ADDED : ஜன 15, 2026 01:40 PM

அந்த 81 ரகசியம்
கிருஷ்ணவேணியும், தேவாமிர்தமும் நடைப்பயிற்சி தோழிகள். வெவ்வேறு கிராமத்தைச் சேர்ந்த இவர்கள் தங்களின் மகன் வீட்டில் தங்கி இருக்கும் அப்பார்ட்மெண்ட்வாசிகள். உடல்நலனில் அக்கறையும், பொறுப்பும் கொண்ட 60+ பெண்கள். மழையைத் தவிர அவர்களின் நடைப்பயிற்சியை யாராலும் நிறுத்த முடியாது.
தொடக்கத்தில் குடும்பம், பிள்ளைகள், பேரக்குழந்தைகள் எனத் தொடங்கிய பேச்சு நட்பாக வளர்ந்த பின் தற்போது ஆன்மிகமாகி விட்டது. பெருமாள் பக்தையான கிருஷ்ணவேணியும், சிவபக்தையான தேவாமிர்தமும் தங்களுக்கு தெரிந்த பக்திக் கதைகளை பகிர்ந்தனர். இதனால் அவர்களது நடைப்பயிற்சி சுவாரஸ்யம் ஆனது.
அப்படி ஒருநாள் இருவரும் நடந்த போது தயிர் விற்கும் பெண் எதிரில் வந்தாள். அவளை கவனித்த கிருஷ்ணவேணி, திருக்கோளூர் பெண் பிள்ளை ரகசியத்தை சொன்னது கூட இவளைப்போல தயிர் விற்பவள் தான் என்றார். தேவாமிர்தத்திற்கு இது புரியாததால் அது என்ன ரகசியம், எனக்கு திருக்கோளூரில் குடியிருக்கும் பெருமாளை மட்டும் தெரியும் என்றார். அதற்கு கிருஷ்ணவேணி, ''திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் அர்த்தம் பொதிந்தது. அது பற்றி உங்களுக்கு தெரிந்ததை சொல்லுங்கள், ரகசியத்தை நான் சொல்கிறேன்'' என்றார்.
தேவாமிர்தம் தொடர்ந்தார். ''திருநெல்வேலிக்கு அருகில் உள்ள திவ்யதேசம் தான் திருக்கோளூர். இது நவதிருப்பதியில் ஒன்று. இங்குள்ள சுவாமியின் பெயர் வைத்தமாநிதிப் பெருமாள். ஒரு சமயம் சிவபெருமானை தரிசிக்க கைலாயம் சென்றார் குபேரன். அங்கு சிவனுக்கு அருகில் இருந்த அம்பிகையை பார்த்ததும் 'என்ன அழகு' என அவரது மனம் சலனப்பட்டது. இதை அறிந்த அம்பிகை, 'உன்னிடத்தில் பணம் இருப்பதால் தானே இப்படி எல்லாம் சிந்திக்கிறாய். நிதி இல்லாமல் போகட்டும்'' எனச் சொல்ல ஏழையானார் குபேரன்.
''தாயே மன்னியுங்கள்'' என வருந்தி சரணடையவே மனம் இரங்கினாள் அம்பிகை. ''இழந்த நிதியைப் பெற என் அண்ணனான திருக்கோளூர் வைத்தமாநிதிப் பெருமாளிடம் போய் கேள்'' என்றாள். அங்கு சென்று கேட்ட குபேரனுக்கு அளந்து, அளந்து நிதியை ஒரு பாத்திரத்தில் கொட்டினார் பெருமாள். அப்போது கொஞ்சம் நிதி கீழே சிந்தியது. அதைக் கண்டதும், 'கீழே சிந்தாமல் கொட்டுங்கள் சுவாமி' என்றார் குபேரன். சிரித்து விட்டு சிந்தாமல் கொட்டினார் பெருமாள். அளந்து முடித்ததும் நிதியை வாங்க குபேரன் கையேந்திய போது 'கீழே சிந்தியவை மட்டும் உனக்கு, பாத்திரத்தில் உள்ளவை எல்லாம் என் பக்தர்களுக்கு' எனச் சிரித்தார் பெருமாள். கீழே சிந்திய பணமே தற்போது குபேரனிடம் நிதியாக உள்ளது. அப்படிப்பட்ட பெருமாள் குடியிருக்கும் ஊரே திருக்கோளூர் என நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இதுவரை அங்கு போனதில்லை'' என முடித்தார் தேவாமிர்தம்.
