ADDED : அக் 23, 2025 03:12 PM

அன்னவரம் கோயில் பிரசாதம்
ஸ்ரீவீர வெங்கட சத்யநாராயண சுவாமி கோயில் ஆந்திரா கிழக்கு கோதாவரி மாவட்டம் அன்னவரம் என்ற இடத்தில் உள்ளது. இத்தலம் பம்பா நதிக்கரையில் கடல் மட்டத்தில் இருந்து 300 அடி உயரத்தில் உள்ள ரத்னகிரி மலை மீது உள்ளது.
கோதுமை ரவை, சர்க்கரை, வெல்லம், நெய்யால் செய்யப்படும் இனிப்பு அன்னவரம் கோயிலில் பிரசாதமாக தரப்படுகிறது. இதை 'ஸ்ரீஸ்வாமி வாரி பிரசாதம்' என்கின்றனர். மேலும் இங்கு 'பாங்கி' என்றொரு இனிப்பு பிரசாதமும் கிடைக்கிறது.
மலைகளின் அதிபதியான மேருவிற்கும் அவரது மனைவி மேனகாவிற்கும் பத்ரா, ரத்னாகர் என இரண்டு மகன்கள் இருந்தனர். மகாவிஷ்ணுவின் பக்தரான பத்ரா கோதாவரி நதிக்கரையில் மகாவிஷ்ணுவை நோக்கி தவம் செய்தார். மகாவிஷ்ணுவும் காட்சி கொடுத்த போது மோட்சம் அளித்தார். அந்த இடம் தற்போது 'பத்ராசலம்' எனப்படுகிறது. பத்ராவின் சகோதரர் ரத்னாகர் தன் சகோதரரைப் பின்பற்றி பம்பா நதிக்கரையிலுள்ள ஒரு மலையில் தவம் செய்தார். மகாவிஷ்ணு அவருக்கும் மோட்சம் அளித்தார். அந்த மலையில் ஸ்ரீவீர வெங்கட சத்யநாராயண சுவாமியாக எழுந்தருளினார். அந்த மலை 'ரத்னகிரி' என்றும் அங்குள்ள ஊர் 'அன்னவரம்' என்றும் அழைக்கப்படுகிறது.
கோயில் தேர் போன்ற அமைப்பில் நாலாபுறமும் பெரிய சக்கரங்களுடன் வடிவமைக்கப்பட்டு உள்ளது. கோயிலுக்குள் நுழைந்ததும் கொடிமரம், அதனருகில் பெரிய துாண் ஒன்றும் உள்ளன. துாணில் கருவறையில் உள்ளது போல அர்ச்சாவதாரங்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளன. இரண்டு அடுக்குகளாக அமைந்த இக்கோயிலின் கீழ்புறத்தில் எந்திரமும் மேற்புரத்தில் சிலைகளும் உள்ளன. எந்திரத்தின் நாலா பக்கமும் கணபதி, பாலா திரிபுரசுந்தரி, சத்யநாராயண சுவாமி, மகேஸ்வர சுவாமி உள்ளனர்.
கருவறையில் சத்யதேவர் அடிபாகத்தில் பிரம்மதேவனாகவும் நடுவில் சிவபெருமானாகவும் மேல்பாகத்தில் மகாவிஷ்ணுவாகவும் காட்சியளிக்கிறார். மூலவரின் இடதுபுறத்தில் ஸ்ரீஅனந்தலட்சுமியும் வலது புறத்தில் லிங்கரூபத்தில் பாணத்தில் முகஅமைப்போடு கூடிய கவசத்துடன் சிவன் இருப்பது சிறப்பு.
விநாயகர், மகாலட்சுமி, பார்வதி, சிவன், அஷ்டதிக்கு பாலர்கள், ராமர், வனதுர்கை, சூரியநாராயணர், பாலா திரிபுரசுந்தரி, மகேஸ்வரர் சன்னதிகள் இங்குள்ளன. கிராம தேவதையான நெரெல்லம்மா கோயில் மலை அடிவார கிராமத்தில் உள்ளது.
ஆவணி வளர்பிறை துவிதியை திதி, மகம் நட்சத்திரத்தன்று பெருமாள் அன்னவரத்தில் அங்குடு மரத்தின் கீழ் காட்சியளித்தார். அந்த மரமே நெரெல்லம்மா என்னும் கிராம தேவதையாக மாறியது.
