ADDED : நவ 20, 2025 01:59 PM

அழகர்கோவில் தோசை
மதுரை மாவட்டத்தில் உள்ள அழகர்கோவிலில் அமைந்த வைணவத்தலம் கள்ளழகர் கோயில். சுந்தரவல்லித் தாயார் சமேத பரமசுவாமி (கள்ளழகர், சுந்தரராஜப் பெருமாள்) கோயிலில் தினமும் தோசை நைவேத்யம் செய்யப்படுகிறது.
நம்மாழ்வார், பேயாழ்வார், பூதத்தாழ்வார், பெரியாழ்வார், திருமங்கையாழ்வார், ஆண்டாள் என ஆறு ஆழ்வார்களாலும் மங்களாசாசனம் செய்யப்பட்டது. இத்தலம் மதுரைக்கு வடக்கில் உள்ள அழகர்மலைக்கு திருமாலிருஞ்சோலை, உத்யான சைலம், சோலைமலை, மாலிருங்குன்றம், இருங்குன்றம், வனகிரி, விருஷபாத்ரி, இடபகிரி என பல பெயர்கள் உள்ளன. பாண்டிய மன்னர்கள், விஜயநகர மன்னர்கள், மதுரை நாயக்க மன்னர்கள் இங்கு திருப்பணி செய்துள்ளனர்.
தென் திருப்பதி என அழைக்கப்படும் இக்கோயில் 92 ஏக்கர் பரப்பில் வானளாவிய மதிற்சுவர்களுடன் கோட்டைக்குள் இருப்பது தனிச்சிறப்பு. கல்வெட்டுகளில் 'திருமாலிருஞ்சோலை பரமஸ்வாமி' என்ற பெயர் காணப்படுகிறது. விஜயநகர மன்னர் கால கல்வெட்டில் 'அழகர்' என்ற பெயரால் சுவாமி குறிப்பிடப்படுகிறார். பிற்கால பாண்டிய மன்னர்களின் கல்வெட்டிலும் 'அழகர்' என்ற பெயரையே காணப்படுகிறது.
கருவறை மீதுள்ள வட்ட வடிவ சோமசந்த விமானத்தின் கீழ் மூலவர் ஸ்ரீதேவி பூதேவியுடன் சுந்தரராஜப் பெருமாள் என்ற பெயருடன் கையில் சங்கு, சக்கரம், வில், வாள், கதாயுதத்தை தாங்கி கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். உற்ஸவர் பெயர் கள்ளழகர்.
சுந்தரவல்லித் தாயார் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். இந்த சன்னதியின் பின்புறத்தில் சக்கரத்தாழ்வார் சன்னதி உள்ளது. வடமேற்கு மூலையில் ஆண்டாள் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறார். சுந்தர பாண்டியன் மண்டபத்தின் வடக்கில் கிருஷ்ணர் சன்னதி உள்ளது. உயரமான மண்டபத்தில் இருப்பதால் இவரது சன்னதியை 'மேட்டுக்கிருஷ்ணன் கோயில்' என்கின்றனர். வசந்தமண்டபத்தில் ராமாயணக் காவியம் மூலிகை ஒவியமாக வரையப்பட்டுள்ளது.
மூன்றாம் பிரகாரத்தில் பள்ளி அறையின் அருகில் யோக நரசிம்மர் சன்னதி உள்ளது. உக்ர மூர்த்தியாக காட்சி தரும் இவரை 'ஜூவாலா நரசிம்மர்' என்கின்றனர். தலையில் இருந்து கோபத்தீ வெளியேற விதானத்தின் மீது துளை ஒன்று உள்ளது. இவரின் கோபத்தைத் தணிக்க எண்ணெய், பால், தயிர், நுாபுர கங்கைத் தீர்த்தத்தால் அபிஷேகம் செய்வது வழக்கம். நரசிம்மர் மூலவருக்கு நேர் பின்புறம் வீற்றிருக்கிறார்.
