத்து வழிபடுவதையே தொழிலாக உடையவன். வேறு யாரை நான் வேண்டுவேன்! அதை என்னிடம் சேர்ப்பிக்க கட்டளையிடு.
இது மட்டுமா கேட்டுப் பாடினார்? பதிகத்தில் இடம் பெற்றுள்ள மற்ற ஒன்பது பாடல்கள் மூலம் தனக்கு தேவையான அத்தனையையும் பெற்றுக் கொண்டார்.
இப்போது சொல்லுங்கள் சுந்தரர் சாமர்த்தியசாலி தானே!
-பக்தி தொடரும்
உமா பாலசுப்ரமணியன்
umakbs@gmail.com