தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/கோயிலும் பிரசாதமும் - 32

கோயிலும் பிரசாதமும் - 32

கோயிலும் பிரசாதமும் - 32


ADDED : ஜன 08, 2026 11:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 08, 2026 11:38 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி - சர்க்கரைப் பொங்கல்

நுாற்றியெட்டு வைணவ திவ்யதேசங்களில் முக்கியமானது திருவல்லிகேணி பார்த்தசாரதி கோயில். இங்கு மடப்பள்ளியில் தயாராகும் சர்க்கரைப் பொங்கலின் சுவைக்கு இணை ஏதுமில்லை என சொல்லும் அளவிற்கு சுவை, மணம் அபாரமாக இருக்கும். பன்னிரு ஆழ்வார்களில் பேயாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார் இங்கு மங்களாசாசனம் செய்துள்ளனர்.

எட்டாம் நுாற்றாண்டில் மாமல்லன் முதலாம் நரசிம்மவர்மனால் கட்டப்பட்ட இக்கோயில் பின்னாளில் சோழ மன்னர்களாலும், பதினைந்தாம் நுாற்றாண்டில் விஜயநகர மன்னர்களாலும் விரிவுபடுத்தப்பட்டது.

அர்ஜுனனுக்கு 'பார்த்தன்' என பெயர் உண்டு. மகாபாரதப் போரில் அர்ஜூனனின் சாரதியாக பகவான் கிருஷ்ணர் இருந்தார். பார்த்தனுக்கு சாரதியாக அதாவது பார்த்தசாரதி பெருமாள் இங்கு சேவை சாதிக்கிறார். ஒன்பது அடி உயரத்தில் பார்த்தசாரதிப் பெருமாள் மீசையோடு இருப்பது இங்கு மட்டுமே. பெருமாளின் பஞ்சாயுதங்களில் சங்கும், சக்கரமும் பிரதானமானது.

ஆயினும் இங்கு பெருமாளின் கையில் சக்கரம் இல்லை. மகாபாரத போரில் ஆயுதம் ஏந்த மாட்டேன் என சபதம் மேற்கொண்டு அர்ஜூனனுக்கு சாரதியாக பங்கேற்றதால் இங்கு சக்கரம் இல்லாமல் சங்கை மட்டுமே ஏந்தி அருள்பாலிக்கிறார். பொதுவாக நான்கு கைகளுடன் காட்சி தரும் பெருமாள் இங்கு மனித வடிவில் இரு கைகளுடன் இருக்கிறார். இந்த கோலத்தில் கிருஷ்ணரை வேறெங்கும் தரிசிக்க இயலாது.

மூலவர் வேங்கடகிருஷ்ணராக இருந்தாலும் உற்ஸவர் பார்த்தசாரதி பெயரிலேயே கோயில் அழைக்கப்படுகிறது. பாரதப்போரில் தன் திருமுகத்தில் ஏந்திய வடுக்களுடன் உற்ஸவர் அருள்புரிகிறார்.

ஐந்து பெருமாள்கள் தனித்தனி சன்னதிகளில் இருப்பதால் இத்தலம் பஞ்ச வீரத்தலம் எனப்படுகிறது. முதல் சன்னதியில் வேங்கடகிருஷ்ணன் ஒரு புறத்தில் ருக்மணி தாயார், பலராமருடனும் மறுபுறத்தில் சாத்தகி, பிரத்யும்னன், அநிருத்தன் ஆகியோருடன் நின்ற கோலத்தில் கிழக்கு நோக்கி சேவை சாதிக்கிறார். இரண்டாவது சன்னதியில் மூலவர் அரங்கநாதன் கிழக்கு நோக்கியபடி கிடந்த கோலத்தில் இருக்கிறார். தாயாருக்கு வேதவல்லி என்ற திருநாமம்.

மூன்றாவது சன்னதியில் கருட வாகனத்தின் மீது அமர்ந்தபடி வரதராஜ பெருமாள் கிழக்கு நோக்கியும், நான்காவது சன்னதியில் மேற்கு நோக்கி நரசிம்மரும் உள்ளனர். ஐந்தாவது சன்னதியில் தெற்கு நோக்கி ராமர் நின்ற கோலத்தில் இருக்கிறார். சீதை, பரதன், லட்சுமணன், சத்ருக்கன், அனுமன் ஆகியோரும் உடனிருக்கின்றனர். ஆண்டாள், ஆஞ்சநேயர், பன்னிரு ஆழ்வார்கள், ராமானுஜர், மணவாள மாமுனிகள் சன்னதிகளும் இங்குள்ளன.

