sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 23, 2025 ,ஐப்பசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

தெய்வீக கதைகள் - 31

/

தெய்வீக கதைகள் - 31

தெய்வீக கதைகள் - 31

தெய்வீக கதைகள் - 31


ADDED : அக் 23, 2025 03:12 PM

Google News

ADDED : அக் 23, 2025 03:12 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மடங்கிய விரல்

மகாபாரதப் போரில் பதினேழு நாள் முடிந்தது. எத்தனை பேரை இழந்தால் தான் என்ன? தான் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் துரியோதனன் தன்னால் முடிந்த வரை பாண்டவருடன் போரிட்டு களைப்பு அடைந்தான். பதினெட்டாம் நாளான கடைசி நாளில் பீமனுடன் போரிட முடியாமல் தோற்றுப் போய் போர்க்களத்தில் வீழ்ந்து கிடந்தான். பாண்டவரும், கண்ணனும் அவனது உயிர் ஊசலாடுவதைப் பார்த்தபடி நின்றிருந்தனர். அச்சமயம் தான் கண்ணனும், மற்றவர்களும் அவன் வலது கையை பார்த்த போது விரல்கள் ஐந்தும் மடங்கி இருப்பதைக் கவனித்தனர்.

அதைக் கண்டதும் தர்மர், “என்னாச்சு இவனுக்கு? வலதுகை விரல்கள் யாவும் மடங்கி இருக்கிறதே! இறப்பவருக்கு மனக்குறை இருந்தால்தான் இப்படி விரல் மடங்கும் என்பார்கள். துரியோதனனுக்கு என்ன மனக்குறையோ... தெரியவில்லையே” என்றார். அருகில் இருந்த சகாதேவன், “இவனுக்கு ஐந்து மனக்குறைகள் இருப்பதாக தோன்றுகிறது. அந்த ஐந்தும் நிறைவேறி இருந்தால் தனக்கே வெற்றி கிடைத்திருக்கும் என எண்ணியிருப்பான். அவை நிறைவேறாத ஏக்கத்தால்தான் விரல்கள் மடங்கி விட்டன. அதுவும் உயிர் போகாமல் ஊசலாடுகிறது” என்றான். உடனே தர்மர், “ அந்தக் குறைகள் என்ன” என சகாதேவனைக் கேட்டார்.

“நமக்காக கண்ணன் இவனிடம் துாது போன போது, அவர் விதுரனின் வீட்டில் விருந்துண்டார் அல்லவா? அதனால் விதுரனிடத்தில் கோபம் கொண்டு அவரை நிந்தனை செய்தான் துரியோதனன். மனம் தாங்காத விதுரன் தான் நடக்கவிருக்கும் போரில் பங்கேற்க மாட்டேன் எனச் சொல்லி தன் வில்லை முறித்தார். அப்படி அவர் செய்யாமல் இருந்தால், துரியோதனனின் பக்கம் பலம் அதிகமாகி இருக்கும். இது முதல் குறை”

“ஆம். அது பெருங்குறைதான். அடுத்த குறை என்ன?”

“ஒருமுறை கண்ணன் சூழ்ச்சியுடன் தன் மோதிரத்தை நழுவ விட்டு, அதை அசுவத்தாமாவை விட்டு எடுக்கச் சொன்னார். இருவரும் மோதிரத்தை எடுக்க முயற்சித்த போது துரியோதனனின் மனதில் ஒரு சந்தேகம் வந்தது. அசுவத்தாமன் கண்ணனுக்கு ஏதோ வாக்குக் கொடுக்கிறான் எனக் கருதினான். அதனால் போரில் அசுவதாமனுக்கு படைத் தலைமைப் பொறுப்பு தரப்படவில்லை. அசுவத்தாமன் சேனாதிபதியாகி இருந்தால் துரியோதனனுக்கு வெற்றி கிடைப்பது நிச்சயம்! அப்படி நடக்காதது இரண்டாவது குறை”

“நீ சொல்வது உண்மையே. அசுவத்தாமன் சேனாதிபதியாகி இருந்தால் நம் படைக்குப் பெரிய சோதனை உண்டாகி இருக்கும். அதுவும் பெருங்குறை என்பதில் ஐயமில்லை” என்றார் தர்மர்.

“நம் தாயாருக்கு கர்ணன் சத்தியம் அளித்தான் அல்லவா?” என்றான் சகாதேவன்

“எதைச் சொல்கிறாய் என புரியவில்லையே'' என்றார் தர்மர்.

“நம் தாயாரிடம், இரண்டாவது முறையாக நாகாஸ்திரத்தை விட மாட்டேன் என கர்ணம் சத்தியம் செய்தான் அல்லவா? அதன்படியே அதை அவன் பயன்படுத்தவில்லை. அப்படி பயன்படுத்தி இருந்தால் அர்ஜுனன் உயிர் தப்ப வாய்ப்பில்லை. இது மூன்றாவது குறை”.

தர்மர் தன் சகோதரன் அர்ஜுனனை அன்போடு பார்க்க சகாதேவன் மேலும் தொடர்ந்தான்.

“களப்பலிக்கு நாள் குறித்து விட்டு, அரவானையும் உடன்படச் செய்திருந்தனர் துரியோதனனைச் சேர்ந்தவர்கள். ஆனால் கண்ணன் தன் சாதுர்யத்தால், அமாவாசைக்கு முதல் நாளே சூரியன், சந்திரனை சந்திக்க வைத்து அமாவாசையை உண்டாக்கினார். அரவானின் உறுப்புகளைப் பலியாக கொய்யச் செய்து விட்டார். அப்படி செய்யாமல் கவுரவர்களுக்கு முதற்பலியாக அரவான் கிடைத்திருந்தால் துரியோதனனுக்கு வெற்றி கிடைத்திருக்கும். அது மாறிப் போனது நான்காவது குறை”

“நீ சொன்னது சரியே... கடைசிக்குறை என்ன? அதையும் சொல்லிவிடு. கேட்க ஆவலாக இருக்கிறோம்” என்றார் தர்மர்.

