sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 27, 2026 ,மாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

தெய்வத் திருமணம் - 10

/

தெய்வத் திருமணம் - 10

தெய்வத் திருமணம் - 10

தெய்வத் திருமணம் - 10


ADDED : ஜன 15, 2026 02:14 PM

Google News

ADDED : ஜன 15, 2026 02:14 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இந்திரன் - இந்திராணி திருமணம்

அண்டப்பெருவெளியில் உள்ள பதினான்கு உலகங்களில் இந்திரன் ஆட்சி புரியும் தேவ உலகமே மிக உயர்வானது. இங்கு வாழும் கந்தர்வர்கள் எனும் தேவர்கள், ஆடல், பாடல், கேளிக்கை என எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பர். இதை சொர்க்கம் என்பர். தேவ உலகின் அரசனாக வேண்டும் என்ற எண்ணத்தில் இந்திரனை எதிர்த்துப் பல அசுரர்கள் போர் செய்தனர். அவர்களை எல்லாம் அழித்து, இந்திரனே தேவேலோக அரசனாகத் தொடர்ந்து கொண்டிருந்தார்.

இடையில் கடும்தவம் செய்த சில அசுரர்கள், தங்களை அழிக்க முடியாதபடி வரம் பெற்று, இந்திரனைப் போரில் வென்று, தேவலோகத்தைக் கைப்பற்றினர். அதனால் தவம் செய்பவர்களைக் கண்டாலே இந்திரனுக்கு பிடிக்காது. அசுரர்கள், முனிவர்கள், தேவர்கள் என யார் தவம் செய்தாலும், அவர்களால் தன் பதவிக்கு ஆபத்து வருமோ என்ற பயத்தில் அவர்களின் தவத்தைப் கலைத்து விடுவார். அழகிகளான ஊர்வசி, ரம்பை, மேனகா போன்றவர்களை அனுப்பி, சிலரின் தவத்தைக் கலைக்கவும் செய்வார்.

காசியப முனிவர், தட்சன் மகளான தனுவிற்குப் பிறந்தவர்கள் அசுரக் குலத்தவர்களில் ஒரு பிரிவினரை தானவர்கள் என்பர். தானவர்களில் ஒருவரான பூலோமன் வலிமையுடையவனாக இருந்தான். அவனுக்கும் தன் முன்னோர்களைப் போல தேவலோகத்தைக் கைப்பற்றி, அரசனாக வேண்டுமென விருப்பம் உண்டானது.

அவனது மகள் பூலோமஜா எனும் ஷாச்சி அசுரக் குலத்தில் பிறந்திருந்தாலும், தீய செயல்களுக்கு எதிராகவும், பக்தி மிக்கவளாகவும் இருந்தாள். தேவலோக மங்கையர்களை விட அழகாகவும் இருந்தாள்.

இந்திரனுடன் போரிட வேண்டுமென்ற தந்தையின் விருப்பத்தை அறிந்த அவள், தந்தையின் எண்ணம் தவறானது என்றும், முன்னோர்கள் செய்த தவறைத் தாங்களும் செய்யக் கூடாது என்றும் அறிவுறுத்தினாள். மகளின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு பூலோமனும் தன் விருப்பத்தைக் கட்டுப்படுத்தி வைத்திருந்தான்.

அந்தக் கட்டுப்பாடு அதிகக் காலம் நீடிக்கவில்லை. இந்திரனைப் போரில் தோற்கடித்து, தேவ உலகத்தின் அரசனாக வேண்டுமென்ற எண்ணம் அதிகமானது. அவன் ஒருநாள் அசுரப் படையினரை அழைத்துக் கொண்டு தேவ உலகத்துக்குச் சென்று போரிட்டான். அறிவிப்புமின்றி போர் செய்த பூலோமனின் தாக்குதலால் இந்திரனும், அவனது படையினரும் பாதிப்படைந்தனர். இந்திரனுக்கும் பூலோமனுக்கும் இடையே போர் கடுமையாக இருந்தது. இருதரப்பினரும் தங்களின் வலிமையையும், உறுதியையும் வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் பூலோமனிடம் தொடர்ந்து போரிட முடியாத இந்திரன், தன் வச்சிராயுதத்தைப் பயன்படுத்திப் பூலோமனைக் கொன்றான். இதை அறிந்த அசுரப் படையினர் அதிர்ச்சியடைந்தனர். பூலோமன் இல்லாமல் போரிட முடியாது என கருதிய அசுரர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். இந்திரனும், அவனது படையினரும் அசுரர்களை விரட்டிக் கொண்டு அவர்கள் பின் தொடர்ந்தனர்.

