ADDED : அக் 02, 2025 11:46 AM

தெய்வம் நீ என்று உணர்
பாரதியார் சொன்ன வீரிய மிக்க வார்த்தை 'தெய்வம் நீ என்று உணர்'. சொல்வதற்கும் கேட்பதற்கும் எளிய வார்த்தை இது. ஆனால் மனதால் பணக்காரராக இருப்பவர்களால் மட்டுமே அடையும் நிலை இது.
புறத்தில் ஏழ்மையுடன் வாழ்ந்தாலும் அகத்தில் எல்லோரையும் விட செல்வந்தனாக வாழ்ந்தவர் பாரதியார். அதனால் தான் 'தெய்வம் நீ என்றுணர்' என சொல்ல முடிந்தது.இதன் பொருள், ஒவ்வொரு மனிதனும் தனக்குள் இருக்கும் தெய்வீகத்தை உணர வேண்டும் என்பதாகும். இன்னொரு வகையில் பார்த்தால், மனிதன் கடவுளின் அம்சம் எனக் கூறி சுயசார்பு, தன்னம்பிக்கை மிக்கவர்களாகவும் இருக்க ஊக்குவிக்கிறார் பாரதியார். பரசிவ வெள்ளம் பாடலில்,
எண்ணம் இட்டலே போதும்
எண்ணுவதே இவ்வின்பத்
தண்ணமுதை உள்ளே
ததும்பப் புரியுமடா
என்றும்,
கண்ணுள்ளே நிற்கும்
காதன்மையால் தொழில்
என்னிலும் வரும் என் இனி வேண்டுவம்
என ஆழ்வார்கள் வேண்டியது போலே கடவுளைத் துதிக்க சடங்கு தேவையில்லை, மனமும் எண்ணமும் போதும் என்கிறார். நம்மால் ஏன் அப்படிப்பட்ட உயர்வான நிலையை உணர இயலாது போனது என்றால் தாழ்வு மனப்பான்மை, தீயகுணங்களை அதிகரிக்கும்படியான செயல்பாடுகளே காரணம் என்பது புரியும்.
8ம் நுாற்றாண்டில் பிறந்து, இந்த நாட்டை 3 முறை சுற்றி வந்து, 32 வயதிற்குள் செயற்கரிய செயல்களைச் செய்த ஆதிசங்கரர் கூறுகிறார்- 'அஹம் பிரமாஸ்மி' என்று. 'நானே தெய்வம்' என்பது இதன் பொருள். நானே கடவுள் என்றால் அது தலைக்கனம் என்றால் ஆதிசங்கரர் கூறுவது, நான் கடவுள் நிலைக்குச் செல்வேன் என்றே வாழ வேண்டும் என்பதே. பாரதியாரும் இதைத் தான் தெய்வம் நீ என்று உணர் என்கிறார்.
மனிதனுக்கும், தெய்வத்திற்கும் என்ன வேற்றுமை என்பதை சிந்தித்தால் உண்மை புரியும். ஒரு கல் இருக்கிறது. அதை சிற்பி ஒருவன் சிலையாக்க என்ன செய்கிறான்? கல்லில் இருக்கும் தேவையற்றவை அனைத்தையும் வெட்டி எடுக்க, அங்கே தோன்றுவது அழகான சிலை. அவன் புதிதாக சிலை ஒன்றைத் கொண் டுவரவில்லை. இருக்கும் கல்லே, சிலையாக உருவெடுக்கிறது. அதேபோல்தான், மனிதனின் தேவையற்ற தீய குணங்களை நீக்க, மனிதன் என்பவன் தெய்வம் ஆகிறான்.
கண்ணதாசன் கூறும்,
ஆசை கோபம்
களவு கொள்பவன்
பேசத் தெரிந்த மிருகம்
அன்பு நன்றி
கருணை கொண்டவன்
மனித வடிவில் தெய்வம்
இதில் மிருகம் என்பது
கள்ள மனம்
உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம்
இந்த ஆறு கட்டளை அறிந்த மனது
ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்
என்ற வரிகள் பொருத்தமான ஒன்றாகும்.