“கடைசிநாள் போரில் திடீரென யாருக்கும் தெரியாமல் குளத்தில் புகுந்து நீர்த்தம்பனம் செய்து மந்திரத்தை உருவேற்றத் தொடங்கினான் துரியோதனன். அது பலித்திருந்தால் இறந்து போன அத்தனை வீரருக்கும் உயிர் வந்திருக்கும். ஆனால் நம் சகோதரன் பீமன் இடையில் புகுந்து, அவனை கூவி அழைத்ததால், துரியோதனன் மானம் தாங்காமல் மந்திரத்தைப் பாதியிலேயே கைவிட்டு குளத்தில் இருந்து ஓடி வந்தான். நீர்த்தம்பன மந்திரம் நிறைவேறாததே ஐந்தாவது குறை” என சொல்லி முடித்தான் சகாதேவன்.

தர்மர் அதைக் கேட்ட பிறகு, “எல்லாம் எம்பெருமான் கண்ணனின் திருவருளால் கிடைத்த பேறு” என்றார். “இவன் சொன்னதைக் கேட்டாயா கண்ணா?” என்றார் தர்மர். “கேட்டேன். இந்த ஐந்து குறைகள் காரணமாக துரியோதனின் கை மடங்கியிருந்தால் அது தவறு என நான் உறுதியாகச் சொல்வேன்” என மறுத்தான் கண்ணன்.“ஏன் அப்படி சொல்கிறாய்” எனக் கேட்டார் தர்மர்.

“அந்த ஐந்து குறைகள் நிறைவேறியிருந்தால் கூட துரியோதனனால் வெற்றி பெற முடியாது. அந்தக் குறைகளுக்கு மாறாக வேறு நிகழ்வுகள் நடந்திருக்கும்” என்றான் கண்ணன். “வேறு நிகழ்வா... புரியவில்லையே கண்ணா” என்றார் தர்மர். தர்மர் கேட்டதற்கு இணங்க கண்ணனும் திருவாய் மலர்ந்தார். ''விதுரனின் வில் முறியாமல் இருந்திருந்தால், நீ யானையின் மேல் ஏறிப் போர் செய்வாய். உன் எதிரே விதுரனால் நிற்க முடியாது போயிருக்கும்” என்றான் கண்ணன்.

இதைச் சொன்னதும் துரியோதனனின் மடங்கிய விரல்களில் ஒன்று நிமிர்ந்தது. அதைப் பார்த்த பாண்டவர் வியந்தனர். மேலும் கண்ணன் தொடர்ந்தான். “இரண்டாவது குறையாக அசுவத்தாமா படைத் தலைவனாக ஆகியிருந்தால் நான் சக்ராயுதத்தை ஏந்திப் போர் செய்வேன். கர்ணனும் இரண்டாம் முறை நாகாஸ்திரத்தை செலுத்தியிருந்தால் அர்ஜுனன் தன் பாசுபத அஸ்திரத்தை விட்டிருப்பான்” என்றான் கண்ணன்.

எல்லோரும் கண்ணன் கூறுவதை ஆர்வத்துடன் கேட்டனர். ஒவ்வொன்றுக்கும் மாற்றுக் கருத்து கூறக் கூறத் துரியோதனனின் விரல்கள் ஒவ்வொன்றாக நிமிர்ந்தன. “கவுரவர்கள் முதல் பலியாக அரவானை தந்திருந்தால் பீமன் தன் கதாயுதத்தை வீசி வெற்றி பெற்றிருப்பான். துரியோதனன் நீர்த்தம்பன மந்திரம் நிறைவேற்றியிருந்தால் நகுலன் வாளெடுத்துப் போர் புரிவான். அதனால் உயிர் துறந்து மீண்டும் எழுந்தவர்கள் யாவரும் மாண்டு விடுவர்” என கண்ணன் சொல்லி முடிக்க, துரியோதனனின் கை விரல்கள் யாவும் நிமிர்ந்தன. அவன் உயிரும் போனது. இந்த அதிசயத்தைக் கண்ட பாண்டவர்கள் கண்ணனைத் துதித்தனர்.

விதுரன்வில் நிற்கு மாயின்

மெய்வல்லான் யானை ஏறும்;

அதிர்பெறும் யுத்தம் தன்னில்

அசுவத்தா மாவே காத்தால்

எதிர்நிற்கும் யானே என்கை

ஆழியை எடுப்பேன்; கர்ணன்

முதிரும்பாம் பதனைத் தொட்டால்

முக்கண்ணன் படையால் தீரும்

(மெய்வல்லான் - தர்மன்;ஆழி- சக்கரம்; பாம்பு - நாகாஸ்திரம்; முக்கண்ணன் படை - சுபதாஸ்திரம்; தொட்டால் - ஏவினால்)

இந்தப் பாடல்கள் தனியே வாய்மொழியாக வழங்குகின்றன. இவை யாவும் நல்ல நடையில் இலக்கணப்படி அமையவில்லை. ஆயினும் இந்நாட்டில் வழங்கும் கதையைத் தனக்குள்ளே பொதிந்து வைத்திருக்கிறது. இப்பாடல் கிடைத்ததற்கு நாம்தான் நன்றி சொல்ல வேண்டும்.

-அடுத்த வாரம் முற்றும்

umakbs@gmail.com






      Dinamalar
      Follow us