sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 23, 2025 ,ஐப்பசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

பாரதியாரின் ஆத்திசூடி - 17

/

பாரதியாரின் ஆத்திசூடி - 17

பாரதியாரின் ஆத்திசூடி - 17

பாரதியாரின் ஆத்திசூடி - 17


ADDED : அக் 23, 2025 02:53 PM

Google News

ADDED : அக் 23, 2025 02:53 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சரித்திரத் தேர்ச்சி கொள்

அலெக்சாண்டர் பற்றி தெரிந்த நமக்கு அவரை எதிர்த்து வெற்றி இலக்கை தொட்ட போரஸ் எனும் புருஷோத்தமன் பற்றி தெரியாமல் போகிறது. அலெக்சாண்டர் போரசை வென்றிருந்தால் அவன் இந்தியாவிலேயே இன்னும் சில போர்களில் ஈடுபட்டு இங்கேயே இருந்திருப்பான்.

அவன் திரும்பி சென்றதற்கு காரணம் மன்னர் போரஸ் போன்றோரின் வீரத்தை கண்டு திரும்பி சென்றான். அலெக்சாண்டர் போர் முடிந்து தன் நாட்டிற்கு திரும்பும் போது வழியில் ஒரு கிராமத்தின் இரு புறமும் மக்கள் கூட்டமாக விவாதித்து கொண்டிருந்தனர். என்ன என்று அவன் கேட்ட போது அந்த செய்தி அவனை திடுக்கிட வைத்தது. அதாவது நிலத்தை விற்ற ஒருவரும், அதை வாங்கியவரும் அங்கிருந்தனர். விற்ற நிலத்தை உழும் போது பொற்குடம் நிறைய காசுகள் கிடைத்தது என அதை விற்றவரிடம் ஒப்படைத்து 'எனக்கு நிலம் மட்டுமே சொந்தம்; அதிலுள்ள பொருள் எனக்கு சொந்தம் அல்ல' என்றார். அதற்கு விற்றவரோ, 'நான் நிலத்தை விற்ற போதே நிலத்தைச் சேர்ந்த எல்லாம் உங்களுக்கே சொந்தம்' என அவர் மறுத்தார் இதுதான் விவாதம்.

பொற்குடத்தை இருவரும் வேண்டாம் எனச் சொல்வதைக் கேட்ட அலெக்சாண்டர், 'இந்த மண் எவ்வளவு செல்வத்தை கொண்டது. இங்கு மக்கள் மன நிம்மதி, மகிழ்ச்சி, திருப்தியுடன் வாழ்கிறார்கள் என தன் குறிப்பில் எழுதி இருக்கிறான். இந்த வரலாறை எல்லாம் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

நம் இலக்கியங்களில் ஆட்சி முறை, வாழும் முறை பற்றி கம்பராமாயணம், திருக்குறள், சிலப்பதிகாரம், மகாபாரதம் விவரிக்கின்றன. வரி வசூலிப்பது, வரி விதிப்பது என்பதெல்லாம் அந்த காலத்தில் சிறப்பாக கடைபிடிக்கப்பட்டன.

முகலாயர்களால் கைவிட்டுப் போன விஜயநகர சாம்ராஜ்யம் மீண்டும் சிருங்கேரி சாரதா பீடத்தின் 12வது பீடாதிபதியான வித்யாரண்யரால் ஹரிஹரர், புக்கர் என்ற இருவர் மூலம் அரசமைக்கப்பட்டு, இந்த தேசத்தை பாரம்பரிய மிக்கதாக காப்பாற்றி தொடர்ந்து கடைபிடிக்க வைத்தனர். மன்னர்கள் ஆடம்பரமாக அரண்மனையை கட்டினாலும் அதை விடக் கோயில்கள், விவசாய நிலங்கள் இவற்றுக்கு முக்கியத்துவம் அதிகம் கொடுத்தனர். ஹிட்லர் எதிரியின் கையில் பிடிபடும் முன் தன்னைத்தானே சுட்டுக் கொண்டான். இத்தாலியில் கொடுங்கோல் ஆட்சி செய்த முசோலினி, அவனது காதலியை துாக்கிலே தொங்க விட்டதோடு மக்கள் பிணத்தின் மீது செருப்பு, துடைப்பத்தால் அடித்து கோபத்தை தீர்த்துக் கொண்டனர் என்பது வரலாறு.

அதே போல ரஷ்யாவில் சர்வாதிகாரியாக இருந்த ஸ்டாலினின் கடைசி காலத்தில் நம் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் அவரை பார்க்க சென்றிருந்தார். உரையாடிய பின் ஸ்டாலின் சொன்ன கருத்து - டாக்டர் ராதாகிருஷ்ணனை முன்பே சந்தித்திருந்தால் என் வாழ்வின் போக்கே மாறி இருக்கும். இந்த விஷயங்கள் நமக்குத் தெரிய வேண்டும் என்றால் வரலாறு தெரிய வேண்டும். அதைத்தான் பாரதியார் சரித்திரத் தேர்ச்சி கொள் என்கின்றார்.

