ADDED : நவ 20, 2025 01:57 PM

மவுனத்தை போற்று
மோனம் என்றால் மவுனம். அமைதியாக தனி இடத்தில் அமர்ந்து ஒன்றும் செய்யாமல் பேசாமல் ஒதுங்குவது. அதாவது தன் பொறுப்பை தட்டிக் கழித்து கடமையில் இருந்து தப்பித்து ஓடுவதாகும்.
ஆனால் பாரதியார் கூறும் மவுனம், கடமையைச் செய், தொழிலைச் செய் - எப்போதும் தொழில் செய்து கொண்டே இரு என்பதே. ஆனால் எடுத்துக் கொண்ட வேலையில் கவனம் செலுத்தி ஆழ்ந்து சிந்தித்துச் செயல்படுவதாகும். அப்போதுதான் அந்த செயலில் முழு வெற்றியைக் காண முடியும் என்ற பொருளில்தான் 'மெளனம் போற்று' என்கிறார்.
மூதறிஞர் ராஜாஜி ஒருமுறை ரயிலில் பயணம் செய்தார். திடீரென ஜன்னல் அருகில் பயணித்த ஒருவரின் கைக்கடிகாரம் கீழே விழுந்தது. சக பயணிகள் அனைவரும் 'ஐயோ' என கூச்சலிட்டனர். கடிகாரத்தை தவறவிட்டவர் விலை உயர்ந்த கடிகாரம் போய்விட்டதே என புலம்பினார். ராஜாஜி மட்டும் அமைதியாக இருந்தார். எல்லோரும் அவரின் அமைதியை, மவுனத்தை ரசிக்கவில்லை. அடுத்த ஸ்டேஷனில் ரயில் நின்றது. தொலைத்தவரிடம், 'இங்கிருந்து 140வது கம்பத்தின் கீழ் உங்கள் கைக்கடிகாரம் விழுந்திருக்கிறது' என்றார் ராஜாஜி. எல்லோரும் கத்திக் கொண்டு இருந்தபோது, மவுனமாக இருந்து கொண்டு கடிகாரத்தை தவறவிட்ட இடத்தில் இருந்து கம்பங்களை எண்ணிக்கொண்டு வந்திருக்கிறார். அவரின் புத்திக் கூர்மையை அனைவரும் பாராட்டினர். அதனால் தான் அவர் 'ஸ்தித ப்ரக்ஞன்' எனப்படுகிறார்.
மூதறிஞர் என்பதென்ன தானாக சூட்டிக் கொண்ட பட்டமா என்ன ?
மோன நிலை என்பது தவத்தின் ஒரு பகுதி, ஆழ்ந்த யோகநிலை, சிந்தனை. ஒரு வேலையைச் செய்து முடிக்க இது அவசியம். அப்போது தான் அந்த வேலையானது சிறப்பாக அமையும். மோனம் என்பது ஐம்புலன்களையும் ஒருமுகப்படுத்தி பகுத்தறிவுடன் சிந்திப்பதாகும்.
அருணகிரிநாதர் கந்தரனுபூதியில், 'சும்மா இரு - சொல் அற' என்கிறார். 'சும்மா இருக்கச் சொல்வதுடன் எதுவும் பேசாமல் இரு' என்கிறார். மவுனமும் புன்னகையும் இருந்தால் உலகில் சாதனை படைக்கலாம். சக்தி வாய்ந்த ஆயுதங்கள் இவை. புன்னகை பிரச்னையைத் தீர்க்கும். மவுனமோ பிரச்னைகளை வர விடாமல் தடுக்கும். 'மவுனம் சர்வார்த்த சாதகம்' என்கிறது சம்ஸ்கிருதம்.