தீர்த்தம் நுாபுரகங்கைத் தீர்த்தம். ராக்காயி அம்மன் கோயில் அழகர்மலையில் முருகன் கோயிலுக்கு மேலே அமைந்துள்ளது. மலை மீதுள்ள நுாபுர கங்கைத் தீர்த்தத்தின் காவல் தெய்வமாக இருப்பது இந்த அம்மனே. புனிதமான இந்த தீர்த்தம் மருத்துவ குணம் நிறைந்தது. மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவது சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாகும். பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினால் நாடு வளம் பெறும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு கள்ளழகரே குலதெய்வம். தங்களின் வேண்டுதல் நிறைவேறியதும் சித்ராபவுர்ணமி அன்று கள்ளழகருக்கு முடிக்காணிக்கை செலுத்துகின்றனர். விருப்பம் நிறைவேற எடைக்கு எடை நாணயம், தானியத்தை துலாபாரமாக கொடுக்கின்றனர்.
திருச்சி ஸ்ரீரங்கத்தில் அரங்கனுடன் ஆண்டாள் ஐக்கியமான பின் கள்ளழகருக்கு அக்காரவடிசிலும் வெண்ணெய்யும் சமர்ப்பிக்க முடியாமல் போனது. ராமானுஜர் பின்னாளில் இது பற்றி அறிந்து அதை நிறைவேற்ற முடிவு செய்தார். ஒரு கூடாரைவல்லி நாளில் கள்ளழகருக்கு 100 தடா அக்காரவடிசிலும் 100 தடா வெண்ணெய்யும் சமர்ப்பித்து ஆண்டாளின் நேர்த்திக்கடனை ராமானுஜர் நிறைவேற்றினார். இதை நிறைவேற்றியதும் ஸ்ரீவில்லிபுத்துாரில் ஆண்டாளை வணங்கிய போது அவரைக் கண்டு மகிழ்ந்த ஆண்டாள் அசரீரியாக 'வாரும் என் அண்ணலே' என அழைத்தார்.
அழகர் கோயில்: காலை 6:00 -- மதியம் 12:30 மணி; மதியம் 3:30 - இரவு 8:30 மணி வரை திறந்திருக்கும்.
மதுரையில் இருந்து 21 கி.மீ., தொலைவில் அழகர்மலை அடிவாரத்தில் கோயில் உள்ளது.
மலையின் உச்சியில் ஓடும் நுாபுரகங்கை நீரைப் பயன்படுத்தியே அழகர்கோவில் தோசை செய்யப்படுகிறது. இது சுவையாக இருப்பதற்கு இதுவே முக்கிய காரணம்.
தோசை செய்யத் தேவையானவை
பச்சரிசி - 1 கப்
கருப்பு உளுந்து தோலுடன் - ½ கப்
சீரகம் - 1 டீஸ்பூன்
கருப்பு மிளகு - 1 டீஸ்பூன்
சுக்குப்பொடி - ½ டீஸ்பூன்
நெய் - 4 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - ஒரு கொத்து
உப்பு - சிறிதளவு
செய்முறை
அரிசி, தோலுடன் கறுப்பு உளுந்தைக் கழுவி இரண்டையும் தனித்தனியாக இரண்டு மணி நேரம் ஊறவிடவும். அரிசியை கொரகொரப்பான பதத்தில் அரைக்கவும். தோலுடன் கூடிய கறுப்பு உளுந்தை சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக அரைக்கவும். இரண்டையும் கலந்து சிறிது உப்பு சேர்த்து ஆறு மணி நேரம் புளிக்க வைக்கவும். வழக்கமான தோசை மாவு போல இல்லாமல் கெட்டியாக இருக்க வேண்டும். மாவு புளித்ததும் கொரகொரப்பாக அரைத்த சீரகம், மிளகை ஒன்றாகக் கலக்கவும். அத்துடன் சுக்குப்பொடி, கறிவேப்பிலையைச் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
தோசைக்கல்லில் நெய்யை விட்டு கனமான தோசையாக ஊற்றி பின்னர் நெய்யை விட்டு வெந்ததும் திருப்பி வேக வைத்து எடுக்கவும். அழகர் கோவில் தோசை தயார்.
-பிரசாதம் தொடரும்
ஆர்.வி.பதி