''பரவாயில்லையே பெருமாளை பற்றி நிறைய கேள்விப்பட்டு இருக்கீங்களே! அப்போ அந்த ரகசியத்தை சொல்கிறேன்'' என சிரித்தார் கிருஷ்ணவேணி. அதைக் கேட்க காதுகளை கூர்மையாக்கினார் தேவாமிர்தம்.
''திருக்கோளூருக்கு (துாத்துக்குடி) ஒருமுறை மகான் ராமானுஜர் சென்று கொண்டிருந்தார். ஊருக்குள் காலடி எடுத்து வைக்கும் நேரத்தில் தயிர் விற்கும் பெண் ஒருத்தி ஊரை விட்டு வெளியேறும் நோக்கத்துடன் மூட்டை முடிச்சை துாக்கியபடி வந்தாள். இருவரும் சந்தித்த அந்த நிமிடம் விலை மதிக்க முடியாத தருணம். கருணை உள்ளம் கொண்ட ராமானுஜர் நமக்கு என்ன என ஒதுங்கி இருக்கவில்லை. ''பெண்ணே... எல்லோரும் புகும் ஊர் உனக்குப் போகும் ஊராகி விட்டதே! இவ்வளவு நல்ல ஊருக்கு வர வேண்டும் என நாங்கள் விரும்பி வருகிறோம். நீ மட்டும் ஏன் செல்கிறாய்'' எனக் கேட்டார்.
''சுவாமி, நான் சாதாரணமானவள். எந்த ஊரில் இருந்தால் என்ன? திருமாலின் பக்தர்களை போல் மகத்தான செயல்களை நான் செய்ததில்லை'' என்றாள். சொல்லியதோடு அவர்களின் அரிய செயல்களை பட்டியல் இட்டாள். ராமாயணம், மகாபாரதம், பாகவதத்தில் இடம் பெறும் 81 சான்றோர்களின் செயல்களை பாடலாகச் சொன்னாள். திருத்தலமான திருக்கோளூரில் வாழத் தகுதியற்றவள் என்பதால் ஊரை விட்டு வெளியேறுவதாகவும், வயலில் கிடக்கும் புழுக்கை போல பயனற்றதாக இருப்பதாகவும் சொல்லி வருந்தினாள்.
ராமானுஜரும், திருக்கோளூரை சேர்ந்த பக்தர்களும் அவளின் பக்தி, பணிவைக் கண்டு வியந்தனர். அவளுடன் சென்று பெருமாளை தரிசித்தனர். அவளின் வீட்டுக்குச் சென்ற ராமானுஜர், அவள் சமைத்த உணவை சாப்பிட்டார். அதைக் கண்ட சீடர்கள் பிரமித்தனர். ஏனென்றால் ராமானுஜர் தானாகவே சமைத்து உண்பார். இல்லாவிட்டால் உண்ண மாட்டார். ஆனால் அவர் சாப்பிட்டதைக் கண்டு சீடர்கள் மகிழ்ந்தனர். 'திருக்கோளூர் பெண்பிள்ளை' என்ற அந்த பெண்ணை அழைத்தார். அவள் சொன்ன வாக்கியங்களே 'திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்'. வைணவ இலக்கியமான இது நாட்டுப்புற வகையைச் சேர்ந்தது. திருக்கோளூர் பெண் பிள்ளை ரகசியம் ஒன்றல்ல இரண்டல்ல... மொத்தம் 81. அவை பற்றி தெரியுமா?” என நிறுத்தினார் கிருஷ்ணவேணி.
