ADDED : டிச 04, 2025 01:42 PM

பாட்டினில் அன்பு செய்
ஆதிசங்கரர் அன்பு, கருணையால் தன்னை எதிர்த்தவர்களை தன் பக்கம் வர வைத்தது ஒருபுறம் என்றால், வறுமையில் வாடிய பெண்ணுக்கு அன்பால் மனம் நெகிழ்ந்து மகாலட்சுமியை வேண்டி கனகதாரா ஸ்தோத்திரம் பாடி அவளின் வறுமையைப் போக்கினார்.
அங்கம் ஹரே: புலகபூஷன மாச்ரயந்தீ
ப்ருங்காங்கநேவ முகுலாபரணம் தமாலம்
அங்கீக்ரு தாகில விபூதிரபாங்கலீலா
மாங்கல்ய தாஸ்து மம மங்கள தேவதாயா:
பொருள்: மொட்டுக்கள் நிறைந்த மரத்தைப் பொன்வண்டு மொய்ப்பது போல, ஆனந்தத்தை ஆபரணமாக அணிந்திருக்கும் பெருமாளின் மார்பில் அக மகிழ்ந்து மெய் மறந்து பார்த்துக் கொண்டிருக்கும் ஸ்ரீதேவியின் கடைக்கண்கள் அனைத்து மக்களுக்கும் சகல செல்வங்களையும் வழங்குமாறு வேண்டுகிறேன்.
மனிதகுலம் தழைத்து ஓங்குவது அன்பில்தான். மனிதநேயத்தில் தான் அன்பு பிறக்கிறது. அன்பு மட்டும் இல்லாமல் போய் இருந்தால் எப்போதோ அழிந்து இருக்கும் மனித இனம். பாரதியார் இதை நன்கு உணர்ந்தவர். அன்பைப் போதிப்பதில் நிகரற்ற கவிஞனாக இருந்தார். சக மனிதர்கள் மட்டுமின்றி காக்கை குருவிகளிடமும் அன்புகாட்டியவர்.
''அன்பிற் சிறந்த தவமில்லை”
“அன்புடையார் இன்புற்று வாழ்தல் இயல்பு''
''அன்பு தன்னில் செழிக்கும் வையம்''
''அன்பென்று கொட்டு முரசே மக்கள்
அத்தனைபேரும் நிகராம்”
என்றெல்லாம் பாடுகிறார் மகாகவி.
கண்ணதாசன் ஒரு பாடலில்,
இரவுக்கு ஆயிரம் கண்கள்
பகலுக்கு ஒன்றே ஒன்று
என நட்சத்திரங்களையும், சூரியனையும் பாடி விட்டு, அடுத்த வரியில்,
அறிவுக்கு ஆயிரம் கண்கள்
உறவுக்கு ஒன்றே ஒன்று
என பாடுவதுதான் மிகச் சிறப்பு. பாரதியாரின் அன்பும், மனிதநேயமும் இந்த இரண்டு வரிகளில் அப்படியே வெளிப்படுகிறது.
எல்லாவற்றையும் அறிவுக்கண் கொண்டு நோக்குதல் என்பது மனித நேயத்தையும், அன்பையும் தொடரவிடாது. உறவு என்னும் வார்த்தைக்கு மட்டுமே அன்பும் நேசமும் பாலமாகிறது. கைகள் செதுக்கும் போதே அன்பையும், முழு ஈடுபாட்டையும் காட்டும் போது சாதாரணக் கற்களும் சிலையாகும். அதேபோல, மனித நேயமும் அன்பு வார்த்தைகளுமே உறவை வளர்க்கும். அங்கே குறைகள் மறைந்து, நிறைகளே நிரம்பி இருக்கும்.
குழந்தைகளுக்கான பாடலில் கூட,
சாதிகள் இல்லையடி பாப்பா! - குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்!
நீதி, உயர்ந்தமதி, கல்வி - அன்பு
நிறைய உடையவர்கள் மேலோர்
என்கிறார். நீதி, உயர்ந்த மதி, கல்வி இவை இருந்தால் மட்டுமே மனிதர்கள் மேலோர் ஆவதில்லை. அன்பு நிறைய உடையவர்களே மேலோர் என்கிறார் பாரதி. மேலும்,
“அன்பு வாழ்க என்று அமைதியில் ஆடுவோம்.”
“அன்பு நெறியில் அறங்கள் வளர்ந்திட நல்லது தீயது நாமறியோம்”
என அன்பு பற்றி சொன்னவர் பாரதியார். இன்னொரு பாடலில்,
மானுடர் உழாவிடினும் வித்து நடாவிடினும்
வரம்பு கட்டாவிடினும் அன்றிநீர் பாய்ச்சாவிடினும்
வானுலகு நீர்தருமேல் மண்மீது மரங்கள்
வகைவகையா நெற்கள்புற்கள் மலிந்திருக்குமென்றே?