ஒரு சமயம் பிருகு மகரிஷி பெருமாளைத் தன் மருமகனாக அடைய விரும்பி திருவல்லிக்கேணியில் தவம் செய்தார். அங்கிருந்த குளத்தில் மலர்ந்த அல்லி மலரில் தாயார் அவதரித்தார். பிருகு முனிவர் அக்குழந்தைக்கு 'வேதவல்லி' என பெயரிட்டு வளர்த்தார். தக்க வயதில் பெருமாள் அரங்கநாதராக எழுந்தருளி வேதவல்லித் தாயாரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருக்கல்யாண வைபவம் மாசி மாத வளர்பிறை துவாதசி அன்று நடக்கிறது.

மீசையுடன் காட்சி தரும் மூலவர் வைகுண்ட ஏகாதசி திருவிழா பகல்பத்து ஆறாம் நாளில் இருந்து பத்தாம் நாள் வரை ஐந்து நாட்கள் மட்டும் மீசை இல்லாமல் அருள்புரிகிறார். இங்கு ஆண்டுதோறும் பார்த்தசாரதி பெருமாள் பிரம்மோற்ஸவம் சித்திரை மாதத்திலும், நரசிம்ம பெருமாள் பிரம்மோற்ஸவம் ஆனி மாதத்திலும் நடக்கும். வைகுண்ட ஏகாதசி, தமிழ்ப்புத்தாண்டு அன்று சிறப்பு வழிபாடு, கோகுலாஷ்டமி அன்று விசஷே திருமஞ்சனம் நடக்கும்.

இங்குள்ள தீர்த்தம் கைரவிணி புஷ்கரணி. தலவிருட்சம் மகிழ மரம். விமானம் ஆனந்த விமானம். வைகானஸ ஆகமம் இங்கு பின்பற்றப்படுகிறது.

காலை 6:00 - 12:00 மணி மாலை 4:00 - 9:00 மணி வரை கோயில் திறந்திருக்கும்.

சனிக்கிழமை மட்டும் அதிகாலை 5:30 - 1:00 மணி மாலை 4:00 - 10:00 மணி வரை நடை திறந்திருக்கும்.

இனி சர்க்கரைப் பொங்கலின் செய்முறையை பார்ப்போம்.

தேவையான பொருள்

பச்சரிசி - 400 கி

பாசிப்பருப்பு - 75 கி

பாகு வெல்லம் - 750 கி

நெய் - 250 கி

முந்திரி - 100 கி

திராட்சை - 50 கி

ஏலக்காய்ப் பொடி - 1 டீஸ்பூன்

பச்சைக் கற்பூரம் - 1 சிட்டிகை

செய்முறை

பச்சரிசியை கழுவி அலசி பின் குழைய வேக வைக்க வேண்டும். பாசிப்பருப்பை தனியாக கெட்டியாக வேக வைக்க வேண்டும். வெல்லத்தை பொடித்து நீரில் கரைத்து வடிகட்டிய பின் கெட்டியான பாகு நிலைக்குக் காய்ச்ச வேண்டும்.

தண்ணீரில் வெல்லப்பாகை சிறிதளவு விட்டு அதைக் கைகளால் உருட்டிப் பார்க்க வேண்டும். நன்றாக உருட்ட முடிந்தால் அதுவே சரியான பதம். அடி கனமான பாத்திரத்தில் குழைய வடித்த சாதம், பாசிப்பருப்பு, ஏலக்காய் பொடியைக் கலந்து நன்கு மசித்த பின் வெல்லப் பாகை ஊற்றி கிளறி மூடவும்.

கடாயில் நெய்யை ஊற்றி அது காய்ந்ததும் உடைத்த முந்திரியை வறுக்க வேண்டும். அடுப்பை அணைத்த பின், கடாயில் திராட்சையை சேர்க்க வேண்டும். இரண்டையும் கலந்த பின், பச்சைக் கற்பூரத்தைச் சேர்த்து மசித்து வைத்த சர்க்கரைப் பொங்கல் கலவையில் சேர்த்து கலக்கவும். சர்க்கரைப் பொங்கல் நைவேத்யம் இப்போது தயார்.



-பிரசாதம் முற்றும்

ஆர்.வி.பதி

இந்த தொடரை புத்தகமாக பெற 1800 425 7700ல் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us