கடவுள் கருணை வடிவானவர். ஆனால் மனிதன் பிறக்கும் போதே ஆசை, கோபம் என அனைத்தும் கொண்டே வளர்கிறான். வளர வளர அது அதிகமாகிறதே தவிர குறைவதில்லை.
ஆதிசங்கரரும் காலடியில் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர்தான். ஆனால் நல்ல மகனாக, மாணவனாக, மனிதனாக, புனிதமாக பயணத்தைத் தொடர கடவுள் என்றே ஆகிறார். தாயிடம் அன்பு, வறுமையில் வாடிய பெண்ணுக்காக திருமகளை துதித்து செல்வம் தந்தது, குருவை அடைந்தது, இனம், மொழி, வயது பாராமல் நான்கு திசைக்கும் நான்கு சீடர்களை எடுத்தது, எந்தவித வன்முறை இல்லாமல் வழிபாட்டு முறையை ஒழுங்குபடுத்தியது, நாமெல்லாம் வணங்க பல தோத்திரங்களை அருளியது என எவ்வளவு சாதனைகள். இவை எல்லாம் மனிதம், கடவுள் தன்மையான காரணம் தான்.
திருவள்ளுவர் இதையே
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும் என்கிறார்.
வாழ வேண்டிய ஒழுங்கு முறைப்படி வாழ்பவன், வானுலக தெய்வத்திற்கு இணையாக மதிக்கப்படுவான்.
மனிதன் தெய்வமாக வேண்டும் என்றால், எதிர்பார்ப்பு இல்லாத மனமும், சேவை செய்யும் எண்ணமும் இருக்க வேண்டும்.
மதுரையைச் சேர்ந்த நீதிபதி சுப்ரமணிய ஐயர். இவர் சென்னை மெரீனா கடற்கரை எதிரில் பல ஏக்கர் பரப்புள்ள பண்ணை வீட்டை, பெண்களின் கல்விக்காக அன்றைய ஆங்கிலஅரசு கேட்டபோது, அதை தானமாக கொடுத்தார். அது தான் ராணி மேரி கல்லுாரி. அவர் பெயர் கூட அந்தக் கல்லுாரிக்கு இல்லை. தெய்வ மனம் இருந்தால்தான், இப்படி சேவை செய்ய முடியும்.
வெற்று விளம்பரம், சுய லாபம், பதவிக்காக சேவையில் ஈடுபடுபவர்கள் மனிதர்கள் அல்ல. அப்புறம் எங்கே தெய்வ நிலைக்கு உயர்வது?
'தெய்வம் மனுஷ்ய ரூபேண' என்பார்கள். அதாவது ஒருவரின் துன்பத்தில், சரியாக உதவி செய்பவனே தெய்வம் என பொருள்.
கவிஞர் வாலி யார் தெய்வம் என்பதற்கு அற்புதமான பாடல் ஒன்றைத் தந்திருப்பார்.
இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
நான் ஒரே ஒரு புன்னகையில் கண்டேனே
பாசமுள்ள பார்வையில் கடவுள் வாழ்கிறான்
அவன் கருணை உள்ள நெஞ்சினிலே
கோயில் கொள்கிறான்
ஆரம்ப காலத்தில் இருந்து இப்போது வரை நம் கடவுள் வாழ்த்துக்களில் எதையும் எதிர்பார்க்காத பெருந்தன்மை பெரும்பாலும் இருந்ததில்லை. ஏதாவது ஒரு தேவையை அடிப்படையாகக் கொண்டே நம் பிரார்த்தனை இருந்துள்ளது.
