தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/பாரதியாரின் ஆத்திசூடி - 27

பாரதியாரின் ஆத்திசூடி - 27

பாரதியாரின் ஆத்திசூடி - 27


ADDED : ஜன 08, 2026 11:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 08, 2026 11:36 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வேதம் புதுமை செய்

வெற்றி எட்டுத்திக்கு எட்டும் கொட்டு முரசே

வேதங்கள் வாழ்கவென்று கொட்டு முரசே

என்றும்,

வேதமுடையது இந்த நாடு,

நல்ல வீரர் பிறந்தது இந்த நாடு

சேதமில்லாத ஹிந்து ஸ்தானம்

இதைத் தெய்வமென்று கும்பிடடி பாப்பா

என்றும் பாடுகிறார் மகாகவி பாரதியார்.

தேனி வேதபுரி ஆஸ்ரமத்தை சேர்ந்த ஓம்காரானந்தா கூறுவார்... -வீட்டுக்குத் தேவையான உபகரணங்கள் - மிக்சி, கிரைண்டர், பிரிட்ஜ் வாங்கும் போது, இலவசமாக ஒரு புத்தகம் கொடுப்பார்கள். அவற்றை எப்படி உபயோகிப்பது என்பதற்கான குறிப்பேடு அது.

அதே போலவே உயிர் கொடுத்த கடவுள் இந்த உலகில் வாழ்வதற்கு கொடுத்த குறிப்பேடு தான், வேதங்கள், உபநிஷத்துக்கள், சாஸ்திரங்கள், பகவத்கீதை, திருக்குறள், பாசுரங்கள் போன்றவை. இவற்றின் கருத்துக்களை நாம் உள்வாங்கினால் வாழ்க்கைப் பயணம் இனிதாகவும், மகிழ்ச்சியாகவும், பயன் உள்ளதாகவும்இருக்கும்.

ஒருவன் பேருந்து நிறுத்தத்தில் பலமணி நேரமாகக் காத்துக் கொண்டிருந்தான். கடவுளே, என மனதிற்குள் அவன் முறையிட்டதைக் கேட்டதும், 'சுவாமி... பாவம், உங்கள் பக்தன் வேண்டுகிறான், போய் உதவுங்கள்'' சிவபெருமானிடம் பார்வதி சொன்னாள். அவன் முன் தோன்றிய சிவன், 'என்ன வேண்டும், கேள்' என்றார். உடனே அவன், ' சுவாமி... நீண்டநேரம் காத்திருக்கிறேன், 21சி பஸ் உடனே வர வேண்டும்' என்றான். இப்படித்தான் நம்மில் பலர் வாழ்க்கை, கடவுள் பற்றிய புரிதல் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

வேதம் என்றால் 'ஞானம் அல்லது அறிவு'. வாய்மொழியாக பேசப்பட்டு வழிவழியாக எழுதப்பட்டதால் வேதம் ஸ்ருதி என்றும், எழுதா கிளவி என்றும் அழைக்கப்படுகிறது. அறம் செய விரும்பு; மாதா பிதா குரு தெய்வம்; மாத்ரு தேவோ பவ; சத்யம் வத; தர்மம் சர இப்படி வேதம், தர்ம சாஸ்திரத்தின் அடிப்படையில் சனாதன தர்மம் வாழ்வியல் முறைகளை அளித்திருக்கிறது.

முன்னைப் பழம் பொருட்கும்

முன்னைப் பழம்பொருளே

பின்னைப் புதுமைக்கும்

பேர்த்தும் அப்பெற்றியனே

என்கிறது மாணிக்கவாசகரின் திருவெம்பாவை. அதாவது சிவன் பழமைக்கெல்லாம் பழமையானவன் - அதே நேரம், புதுமைக்கெல்லாம் புதுமையானவன் என்கிறார். வேதத்தை அடிப்படையாக கொண்டு புதுமை செய் என பாரதி கூறுவதே இந்த அடிப்படையில்தான்.

வேதத்தின் சிறப்பைப் பற்றிப் பல பாடல்களில், கட்டுரைகளில், பாஞ்சாலி சபதத்தில், பாரதியார் கூறியுள்ளார்.