யானெதற்கும் அஞ்சுகிலேன், மானுடரே, நீவிர்
என் மதத்தைக் கைக் கொண்மின்; பாடுபடல் வேண்டா;
ஊனுடலை வருத்தாதீர்; உணவியற்கை கொடுக்கும்;
உங்களுக்குத் தொழிலிங்கே அன்பு செய்தல் கண்டீர்!
என்று அன்பே முக்கியம் எனப் பாடுகிறார்.
சூரியனைக்கூட, அன்பால் அவன் பாடுவதில் எவ்வளவு அழகு ? எவ்வளவு நகைச்சுவை ?
ஞாயிறே இருளை
என்ன செய்து விட்டாய்?
ஓட்டினாயா? கொன்றாயா?
விழுங்கி விட்டாயா?
கட்டி முத்தமிட்டு
நின் கதிர்களாகிய கைகளால்
மறைத்து விட்டாயா?
இருள் நினக்குப் பகையா?
இருள் நின் உணவுப் பொருளா?
அது நின் காதலியா?
இரவெல்லாம் நின்னைக்
காணாத மயக்கத்தால்
இருண்டிருந்ததா?
நின்னைக் கண்டவுடன்
நின்னொளி தானுங்கொண்டு
நின்னைக் கலந்துவிட்டதா?
நீங்கள் இருவரும்
ஒருதாய் வயிற்றுக்
குழந்தைகளா?
முன்னும் பின்னுமாக
வந்து உலகத்தைக்
காக்கும்படி
உங்கள் தாய்
ஏவி யிருக்கிறாளா?
உங்களுக்கு
மரண மில்லையா?
நீங்கள் அமுதமா?
உங்களைப்
கழ்கின்றேன், ஞாயிறே,
உன்னைப் புகழ்கின்றேன்.
அப்படியே, இவ்வுலகை, கடவுளின் படைப்பை,இயற்கையை,
இவ்வுலகம் இனியது
இதிலுள்ள வான்
இனிமை யுடைத்து;
காற்றும் இனிது.
தீ இனிது.
நீர் இனிது.
நிலம் இனிது.
ஞாயிறு நன்று;
திங்களும் நன்று.
வானத்துச் சுடர்கள்
எல்லாம் மிக இனியன.
மழை இனிது.
மின்னல் இனிது.
இடி இனிது.
கடல் இனிது,
மலை இனிது
காடு நன்று.
ஆறுகள் இனியன.
உலோகமும், மரமும்,
செடியும், கொடியும்,
மலரும், காயும்,
கனியும் இனியன.
பறவைகள் இனியன
ஊர்வனவும் நல்லன.
விலங்குகள் எல்லாம்
இனியவை; நீர்
வாழ்வனவும் நல்லன.
மனிதர் மிகவும் இனியர்.
ஆண் நன்று.
பெண் இனிது.
குழந்தை இன்பம்.
இளமை இனிது.
முதுமை நன்று.
உயிர் நன்று.
சாதல் இனிது.
எனப் பாடுகிறார். பாடல்களில் எல்லாம், அன்பைப் பற்றியே பாடி இருக்கிறார். அன்பே தெய்வம் என்பதில் அவனுக்கு அவ்வளவு நம்பிக்கை.
'துன்ப நினைவுகளும் சோர்வும் பயமும் எல்லாம்
அன்பில் அழியுமடி கிளியே அன்பிற்கு அழிவில்லை'
'உங்களுக்கு தொழில் இங்கே அன்பு செய்தல் கண்டீர் '
“பூமண்ட லத்தில் அன்பும் பொறையும் விளங்குக!”
“பகை நடுவினில் அன்புருவான நம் பரமன் வாழ்கின்றான் - நன்னெஞ்சே!”
நம் நாட்டின் ஆரம்பப் பள்ளிகளின் பாடத்திட்டத்தில் பாரதியாரின் புதிய ஆத்திசூடியையும் சேர்த்து நம் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்க அரசு முன் வர வேண்டும். கல்வியாளர்கள் இதனை முன் மொழிய வேண்டும்.
இளைய தலைமுறையினரின் தவறான பழக்கங்கள், தேவையற்ற வார்த்தைகள், வன்முறை எண்ணங்கள் இவற்றில் இருந்து நிச்சயம் பாரதியாரின் வீச்சு விடுபட வைத்து, அன்பு என்னும் பாலத்தை உருவாக்கும். இப்படி அவரது பாடல்களில் அன்பே அடிநாதம் என்பதே ஆத்திசூடி கூறும் உண்மை.
-ஆத்திசூடி தொடரும்
முனைவர் தென்காசி கணேசன்
94447 94010