நம் வேண்டுதல் எல்லாம், துன்பம் இல்லாமல் நீண்ட காலம் வாழ, நன்மை தீமைகளை எதிர்கொள்ள, மனக்கவலை தீர, பிறவிக்கடலை கடக்க, பயனுள்ள வாழ்க்கை வாழ என ஏதாவது ஒரு தேவையை அடிப்படையாக கொண்டே அமைகிறது.
ஆனால் பாரதியார்
நின்னைச் சில வரங்கள் கேட்பேன்
அவை நேரே இன்றெனக்குத் தருவாய்
என்ற ஒற்றை வரியில் அவரது ஆளுமையின் தன்மை விளங்கும். வரங்கள் கேட்கும் வார்த்தையில் பயமில்லை. தாழ்வு மனப்பான்மை இல்லை. நடுங்குதல் இல்லை தெளிவாக துணிவாக கேட்கிறார். கூடவே வரங்கள் கிடைக்க வேண்டிய காலகட்டத்தையும் அவரே முடிவு செய்திருக்கிறார்.
இப்படிப்பட்ட உயர்வான எண்ணம் கொண்டிருந்ததால் தான் பாரதியாருக்கு கடவுளையே வாழ்த்தும் துணிவு இருந்திருக்கிறது. அவருடைய வசன கவிதையில் கூட,
தெய்வங்களை வாழ்த்துகிறோம்
தெய்வங்கள் இன்ப மெய்துக
அவை வாழ்க
அவை வெல்க
தெய்வங்களே
என்றும் விளங்குவீர்
என்றும் இன்ப மெய்துவீர்
பாரதியாரின் வசன கவிதையில் 'தெய்வங்களை வாழ்த்துகிறோம், தெய்வங்கள் இன்பம் எய்துக' என்கிறார். இப்படி வாழ்த்தும் பாரதியாரின் குணம் எவ்வளவு சிறப்புடையது. இதுதான் மனிதனுக்கு அடுத்த நிலை என்பது.
பராசக்தியிடம் வேண்டும்போது கூட வேண்டுகோள் விடுக்கவில்லை. இந்த உலகம் சிறக்க வேண்டும் என பெரிய மனதுடன் வேண்டுகிறார்.
வல்லமை தாராயோ
இந்த மாநிலம் பயனுற வாழ்வதற்கே
இந்த நாட்டில் தோன்றிய எண்ணற்ற மகான்கள் இப்படித்தான் வாழ்ந்து காட்டி இருக்கிறார்கள்.
இப்படி தெய்வங்களை வாழ்த்தும் மனம் கொண்டிருப்பதால் தான் பாரதியாரால் தெய்வம் நீ என்றுணர் எனச் சொல்ல முடிந்தது. குறுகிய மனப்பான்மையை கொண்டிருக்கும் நம்மால் நாம் தெய்வம் என்பதை உணர முடியாது, அதை சாத்தியமாக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும். அதற்குத் தேவையான பண்புகளை வளர்க்க வேண்டும்.
பாரதியாருக்கு பரந்த மனம் இருந்ததால்தான் எல்லா உயிர்களிடமும் அன்பு காட்டினார்.
காக்கை குருவி எங்கள் ஜாதி - நீள்
கடலும் மலையும் எங்கள் கூட்டம்;
நோக்குந் திசையெலாம் நாமன்றி வேறில்லை;
நோக்க நோக்கக் களியாட்டம்.
என அவரால் பாட முடிந்தது.
நாம் தெய்வம் என நம்மை உணர்கிறோமா, இல்லையோ அதை நோக்கிச் செல்வதற்கு முயற்சிகள் எடுக்க வேண்டும்.
ஆக மனதைக் கேள்விகளால் உழுங்கள். நல்ல பயிர் தழைக்கும். அர்த்தமுள்ள கேள்விகளும் ஆத்மார்த்த அலசலும் நம்மை பாரதியார் சொல்லும் தெய்வ நிலையை
உணர வைக்கும்.
- ஆத்திசூடி தொடரும்
முனைவர் தென்காசி கணேசன்
94447 94010