எல்லாவற்றையும் மவுனத்தால் சாதிக்கலாம். கோபம் எப்படி நோயை உண்டாக்குமோ, அதுபோல புன்னகை என்பது சந்தோஷமான மனநிலையை உண்டாக்கும். அதற்கு அமைதியான மனம் - வேண்டும். சொல்லின் செல்வன் என அனுமன் ஏன் போற்றப்படுகிறான் என்றால் அவனின் சொல்லாற்றல் மட்டுமல்ல; எதையும் சொல்லாமலே இருக்கும் ஆற்றலும்தான்!
இன்னும் சரியாகச் சொல்லப் போனால், மவுனம் என்பதே சொல்லாற்றலின் ஒரு பகுதிதான். ஒரு விஷயத்தைச் சொல்வது கலை என்றால், ஒரு விஷயத்தைச் சொல்லாமல் சொல்வது, அதை விட நுணுக்கமான கலை. மவுனத்தைப் பேச வைக்கிற கலை அது!.
அனுமன் பேச வேண்டிய நேரத்தில் மட்டும் சரியாகப் பேசினான். குருவைப் பற்றிப் பேசும் போது ஆதிசங்கரர், தட்சிணாமூர்த்தி அஷ்டகத்தில் சொல்கிறார் - அதாவது, குருவானவர் எதுவும் பேசாமல் மவுனத்தாலேயே உபதேசிக்கிறார். மவுனத்தாலேயே விளக்குபவரும், இளையவரும், மூத்த முனிவர்களை சீடர்களாக கொண்டவரும், ஆச்சாரியர்களில் தலைசிறந்தவரும், சின்முத்திரை காட்டுபவரும், ஆனந்த ரூபியும், தன் ஆன்மாவிலேயே ரசிப்பவரும், எப்போதும் புன்னகை புரியும் தட்சிணாமூர்த்தியைப் போற்றுகிறேன் என்கிறார்.
சித்ரம் வடதரோர் - மூலே வ்ருத்தா சிஷ்யா குருர்யுவா |
குரோஸ்து மௌனம் வ்யாக்யானம் சிஷ்யாஸ்து சின்னஸம்சயா: ||
அதாவது ஆலமரத்தடியிலே ஒரு ஆச்சர்யம்! சீடர்கள் வயதானவர்கள். குருவோ இளையவர்! குருவின் விளக்கம் மவுனமாகவே உள்ளது. ஆனாலும் சீடர்கள் சந்தேகம் தீர்ந்து விடுகிறது.
அறிவாளிகளின் அற்புத படைப்புக்கள், புலவர்களின் அரிய கவிதைகள், இலக்கியங்கள், விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் எல்லாம் ஆழ்ந்த சிந்தனைகளில் கிடைக்கும் கருவூலங்களே. இதையே 'மோனம் போற்று' என்கிறார் பாரதியார்.
பேசாத எத்தனையோ விஷயங்களை, ஒரு மவுனம் சொல்லி விடும். எதை, எப்போது பேச வேண்டும், எப்படி பேச வேண்டும் என்றெல்லாம் தெரிந்து வைத்திருப்பது அவசியம். ஆனால் எப்போது பேசாமல் மவுனமாக இருக்க வேண்டும் என தெரிந்திருப்பதுதான் அதை விட அவசியம்.
மவுனத்தை அன்றாட வாழ்வில் நடைமுறைப்படுத்தினால் சண்டையிடாமல், விவாதிக்காமல், உணர்ச்சி வசப்பட்டு கட்டுப்பாட்டை இழக்காமல் நம்மை ஒழுங்குபடுத்தலாம். ஆதிசங்கரர், ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர் போன்றோர் மவுனத்தாலும், அளவான பேச்சாலும் வாழ்ந்து காட்டியவர்கள்.
மவுனம் கடைப்பிடிப்பதால் மனம் ஒருநிலைப்படும். குழப்பம் நீங்கும். அமைதி நிலைக்கும். அதனால்தான் பாரதியார்,
நல்லதோர் வீணை செய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி சிவசக்தி - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்து விட்டாய்.
வல்லமை தாராயோ - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
என்றும்,
சிவசக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்,
அசைவறு மதிகேட்டேன் - இவை
அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ
என பராசக்தியிடம் வேண்டுகிறார்.
