ADDED : செப் 25, 2025 01:23 PM

துன்பங்களைப் போக்கும் துர்கா கணபதி
துர்கம் என்றால் கோட்டை, தாங்க முடியாத துன்பம் என்று பல பொருள்கள் உள்ளன. துன்பங்களை போக்குபவர் இந்த கணபதி. பராசக்தியின் அம்சங்களில் துர்க்கையும் ஒருத்தியாக இருக்கிறாள். மாத்ரு கணங்கள் எனப்படும் பிராம்மி, மாகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டி, நாரசிம்ஹி என்ற எட்டுப்பேருக்கும் தலைவியாக இருப்பவள் துர்க்கை. இந்த எட்டுப் பேருக்கும் காவலாக ஒரு பக்கம் கணபதியும் இன்னொரு பக்கம் வீரபத்திரரும் இருப்பர். 'துர்கா புத்ராய' என ஒரு பெயர் கணபதிக்கு உண்டு. அதனால் மேற்சொன்ன மாத்ருகணங்களுக்கும் பிடித்த பிள்ளையே இந்த கணபதி.
தியான சுலோகம்
தப்தகாஞ்சன ஸங்காஸ் சாஷ்ட ஹஸ்தோ மஹத் தநு:
தீப்தாங்குசம் சரஞ்சாக்ஷம் தந்தம் தக்ஷே வஹந் கரை: |
வாமே பாசம் கார்முகஞ்ச லதாம் ஜம்பூ ததத் கரை:
ரக்தாம்சுகஸ் ஸதா பூயாத் துர்காகணபதிர் முதே ||
தப்தகாஞ்சன - உருக்கிய தங்கத்தைப்
ஸங்காச: - போன்று ஒளிவீசும் மஞ்சள் நிறத்தவரும்
அஷ்டஹஸ்த: - எட்டுத் திருக்கரங்களை உடையவரும்
மஹத் தநு: - பெரியதான திருமேனியைக் கொண்டவரும்
தக்ஷே - வலதுபக்கமுள்ள
கரை: - கரங்களால்
தீப்தாங்குசம் - கூரிய அங்குசம் எனும் ஆயுதம்
சரம் - அம்பு
ச - இவற்றோடு
அக்ஷம் - ஜபமாலையையும்
தந்தம் - தனது ஒடித்த தந்தத்தையும்
வஹந் - (ஆகியவற்றை) ஏந்தியவரும்
வாமே - இடதுபக்கத்தில் (நான்கு)
கரை: - கரங்களால்
பாசம் - பாசம் எனும் ஆயுதம்
கார்முகம் - வில்
ச - இவற்றோடு
லதாம் - கற்பகக் கொடியையும்
ஜம்பூ - நாவல் பழத்தையும்
ததத் - ஏந்தியிருப்பவரும்
ரக்தாம்சுக: - சிவப்புநிற பட்டாடையை உடுத்தி இருப்பவருமான
துர்காகணபதி: - 'துர்கா கணபதி' என அழைக்கப்படுபவரான கணபதி
ஸதா - எப்போதும்
முதே - எனது மகிழ்ச்சியின் பொருட்டு
பூயாத் - விளங்கட்டும்
அங்குசம்: புலனடக்கத்தையும் அகந்தையை ஒடுக்குவதையும் குறிப்பது
பாசம்: உயிரின் ஆணவமலக் கட்டினை அகற்றுவதைக் குறிப்பது.
வில், அம்பு: போர்க்களத்தின் பிரதான ஆயுதங்கள். செயல் நேர்த்தியைக் குறிக்கும்.
கற்பகக் கொடி: உயிர்கள் விரும்புபவற்றை அருள்பவன் இறைவன் என்பதற்கான அடையாளம்.
ஜபமாலை: இறைவனின் மறைப்பாற்றலைக் குறிப்பது.
நாவல் பழம்: உடல் நலனையும் தவ சித்தியையும் உணர்த்துவது.
ஒடித்த தந்தம்: நிறத்தால் துாய்மையானது; ஆயுதமாகவும் பயன்படுவது. மன உறுதியின் அடையாளம். இவ்விரண்டு தன்மையும் கர்மயோகத்திற்கு அடையாளம்.
பலன்: துன்பங்கள் நீங்கும்; பயம் அகலும்; கேடுகள் விலகும்.
அருள் தொடரும்...
வியாகரண சிரோமணி வி.சோமசேகர குருக்கள்