வேதம் நிறைந்த தமிழ்நாடு - உயர்

வீரம் செறிந்த தமிழ்நாடு

என்கிறார். மதராஸ் மாகாணம் எனப்பட்ட காலத்திலேயே, முதன்முதலில் 'தமிழ்நாடு' என முழங்கியது மட்டுமல்ல, இந்த மண்ணையும், வேதத்தையும் பிரிக்க முடியாது என்றும் ஆணித்தரமாக கூறியுள்ளார்.

கலைமகள் துதியில்,

வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்,

வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்

கொள்ளை இன்பம் குலவு கவிதை

கூறுபாவலர் உள்ளத்திருப்பாள்

உள்ளதாம்பொருள் தேடி யுணர்ந்தே ஓதும்

வேதத்தின் உள் நின்றொளிர்வாள்

கள்ளமற்ற முனிவர்கள் கூறும் கருணை

வாசகத்து உட்பொருள் ஆவாள்

என வேதத்தின் பொருளில்தான் கலைமகள் இருக்கிறாள் என்கிறார்.

வேதங்கள் என்பது இந்த நாட்டின் ஆணிவேர். அதுதான் வாழ்வியல் முறைகளை நமக்கு உணர்த்துகிறது. மாக்ஸ்முல்லர் போன்ற பல வெளிநாட்டு அறிஞர்கள் மற்றும் யுவான்சுவாங் போன்ற யாத்ரீகர்கள் வேதங்களை மொழிபெயர்த்து அவர்கள் தேசங்களுக்கு எடுத்துச் சென்று இருக்கிறார்கள்.

கிறிஸ்தவர்களுக்கு வேதநுால் பைபிள், முஸ்லிம்களுக்கு வேதநுால் குரான் என இருக்கும் போது போது, ஹிந்துக்களுக்கு என தனிவேதநுால் இல்லையா என சுவாமி விவேகானந்தரிடம் ஒருவர் கேட்டார். அதற்கு 'வேதம் என்ற சொல்லே இந்த மண்ணிற்குத் தான் சொந்தம். 5000 வருடங்களுக்கு முன்பிருந்தே இருக்கும் அந்த சொல்லே அனைவருக்கும் அடிப்படை' என்றார்.

இந்த தேசத்தின் பெருமைகளில் முக்கியமானது உலகின் ஏழு செம்மொழிகளில் இரண்டு கிடைத்திருப்பது. அதாவது சமஸ்கிருதம், தமிழ். சமஸ்கிருதம் தீண்டத்தகாத மொழி போல மாயையை சிலர் உருவாக்கியிருப்பது மிக வருத்தமான விஷயம். தமிழை வளர்த்தவர்கள் பலரும், சமஸ்கிருதத்தை படித்ததுடன் அதன் சிறப்பை கருத்துக்களை நமக்கு தந்திருக்கிறார்கள்.

வேதத்தின் கருத்துகளை விவாதிப்பதற்காக ஜம்முவுக்குச் சென்ற ஆதிசங்கரர் அங்கே பண்டிதர்களைச் சந்தித்திருக்கிறார். நாயன்மார்கள், ஆழ்வார்கள் அனைவரும் வெவ்வேறு பின்னணியில் பிறந்தவர்கள். அதில் பலர் தமிழுடன் சமஸ்கிருதமும் அறிந்தவர்கள். வேதம் நான்கிலும் மெய்ப் பொருளாய் விளங்கும் திருவைந்தெழுத்தின் சிறப்பை திருஞான சம்பந்தர்

காதலாகிக் கசிந்து கண்ணீர்மல்கி

ஓதுவார்தமை நன்னெறிக்குய்ப்பது

வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது

நாதன் நாமம் நமச்சிவாயவே.

என்கிறார். ஞானசம்பந்தரிடம் பல பண்டிதர்கள் வேதம் பற்றிய சந்தேகங்கள் கேட்டிருக்கிறார்கள் என்கிறார் பெரிய புராணம் அளித்த சேக்கிழார்.