''அம்மாடி! 81 வாசகங்களா?” என வாய்பிளந்தார் தேவாமிர்தம். ஆமாம்... இந்த 81 ரகசியத்திற்குள்ளும் ஒரு கதை இருக்கு. ஆத்திசூடி, திருக்குறள் மாதிரி சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் பண்பு அந்த பெண்ணுக்கு கூட கை வந்திருக்கு பாருங்களேன், அதுதான் ஆச்சரியம்”
''அந்த 81 ரகசியங்களை சொல்லுங்களேன்”
''எனக்கு முழுசா ஞாபகம் இல்ல. தெரிந்ததை சொல்லத் தொடங்கினார் கிருஷ்ணவேணி.
* அழைத்து வருகிறேன் என்றேனோ அக்ரூரரைப் போலே!
* அகமொழித்து விட்டேனோ விதுரரைப் போலே!
* தேகத்தை விட்டேனோ ரிஷி பத்தினியைப் போலே!
* தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே!
* பிணமெழுப்பி விட்டேனோ தொண்டைமானைப் போலே!
* பிணவிருந்திட்டேனோ கண்டாகர்ணனைப் போலே!
* தாய் கோலம் செய்தேனோ அனுசூயையைப் போலே!
* தந்தை எங்கே என்றேனோ துருவனைப் போலே!
* மூன்றெழுத்து சொன்னேனோ க்ஷத்ரபந்துவைப் போலே!
* முதலடியை பெற்றேனோ அகலிகையைப் போலே!
* பிஞ்சாய்ப் பழுத்தேனோ ஆண்டாளைப் போலே!
* எம்பெருமான் என்றேனோ பட்டர் பிரானைப் போலே!
* ஆராய்ந்து விட்டேனோ திருமழிசையார் போலே!
* அவன் சிறியனென்றேனோ ஆழ்வாரைப் போலே!
* ஏதேனும் என்றேனோ குலசேகரரைப் போலே!
* யான் சத்யம் என்றேனோ ஆழ்வாரைப் போலே!
* அடையாளம் சொன்னேனோ கபந்தனைப் போலே!
* அந்தரங்கம் சொன்னேனோ திரிசடையைப் போலே!
* அவன் தெய்வம் என்றேனோ மண்டோதரியைப் போலே!
* அஹம் வேத்மி என்றேனோ விசுவாமித்திரரைப் போலே!
இப்படி 81 வாசகங்கள் என மூச்சு வாங்க இடைவெளி விட்ட கிருஷ்ணவேணி, இந்த திருக்கோளூரில் பிறந்தவர் தான் மதுரகவி ஆழ்வார். திருக்கோளூரில் இருந்து கூப்பிடு துாரத்தில் உள்ள திருக்குறுகூர் தான் நம்மாழ்வார் பிறந்த ஊர்” என ஆசுவாசமானார்.
''முதல் ரகசியம் அழைத்து வருவேனோ அக்ரூரரைப் போலே என்பதில் உள்ள கதையை கொஞ்சம் சொல்லுங்க கிருஷ்ணவேணி” என்றார் தேவாமிர்தம் ஆர்வமாக.
“அடடா… இன்னிக்கு நேரம் ஆயிடுச்சே. அதுவும் மழை வர்ற மாதிரி இருக்கு. நாளைக்கு சொல்றேன் வாங்க” எனச் சொன்னபடி இருவரும் நடைபாதையை விட்டு விலகி லிப்டை நோக்கி நடந்தனர்.
-தொடர்வாள் பெண்பிள்ளை
முனைவர் பவித்ரா நந்தகுமார்
82204 78043

