
ஒரு சமயம் துர்வாச முனிவர் குந்திபோஜனின் அரண்மனைக்கு வந்திருந்தார். சாதுர்மாஸ்ய விரதம் மேற்கொள்ள இருந்த அவருக்கு பணிவிடை செய்ய தன் மகள் குந்தியை நியமித்தான் குந்திபோஜன்.
இளவரசி குந்தியும் முனிவருக்கு பணிவிடைகளை செய்து ஆசியைப் பெற்றாள். முக்காலமும் உணர்ந்த துர்வாசர், வருங்காலத்தில் குந்தியின் கணவன் பாண்டுவுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்காது என்பதை ஞான திருஷ்டியால் அறிந்தார். அதனால் மகப்பேறு அளிக்கும் 'புத்திர லாபம்' என்னும் மந்திரத்தை உபதேசித்தார்.
குந்தி அதன் தன்மையை சோதித்துப் பார்க்க விரும்பினாள். சூரியதேவனை எண்ணி அந்த மந்திரத்தை ஜபித்தாள். அவள் முன் சூரியன் நேரில் தோன்றி அவருடைய அம்சமாக ஆண் குழந்தையை அளித்தார். அந்த குழந்தையே கர்ணன். சூரியனின் மகனாகிய இவனே, வலக்கை கொடுப்பதை இடக்கை அறியாதபடி தானம் அளித்த கொடைவள்ளல் கர்ணன். பொங்கல் முதல் அடுத்த ஆண்டு பொங்கல் வரை, தொடர்ந்து சூரிய உதயத்தின் போது வழிபட்டால் குழந்தை வரம் கிடைக்கும். இதற்காக விரத நியமம் தேவையில்லை.