தந்தையர் நாடென்ற பேசினிலே ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே என்கிறார் பாரதியார். தேசப் போராளிகள் பற்றிய உண்மை வரலாற்றைத் தெரிந்துகொள்ள வேண்டும். நம் தமிழகத்தில் நடந்த நிகழ்வுகள் பலர் அறியாதவை. சின்ன அண்ணாமலை என்ற இளைஞர், இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு, காவல்துறையின் கட்டுப்பாட்டை மீறி கூட்டம் போட்டதால் கைது செய்யப்பட்டார். திருவாடானை சிறையில் அடைக்கப்பட்ட இவரை பொதுமக்கள் சிறையை உடைத்து மீட்டனர். ஆங்கில அரசும், அன்றைய காவல் துறையும் உறைந்து போனது. வடக்கே இருந்த காந்தியே வியந்து போய், மக்களே சிறையை உடைத்து மீட்ட இளைஞரை சந்திக்க விரும்பினார்.

நாடு விடுதலைக்குப் பின்னும் பல பதிப்பகங்களை உருவாக்கியதுடன், தமிழ் இலக்கியத்தை தன் பதிப்பகம் மூலம் எந்தவித எதிர்பார்ப்பின்றி வளர்த்தார். சென்னை உயர்நீதி மன்ற நீதிபதியாக இருந்த மதுரை சுப்ரமணிய அய்யருக்கு சொந்த வீட்டுடன் கூடிய பெரிய தோட்டம் சென்னை மெரினா கடற்கரைக்கு எதிரில் இருந்தது. அன்றைய ஆங்கில அரசு, பெண்கள் கல்விக்காக கல்லுாரி கட்ட அந்த இடம் பொருத்தமாக இருக்கும் எனக் கேட்க, அந்த இடத்தை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கொடுத்தார். அவர் பெயரில் கூட கல்லுாரி வர வேண்டும் என எதிர்பார்க்காத பெருமகனார் அவர். அந்த இடம் தான் ராணி மேரி கல்லுாரி.

இதைப் போல பல உண்மை வரலாறுகள் இருக்கின்றன. கோயில்கள் ஏன் மன்னர்களால் கட்டப்பட்டன அவை வழிபாட்டுக்கு மட்டுமல்ல மக்களுக்காக. அதாவது போர், இயற்கை சீற்றம் ஏற்பட்டால் மக்கள் ஒரே இடத்தில் தங்குவதற்கான பெரிய இடமாக கோயில்கள் இருந்திருக்கின்றன. கோயில்கள் மூலம் பல தொழில்கள் அன்றும் இன்றும் வளர்ந்து கொண்டிருக்கின்றன. சிறு கடைகள், உணவுப் பொருள்கள், அபிஷேகப் பொருட்கள், வழிபாட்டு பொருட்கள் என வணிகம் மக்களை இணைக்கிறது.

காசிக்கு இணையாக தென்காசியில் விஸ்வநாதர் கோயில் கட்டிய பராக்கிரம பாண்டியன் சிறந்த சிவ பக்தன். இந்தக் கோயிலில் ஏதேனும் பின்னொரு காலத்தில் பழுது ஏற்படுமாயின் அப்போது அதை நீக்கி கோயிலைப் பராமரிப்பவருக்கு இப்போதே பணிந்து வணங்குகிறேன் என கல்வெட்டில் செதுக்கி வைத்திருக்கிறான் அந்த மாமன்னன்.

ஆராயினும் இந்தத் தென்காசி மேவும்

பொன் ஆலயத்து

வாராததோர் குற்றம் வந்தால் அப்போது

அங்கு வந்து அதனை

நேராகவே யொழித்துப் புரப்பார்களை நீதியுடன்

பாரோர் அறியப் பணிந்தேன்

பராக்கிரம பாண்டியனே

இன்னொரு பாடலில் இக்கோயிலில் 'திரி சேர் விளக்கு' எனக் காப்பவர்களின் பாதம் பணிகின்றேன் என்கிறான் பெரும் மன்னன். கோயில்கள் கடவுளுக்காக, உண்மையான பக்தர்களுக்காக மட்டுமே என்பதை இது போன்ற வரலாறுகள் நமக்குத் தெரிவிக்கின்றன.

இந்த தேசம் எப்படிப்பட்டது - வாழ்பவர்கள் இந்த தாய் நாட்டை எப்படி போற்றுகிறார்கள் என்பதை, எங்கள் தாய் என்ற பாடலில்,

நல்லறம் நாடிய மன்னரை வாழ்த்தி

நயம்புரிவாள் எங்கள் தாய் - அவர்

அல்லவ ராயின் அவரை விழுங்கிப்பின்

ஆனந்தக் கூத்திடுவாள்.

என்றே பாடுகிறார் பாரதியார். அப்படிப்பட்ட வரலாற்றைத் தொடர்ந்து படித்துத் தெரிந்துகொண்டு அடுத்த தலைமுறைக்கும் உண்மைகளைக் கொண்டு செல்லவேண்டும் என்பதே மீசைக் கவிஞரின் ஆசை.

-ஆத்திசூடி தொடரும்

முனைவர் தென்காசி கணேசன்

94447 94010






      Dinamalar
      Follow us