ADDED : அக் 02, 2025 11:48 AM

சிதம்பரம் நடராஜர் - சம்பா சாதம் கத்திரி கொத்சு
சைவத்தில் கோயில் என்றால் கடலுார் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலையே குறிக்கும். நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய பஞ்ச பூதங்களில் ஆகாய தலமாக விளங்குவது சிதம்பரம். நாற்பது ஏக்கர் பரப்பு கொண்ட இத்தலம் மூர்த்தி, தலம், தீர்த்தம் முதலான சிறப்புகளுடன் பிரம்மாண்டமாக திகழ்கிறது. முற்காலத்தில் இப்பகுதி தில்லை மரங்கள் நிறைந்த காடாக இருந்ததால் 'தில்லை வனம்' எனப்பட்டது. தற்போது சிதம்பரம் எனப்படுகிறது.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் தினமும் சம்பா சாதமும் (மிளகு சாதம்), கத்திரிக்காய் கொத்சும் நைவேத்யம் செய்யப்படுகிறது. தினமும் 150 கிலோ அரிசியில் சம்பா சாதம் செய்யப்படுகிறது. இங்கு நடராஜர், சிவகாமி அம்மனுக்கு பால், பொரி, பழம் நைவேத்யம் செய்து தீபாராதனை செய்வதை 'திருவனந்தல்' என்கின்றனர்.
பொன்னம்பலத்தில் தெற்கு நோக்கி நடராஜரும், சிவகாமி அம்மனும் அருள்புரிகின்றனர். இங்கு சிவன் உருவம், அருவம், அருவுருவம் ஆகிய மூன்று நிலைகளில் இருக்கிறார். நடராஜரை உருவமாகவும், ஸ்படிக லிங்கத்தை அருவுருவமாகவும், சிதம்பர ரகசியத்தை அருவமாகவும் தரிசிக்கலாம். சிற்சபையில் சபாநாயகரின் வலது புறத்தில் உள்ள சிறு வாசலில் உள்ள திரை அகற்றப்பட்டு ஆரத்தி காட்டப்படும். உள்ளே தங்கத்தால் ஆன வில்வதள மாலை காட்சியளிக்கும். ஆகாய ரூபமாக சிவன் இருப்பதை இந்த வழிபாடு உணர்த்துகிறது. சிவனை உருவமாக வழிபடாமல் அருவமாக வழிபடுவதே சிதம்பர ரகசியமாகும்.
நடராஜர் கோயிலில் நடராஜர் வீற்றிருக்கும் இடம் சித்சபை என்றும், ஸ்படிகலிங்கத்திற்கு அபிஷேகம் நடக்கும் இடம் கனகசபை என்றும் அழைக்கப்படுகிறது. இக்கோயிலில் ஐந்து பிரகாரங்கள் உள்ளன. மேலும் ஒரு பிரகாரத்தில் எமதர்மனுக்கும், சிவகாமி சன்னதிக்கு அருகில் சித்ரகுப்தனுக்கும் சன்னதிகள் உள்ளன. சிதம்பரத்தை சமயக்குரவர்களான திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் பாடியுள்ளனர். இதனால் நால்வரின் குரு பூஜையும் இங்கு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
நடராஜருக்கு ஆண்டிற்கு இரு முறை தேரோட்டம் நடக்கும். அப்போது சிற்சபையில் உள்ள மூலவரே உற்ஸவராக எழுந்தருள்கிறார். இது வேறெங்கும் இல்லாத சிறப்பாகும்.
தினமும் காலை 6:00 - 12:00 மணி, மாலை 5:00 - 9:00 மணி வரை திறந்திருக்கும். சிதம்பரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 500 மீட்டர் தொலைவில் கோயில் உள்ளது. இனி சம்பா சாதம், கத்திரி கொத்சு செய்வது எப்படி எனப் பார்ப்போம்.
தேவையான பொருள்
அரிசி - ¼ கி
மிளகு - ஒரு டேபிள் ஸ்பூன்
சீரகம் - ஒரு டேபிள் ஸ்பூன்
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
முந்திரி - 10 எண்ணிக்கை உடைத்தது
உப்பு - தேவையான அளவு
செய்முறை
அரிசியை சிறிது நேரம் ஊற வைத்து பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உதிரியாக வேக வைக்க வேண்டும். பின்னர் மிளகு, சீரகம் இரண்டையும் கடாயில் வறுத்து மிக்சியில் போட்டு கொர கொரப்பாக அரைக்க வேண்டும். முந்திரியை சிறிது நெய் ஊற்றி வறுத்துக் கொள்ளவும். வடித்த சாதத்தில் நெய் விட்டு கொர கொரப்பாக அரைத்த மிளகு, சீரகத்தையும் முந்திரிப் பருப்பையும் சற்று உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
கத்திரிக்காய் கொத்சு
தேவையான பொருள்
கத்திரிக்காய் - ¼ கி
புளி - சிறு உருண்டை அளவு
மஞ்சள் பொடி - ஒரு சிட்டிகை
கொத்சு பொடி - 5 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
வெல்லம் துருவியது - 1 டீஸ்பூன்
நல்லெண்ணெய் - 5 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
கொத்சு பொடி - தேவையான பொருட்கள்
தனியா - 3 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
துவரம் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
வெந்தயம் - சிறிதளவு
கட்டிப் பெருங்காயம் - சிறிதளவு
வர மிளகாய் - 5
இந்த பொருட்களை வாணலியில் ஒவ்வொன்றாக எண்ணெய் விடாமல் வறுத்து எடுத்து பொடித்து வைத்துக் கொள்ளவும்.
கொத்சு செய்முறை
ஒரு கப் தண்ணீரில் புளியை ஊற விடவும். கத்திரிக்காய்களை நறுக்கி தண்ணீரில் போடவும்.
வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு இட்டு தாளித்துப் பின்னர் கத்திரிக்காய்த் துண்டுகளைப் போட்டு பின்னர் மஞ்சள் துாள், கறிவேப்பிலை சேர்க்கவும்.
ஐந்து நிமிடம் வதங்கிய பின்னர் ஊறிய புளியை எடுத்துப் பிழிந்து சாற்றை எடுத்துக் கொள்ளவும். புளிச்சாற்றை கத்திரிக்காயுடன் சேர்க்கவும். பின்னர் அரைத்து வைத்துள்ள கொத்சு பொடியில் 5 டீஸ்பூன் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
பின்னர் உப்பைச் சேர்த்து நல்லெண்ணெய் விட்டு கத்திரிக்காய்களை நன்றாக மசிக்க வேண்டும். பின்னர் வெல்லத்தைச் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி ஐந்து நிமிடம் கொதிக்க விடவும். எண்ணெய் மேலே வந்ததும் அடுப்பை அணைத்து விட வேண்டும்.
--பிரசாதம் தொடரும்
ஆர்.வி.பதி