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், அருணகிரிநாதர், குமரகுருபரர் போன்ற அடியவர்கள் மட்டுமல்ல, கம்பன், திருவள்ளுவர், இளங்கோவடிகள், பாரதி போன்ற இலக்கியவாதிகளும் வேதத்தின் பொருளை அறிந்தவர்கள்.

காசிக்குச் சென்று படித்து விட்டு வந்தாலும் பாரதி புதுச்சேரிக்கு வந்தபின் அரவிந்தரின் தொடர்பால் வேதரிஷிகளின் கீதங்களில் ஈடுபட்டார் என ஒரு செய்தி கூறப்படுகிறது உலகின் பழமையான வேதம் எனப்படும் ரிக் வேதம், ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்பே கூறும் வார்த்தைகளைப் பாருங்கள் -

ஆ நோ பத்ரா க்ரதவோ யந்து விஶ்வதோ

இதன் பொருள்: 'எல்லா திசைகளிலிருந்தும் நல்ல எண்ணங்கள் நம்மிடம் வரட்டும்' என்பதே.

பாரதியார் இதை உள்வாங்கியே தேசிய கீதங்கள் கவிதையில்,

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்

தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்

இறவாத புகழுடைய புதுநுால்கள்

தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்

திறமான புலமையெனில் வெளிநாட்டோர்

அதை வணக்கஞ் செய்தல் வேண்டும்.

எனப் பாடுகிறார்.

பகவத் கீதை மொழிபெயர்ப்பு முன்னுரையிலும் வேதங்களைப் பற்றி எழுதியிருக்கிறார். வேதங்கள் நான்கும் இன்றைக்கும் மிகப் பொருத்தமாக இருக்கிறது என உலகில் உள்ள பல அறிஞர்கள் கூறி வருகிறார்கள். படித்தவர்கள், சாதாரண மக்கள் அனைவருக்கும் வேதங்களின் உண்மைக் கருத்துக்களைக் கொண்டு செல்ல வேண்டும்.

ஒன்று பரம்பொருள் நாம் அதன் மக்கள்

உலகின்பக் கேணியென்றே -- மிக

நன்று பல்வேதம் வரைந்த கை பாரத

நாயகிதன் திருக்கை

என்று கூறும் மகாகவி பாரதத்தாயை போற்றும் போது நாவினில் வேதமுடையாள் என்கிறார். வேதங்கள் பாடுவோம் காணீர் என்கிறார்.

அந்நிய ஆட்சிக் காலத்தில் மங்கிப் போயிருந்த நம் நாட்டுச் செல்வங்களை எல்லாம் துாசி அகற்றி நம் வேதங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். மனுநீதியில் இருந்து தோன்றிய நீதி நுால்கள் தான் நமது அரசியல் சட்டத்தின் அடிப்படையாக இருக்கிறது. அரசியல் சட்டம் கூட ஒவ்வொரு காலத்திற்கு ஏற்ப மாற்றப்பட வேண்டியிருக்கிறது.

பழமைக்கும் புதுமைக்கும் பாலமாக, தேவையான மாற்றங்களுடன் இன்றைக்கு நம் பாரத தேசம் எல்லாத் துறைகளிலும் வளர்ந்து, உலக அளவில் மிக முக்கிய நாடாகத் திகழ்கிறது அறிவியல், கம்ப்யூட்டர், கல்வி, ஆன்மிகம், வறுமை ஒழிப்பு, விவசாயம், ராணுவம் என பல்வேறு துறைகளில் இந்தியா ஒளிர்ந்து வருகிறது.

நமது முன்னோர்கள், சித்தர்கள் வகுத்த நெறி முறைகளைப் பின்பற்றி, கடவுள் நமக்கு அளித்த வேதங்கள் என்னும் செல்வத்தைப் பாதுகாத்து இணைந்து வாழ்வோம். இதை எல்லாம் கருத்தில் கொண்டே புதிய ஆத்திசூடியில் 'வேதம் புதுமை செய்' என்கிறார் மகாகவி.



-ஆத்திசூடி தொடரும்

முனைவர் தென்காசி கணேசன்

94447 94010

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us