ADDED : ஜன 15, 2026 01:39 PM

செங்கல்பட்டைச் சேர்ந்த ஜெயலட்சுமி காஞ்சி மடத்திற்கு வந்தார். அப்போது அங்கிருந்தவர்களிடம், ''ராமேஸ்வரம் ராமநாதசுவாமிக்கு தங்கத்துல தாரா பாத்திரம் செய்யணும். அதுக்கு தேவையான தங்கத்தை நீங்க எல்லோரும் தான் தரணும்' என்றார் காஞ்சி மஹாபெரியவர்.
அப்போதே அதில் பங்கேற்க விரும்பினார் ஜெயலட்சுமி. ஆனால் தானம் செய்யும் அளவுக்கு அவரிடம் நகைகள் அப்போது இல்லை. ஆனாலும் முதல் காணிக்கை கொடுப்பதற்காக மடத்தின் மேனேஜரிடம், 'இந்தாங்க... தாரா பாத்திரத்துக்கு என்னோட காணிக்கை...' என குறிப்பிட்ட தொகையை கொடுத்தார். அவரோ அதை வாங்க மறுத்தார்.
'தங்கம்தான் வாங்கணும்னு பெரியவா சொல்லியிருக்கா... இவங்க தர்ற பணத்தை எப்படி வாங்கறது?' என்றார் மேனேஜர். மஹாபெரியவரிடம் போய் ஜெயலட்சுமி தன் எண்ணத்தைச் சொல்ல, சுவாமிகளும் சம்மதம் தெரிவித்தார்.
'இவா கொடுக்கறதை வாங்கிக்கோ' என மேனேஜருக்கு ஜாடை காட்டினார். அருகில் இருந்த சில பெண்கள் வளையல்களையும், நகைகளையும் கொடுக்க முன் வந்தனர். இதற்கிடையில், மேனேஜர் கொடுத்த ரசீதை சுவாமிகளிடம் காட்டி ஆசி பெறச் சென்றார் ஜெயலட்சுமி.
'ராமேஸ்வரம் தங்க தாரா பாத்திரத்துக்கு முதல் பணமே உன் பணம்தான். அடுத்தடுத்து நகை வர ஆரம்பிச்சாச்சு. அதனால அமோக ஜெயம்... அமோக லட்சுமிதான்' என பக்தையின் பெயரைச் சொல்லாமல் சொல்லி அவரை மகிழ்வித்தார் மஹாபெரியவர்.
'யாருக்குக் கிடைக்கும் இந்த ஆசி?' என மெய்சிலிர்த்தார் ஜெயலட்சுமி.
ஓரிரு நாளில் தேவையான அளவுக்கு தங்கம் வந்தது. அதை தொடர்ந்து மடத்தில் இருந்து, 'ராமநாத சுவாமிக்கு தாரா பாத்திரம் செய்ய தேவையான தங்கம் கிடைத்து விட்டது. இனி யாரும் அனுப்ப வேண்டாம்' என அறிவித்தனர். இதைக் கேள்விப்பட்டதும் மஹாபெரியவர் சொன்னது ஜெயலட்சுமியின் நினைவுக்கு வந்தது.
'அமோக ஜெயம்... அமோக லட்சுமி...'
காஞ்சி மஹாபெரியவரின் உபதேசம்
* குலதெய்வத்தை ஆண்டுக்கு இரண்டு முறையாவது தரிசனம் செய்.
* கஷ்டம் தீர குலதெய்வத்திற்கு விளக்கேற்று.
* முதல் முடிக்காணிக்கையை குலதெய்வத்திற்கு கொடு.
* ஆடி, புரட்டாசி, தை அமாவாசை அன்று முன்னோருக்கு தர்ப்பணம் செய்.
உடல்நலம் பெற... காஞ்சி மஹாபெரியவர் பரிந்துரைத்த ஸ்லோகம்
அஸ்மிந் பராத்மன் நநு பாத்மகல்பே
த்வமித்த முத்தாபித பத்மயோநிஹி!
அநந்த பூமா மமரோக ராஸிம்
நிருந்தி வாதாலய வாஸ விஷ்ணோ!!
-நாராயணீயம்
எங்கும் நிறைந்திருக்கும் குருவாயூரப்பா! பிரம்மாவைத் தோற்றுவித்தவரே! நீயே நோய்களைப் போக்கி நலம் தர வேண்டும்.
பி.சுவாமிநாதன்
swami1964@gmail.com