அன்னவரத்தில் உள்ள ரத்னகிரி மலையில் மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, சிவன் இணைந்து தனித்துவமான வடிவில் ஸ்ரீசத்யநாராயண சுவாமி தோன்றினார்.
கல்வி, செல்வம், வியாபாரத்தில் வெற்றி பெறவும், பிரச்னை, நோயில் இருந்து விடுபடவும் பக்தர்கள் சத்யநாராயண விரதத்தை மேற்கொள்கின்றனர்.
சித்திரை, ஆவணி மாத பவுர்ணமி அன்று சத்யநாராயண விரத பூஜை மேற்கொள்ளப்படுகிறது. இங்கு சத்யநாராயண விரதம் மேற்கொள்ள சிறுசிறு ஹோம குண்டங்கள் உள்ளன.
ஒரே சமயத்தில் ஆயிரத்து ஐநுாறு பக்தர்கள் இங்கு சத்யநாராயண விரதம் மேற்கொள்ளலாம். விரதத்தை முடித்த பின்னர் பெருமாளை தரிசிக்கின்றனர். ஆந்திராவைச் சேர்ந்த புதுமணத் தம்பதியர் முதல் ஆண்டில் இங்கு தங்கி சத்யநாராயண விரத பூஜையை மேற்கொள்கின்றனர். மறுஆண்டு முதல் வீட்டிலேயே விரதத்தைக் கடைபிடிக்கின்றனர்.
மலைக்கோயிலை அடைய படிக்கட்டு, வாகனம் செல்லும் பாதை என இரு பாதைகள் உள்ளன. விசாகப்பட்டினத்தில் இருந்து 120 கி.மீ., காக்கிநாடாவில் இருந்து 50 கி.மீ., ராஜமுந்திரியில் இருந்து 80 கி.மீ., தொலைவில் அன்னவரம் உள்ளது. விஜயவாடா, விசாகப்பட்டினம் வழியாகச் செல்லும் ரயில்கள் அன்னவரத்தில் நிற்கும். அங்கிருந்து 3 கி.மீ., தொலைவில் கோயில் உள்ளது.
காலை 6:00 - 12:30 மணி; மதியம் 1:00 - 9:00 மணி வரை நடை திறந்திருக்கும்.
அன்னவரம் செய்யத் தேவையானவை
கோதுமை ரவை அல்லது பன்சி ரவை - 1 கப்
சர்க்கரை - 1 கப்
வெல்லம் - 1 கப்
ஜாதிக்காய் - சிறிய துண்டு
ஏலக்காய் - இரண்டு
குங்குமப்பூ - சிறிதளவு
நெய் - 75 மி.லி.,
செய்முறை
கோதுமை ரவையை கடாயில் போட்டு சிறு தீயில் நன்றாக சிவக்க வறுக்கவும். ஜாதிக்காய், ஏலக்காய், குங்குமப்பூ மூன்றையும் சேர்த்து பொடியாக்கவும். அகலமான பாத்திரத்தில் மூன்று கப் தண்ணீரை விட்டு கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதித்ததும் வறுத்து வைத்த கோதுமை ரவையை அதில் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டுக் கிளறவும். பின்னர் 15 நிமிடம் வேக வைக்கவும்.
கோதுமை ரவை வெந்த பின் அதில் ஒரு கப் சர்க்கரையை சேர்த்துக் கிளறவும். 20 நிமிடம் கழித்து அதில் பொடித்த வெல்லத்தைச் சேர்த்துக் கிளறவும். வெல்லம் உருகி அதில் சேர்ந்து விடும். சிறிது நேரம் கழித்து அதில் நெய் சேர்த்து கிளறவும். ஐந்து நிமிடம் அளவான தீயில் வைக்கவும்.
பொடித்து வைத்த ஜாதிக்காய், ஏலக்காய், குங்குமப்பூவைச் சேர்த்துக் கிளறவும். சிறுதீயில் ஐந்து நிமிடம் வேக விட்டு இறக்கவும். ஸ்ரீவீர வெங்கட சத்யநாராயண சுவாமிக்கு விருப்பமான அன்னவரம் பிரசாதம் தயார்.
-பிரசாதம் தொடரும்
ஆர்.வி.பதி