ADDED : அக் 23, 2025 02:55 PM

முருக பக்தர் ஒருவருக்கு திருமணமாகி ஐந்து வருடமாக குழந்தை இல்லை. கந்தசஷ்டி விரதமிருக்க முருகன் அருளால் மகன் பிறந்தான். குழந்தைக்கு 'சஷ்டி நாதன்' என பெயர் சூட்டி வளர்த்தார். மகனும் பக்தனாக இருக்க வேண்டும் என விரும்பினார்.
முருகனின் கதைகள், அடியார்களின் வாழ்க்கை வரலாற்றை சொல்லிக் கொடுத்தார் தந்தை. இதனால் அவனது மனதில் எப்போதும் முருக நாமம் ஒலித்தது. படிப்பை முடித்ததும், முழுநேரமும் முருகனுக்கே சேவை செய்ய விரும்பினான். சேவை செய்தால் முருக தரிசனம் கிடைக்கும் என நம்பினான்.
சஷ்டி, கார்த்திகை நாட்களில் விரதம் இருந்து அன்னதானம் செய்தான். இப்படி ஆண்டுகள் பல ஓடின. ஆனாலும் தரிசனம் கிடைக்கவில்லையே என வருந்தினான். தினமும் கண்ணீருடன், ''முருகா! உன்னை நினைத்து உருகும் எனக்கு காட்சி தருவாயா'' என வேண்டினான். மனம் இரங்கினார் முருகன்.
அன்று கந்தசஷ்டி...
அன்னதான மண்டபத்தில் பக்தர்கள் சாப்பிட அமர்ந்திருந்தனர். அப்போதுதான் அவனுக்கு அற்புதக்காட்சி கிடைத்தது. ஆம்! சஷ்டிநாதனின் முன் ஆறுமுகம், பன்னிரு கைகளுடன் நேரில் வந்தார் முருகன். அதே சமயம் மண்டபத்தில் சாப்பிட வந்த பக்தர்களின் ஆரவாரம் காதில் விழுந்தது. படபடப்புடன், ''முருகா! எத்தனையோ காலம் கழித்து எனக்காக வந்துள்ளாய். ஆனால் பக்தர்களை காக்க வைத்து விட்டு, நான் இங்கிருப்பது முறையல்ல. இதோ... உணவு பரிமாறியதும் வருகிறேன்'' எனச் சொல்லி விட்டு ஓடினான்.
பேச்சுக்காக வருகிறேன் எனச் சொல்லலாமே தவிர, ஆயிரம் பேருக்கு உணவு பரிமாறுவது என்றால் சாதாரண விஷயமா? நாலு மணி நேரம் கடந்தது. எல்லா வேலைகளும் முடிந்த பின் சன்னதிக்கு விரைந்தான். மனதில் ஒரு சந்தேகம் எழுந்தது.
'தேடி வந்த முருகனை அலட்சியப் படுத்தி விட்டேனே... காத்திருப்பாரா' என யோசித்தான்.
என்ன ஆச்சரியம்!
முருகன் அதே இடத்தில் காத்து நின்றார். தாமதத்திற்கு மன்னிப்பு வேண்டி பாதத்தில் விழுந்தான். ''வருந்தாதே சஷ்டிநாதா... எனக்கு செய்யும் பூஜையை விட அடியாருக்கு உணவிடும் பணியே முக்கியம். நான் காத்திருப்பது பெரிதல்ல. கடமையை செய்வதே என்னை வணங்குவதற்கு சமமானது'' என்றார். கந்தவேலனான முருகனுக்கு ஆனந்தக் கண்ணீரால் அபிஷேகம் செய்தான் சஷ்டிநாதன்.