sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

கோயிலும் பிரசாதமும் - 28

/

கோயிலும் பிரசாதமும் - 28

கோயிலும் பிரசாதமும் - 28

கோயிலும் பிரசாதமும் - 28


ADDED : டிச 04, 2025 01:43 PM

Google News

ADDED : டிச 04, 2025 01:43 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காணிப்பாக்கம் விநாயகர் - கிணற்று நீர் பிரசாதம்

ஆந்திர மாநிலம் சித்துார் மாவட்டம் காணிப்பாக்கத்தில் சுயம்பு வரசித்தி விநாயகர் கோயில் உள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இத்தலத்தில் விநாயகர் வளர்ந்து கொண்டிருப்பது அதிசய நிகழ்வாகும். விநாயகருக்கு மோதகம் அல்லது கொழுக்கட்டை நைவேத்யம் செய்வது வழக்கம். ஆனால் இங்கு கிணற்று நீரை நைவேத்யம் செய்கிறார்கள்.

சுயம்பு மூர்த்தியாகத் தோன்றிய விநாயகர், கருவறையில் கிணற்றின் மீது எழுந்தருளி இருக்கிறார். இதில் இருந்து சுரக்கும் புனித நீரே இங்கு பிரசாதமாகும். புனிதமானதும், சக்தி மிக்கதுமான இந்த பிரசாதம் உத்தரணியில் தரப்படுகிறது. பஞ்ச பாத்திரத்தில் இருந்து தீர்த்தம் எடுக்கப் பயன்படும் கரண்டியே உத்தரணி.

இந்த தீர்த்தத்தைப் பருகினால் நோய்கள் நீங்கும் என்பது பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை. தன்னை நாடி வருவோருக்கு பணபலம், உடல்நலம், முயற்சியில் வெற்றி தருவதால் 'வரசித்தி விநாயகர்' என அழைக்கப்படுகிறார். கருவறை வடக்கு நோக்கி இருப்பது இத்தலத்தின் சிறப்பு. தொடக்கத்தில் சிறியதாக இருந்த இக்கோயில், பதினோராம் நுாற்றாண்டில் முதலாம் குலோத்துங்க சோழனால் பெரியதாக மாற்றப்பட்டது.

பின்னர் 1336ல் விஜயநகர மன்னர்கள் காலத்தில் விரிவுபடுத்தப்பட்டது. அக்காலத்தில் விகாரபுரி என்ற கிராமத்திற்கு அருகில் மாற்றுத்திறனாளிகளான மூன்று சகோதரர்கள் இருந்தனர். அவர்களுக்குச் சொந்தமான காணி நிலத்தில் விவசாயம் செய்ய கிணற்று நீரை பயன்படுத்தினர். நாளடைவில் கிணறு வற்றியதால் அதை ஆழப்படுத்தினர்.

அங்கிருந்த பாறை மீது மண்வெட்டி படவே, ரத்தம் பீறிட்டது. மூவரும் அந்த பாறையைத் தொட்டபோது அவர்களின் உடற்குறை நீங்கியது. கிணற்றுக்குள் விநாயகர் சுயம்பு மூர்த்தியாக காட்சியளித்தார். மண்வெட்டி விநாயகரின் தலையில் பட்டதால் ரத்தம் கொட்டியது. அதை அவர்களால் நிறுத்த முடியவில்லை. ஊரார் உதவியுடன் நுாற்றுக்கணக்கான இளநீரால் அபிஷேகம் செய்தனர். அவர்களுக்குச் சொந்தமான காணி நிலத்தில் இளநீர் ஓடியதன் காரணமாக இத்தலம் 'காணிப்பாக்கம்' எனப்பட்டது. அந்த கிணற்றுக்குள்ளேயே விநாயகரை வழிபட்டு வந்தனர். நீண்ட காலத்திற்குப் பிறகே கோயில் கட்டப்பட்டது.

காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் இங்குள்ள கிணற்றின் மீதே எழுந்தருளி இருக்கிறார். மூலவரைச் சுற்றி இப்போதும் கிணறு இருப்பதைக் காணலாம். விநாயகரைச் சுற்றி நீர் சுரந்தபடி உள்ளது. மழைக் காலத்தில் தண்ணீர் நிரம்பி வழிகிறது.

ஒருமுறை சகோதரர் இருவர் நீண்ட துாரத்தில் இருந்து காணிப்பாக்கத்திற்கு வந்து கொண்டிருந்தனர். இதனால் களைத்துப் போன இளையவனுக்கு பசி வந்தது. வழியில் ஒரு தோட்டத்தில் மாம்பழங்கள் பழுத்திருந்தன. அதை பறித்துத் தருமாறு கேட்டான். அந்த தோட்டம் மன்னருக்குச் சொந்தமானது என்பதால் பறிப்பது குற்றம் என்றும் மூத்தவன் மறுத்தான். அதை ஏற்காத இளையவன் தானே பழங்களைப் பறித்து சாப்பிட்டான். உடனே மூத்தவன் அரண்மனைக்குச் சென்று மன்னரிடம் புகார் சொல்லி, சகோதரனுக்கு தண்டனை தருமாறு கேட்டுக் கொண்டான். மன்னரும் அவனது கைகளை வெட்டும்படி ஆணையிட்டார். அதன்படி வெட்டப்பட்டன. கோயிலுக்கு அருகில் ஓடிய நதியில் இருவரும் நீராடி விநாயகரை வழிபட்டனர். விநாயகர் அருளால் வெட்டிய கைகள் மீண்டும் தோன்றின. அவர்கள் நீராடிய இந்த நதிக்கு 'பாகுதா' என்று பெயர்.

அரகோண்டா கொல்லபல்லி என்ற கிராமத்தை சேர்ந்த விநாயக பக்தரான பெசவாடா சித்தைய்யா 1947ல் வெள்ளி கவசத்தை காணிக்கை அளித்தார். விநாயகர் வளர்ந்து கொண்டே இருப்பதால் சில ஆண்டுக்குப் பின்னர் கவசத்தை பொருத்த முடியவில்லை. பல கால கட்டத்தில் விநாயகருக்கு பயன்படுத்தப்பட்ட வெள்ளிக் கவசங்கள் காட்சியகத்தில் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இங்கு சத்தியப் பிரமாணம் என்ற சம்பிரதாயம் தினமும் நடக்கிறது. இரு நபர்களுக்கு இடையே வம்பு, வழக்கு ஏற்பட்டால் நிரபராதி என நிரூபிக்க இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி விநாயகரின் முன் சத்தியம் செய்கின்றனர். 'நான் சொல்வது உண்மை' என சத்தியம் செய்தால் கிராமப் பஞ்சாயத்துக்காரர்கள் இப்போதும் ஏற்றுக் கொள்கின்றனர். பொய் சத்தியம் செய்தால் நாற்பது நாட்களுக்குள் தண்டனை கிடைக்கும் என்பதால் இங்கு பொய் சத்தியம் யாரும் செய்வதில்லை.

காலை 6:00 - இரவு 9:00 மணி வரை கோயில் திறந்திருக்கும்.

* சித்துாரில் இருந்து 12 கி.மீ.,

* திருப்பதியில் இருந்து 70 கி.மீ.,

இங்கு விநாயகரை தரிசிக்கும் பக்தர்கள் அவரது பிரசாதமான கிணற்று நீரை குடிக்காமல் செல்வதில்லை.



-பிரசாதம் தொடரும்

ஆர்.வி.பதி






      Dinamalar
      Follow us