'பாரதி நினைவுகள்' என்ற நுாலில் யதுகிரிஅம்மாள் சில குறிப்புகளை எழுதும் போது, பாரதி சில காலம் மவுன விரதம் இருந்தார். இந்த காலகட்டத்தில் பாடுதல், பேசுவதை நிறுத்தி விட்டார். மவுனத்தைப் பழகும் போது, சுருக்கமாகப் பேசும் ஆற்றல் தானாக வரும். பேச்சைக் குறைத்து விட்டால் நேரம் மிச்சமாகும்.
உங்களால் சுருக்கமாகப் பதில் சொல்ல முடியுமா?' என வாசகர் கேட்ட கேள்விக்கு எழுத்தாளர் சாவி சொன்ன பதில் 'ம்' மட்டுமே. சண்டையின் போது மவுனமாக இருந்தால் பிறகு சண்டையே ஏற்படாது. நோயாளிகள் சில நாள் பேசாமல் இருந்தால் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நோய் நீங்கும். மவுனத்தை கடைப்பிடித்த தலைவர்களில் குறிப்பிடத்தக்கவர் ராஜாஜி, பாபாவினோபாஜி, கவியோகி சுத்தானந்த பாரதியார்.
மவுனத்தின் சிறப்பை உணர்ந்தால் வாழ்வில் சாதிக்கலாம். அலைபேசியில் பேசுவது முதல் விவாதம் செய்வது வரை இது பொருந்தும். நமக்கு பிடிக்காத நிகழ்வு நடக்கும் போது எதிர்ப்பை வெளிப்படுத்த மவுனமே சிறந்த ஆயுதம். வெளிப்புற அமைதி (மவுனம்) சக்தி வாய்ந்தது. ஒரு வாக்குவாதத்தில் இருந்து விலகிச் செல்லும் போது இதை உணர முடியும். மனதிற்கும், ஆன்மாவிற்கும் மவுனம் மிக நல்லது. நம்மை அவமானப்படாமல் காக்கும்.
மவுனத்தை கடைப்பிடிப்பது சிரமம் இல்லை என்பதற்கான காரணங்களை பாருங்கள்.
* முதலில் தினமும் 15 - 30 நிமிடம் வரை மவுனமாக இருப்பது நல்லது. ஒரு மணி நேரம் வரை அதிகப்படுத்தலாம்.
* மனதிற்கான விரதம் இது. குழப்பம், சோகத்தை போக்கி, எண்ணத்தை சீர்படுத்தும்.
* ஆன்மிகம் சார்ந்தவர்கள் மவுனத்தை அன்றாட பயிற்சியில் ஒன்றாக பின்பற்றலாம்.
* வியாழன், அமாவாசை, பவுர்ணமி, சஷ்டி நாட்களில் மவுன விரதம் நன்மை தரும்.
* சண்டை, வாக்குவாதத்தின் போது மவுனமாக இருப்பது, கோபத்தில் கத்துவதை விட அதிக பலம் தரும். அவமானத்தை தவிர்க்க இது உதவும். மனதிற்கு அமைதி தரும்.
கண்ணதாசன் பாடலில்,
சொல் என்றும் மொழி என்றும்
பொருள் என்றும் இல்லை
சொல்லாத சொல்லுக்கு
விலை ஏதும் இல்லை
மவுனம் தான் சொல்லாத சொல். வீண் பேச்சைக் குறைத்து, மவுனத்தை முடிந்த வரை பின்பற்றினால் அது நம் மனதைப் பாதுகாக்கும். உறவை, நட்பை, நம் பெயரைப் பாதுகாக்கும் என்பதே பாரதியார் கூறும் 'மெளனம் போற்று' என்ற ஆத்திசூடி வரிகளாகும்.
-ஆத்திசூடி தொடரும்
முனைவர் தென்காசி கணேசன்
94447 94010