உயிருக்குப் பயந்து ஓடிய அசுரர்கள், பூலோமன் மகள் ஷாச்சியிடம் போய் சரணடைந்தனர். போரில் தந்தை பூலோமன் கொல்லப்பட்டதை அறிந்து அவள் வருந்தினாள். அவள் அசுரர்களிடம், “போர் என்பது பெருமையல்ல, அமைதியாய் வாழ்வதே பெருமை. போரில் ஒரு பிரிவினர் வெற்றியைப் பெற்றாலும், இரு பிரிவினருக்கும் ஏற்படும் இழப்புகள்தான் அதிகம். போரில் இழந்த உயிர்கள் எதையும் மீட்க முடியாது. இழந்த உடைமைகளை மீண்டும் உருவாக்க அதிகக் காலம் தேவைப்படும்” என்றாள்.

அசுரர்களை விரட்டிக் கொண்டு ஓடிய இந்திரன், அவளின் பேச்சைக் கேட்டு அப்படியே நின்றார். போரில் தந்தையை இழந்த நிலையிலும், அவளுடைய பேச்சிலிருந்த உண்மையும், அவளின் சிந்தனையும் அவரை நெகிழச் செய்தது. அவருக்கு அவள் மீது மதிப்பு ஏற்பட்டது. அவளின் சிந்தனை, அழகை கண்டு வியந்து அவளைத் திருமணம் செய்ய முடிவு செய்தார்.

அசுரர்களின் பின்னால் வந்த இந்திரனையும், அவரது படையினரையும் கண்ட ஷாச்சி, அவர்களை வரவேற்றாள். அவள் இந்திரனிடம், “இங்கிருக்கும் அசுரர்கள், உயிருக்குப் பயந்து இங்கு ஓடி வந்திருக்கின்றனர். என் தந்தையைக் கொன்றது போல் இவர்களையும் கொன்று விடாதீர்கள். இவர்களால் இனி பாதிப்பு ஏற்படாது என உறுதி அளிக்கிறேன்” என்றாள்.

அதனைக் கேட்ட இந்திரன், “அசுரர்களுக்குச் சொன்ன அறிவுரையை நானும் கேட்டேன். அது தேவர்களுக்கும் பொருந்தும். போர் இனியும் தொடராதிருக்க, ஒரு முடிவு செய்திருக்கிறேன்” என்றான். ''அசுரர்கள், தேவர்களுக்கு நன்மை தருவதாக இருந்தால் அசுரர்களை அதை ஏற்கச் செய்கிறேன்'' என்றாள் ஷாச்சி.

உடனே இந்திரன், “என்னுடைய சக்தி, தங்களின் கருணை என இரண்டும் இணைந்தால் தேவர்கள், அசுரர்கள் இணைந்து செயல்படும் வாய்ப்பு ஏற்படும். இருவருக்கிடையே நல்லிணக்கம் ஏற்படும்” என்றான். அதனைக் கேட்ட ஷாச்சி, 'இருவருக்கும் ஒற்றுமையாக இருக்க என்ன வழி? சொல்லுங்கள்” என்றாள்.

இந்திரன், “தங்களைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். திருமணம் நடந்தால், அசுர குலத்தைச் சேர்ந்த தாங்கள், தேவ உலகத்தின் அரசியாகி விடுவீர்கள். இதன் மூலம், அசுரர்களுக்கு நம் குலத்தவர் தேவ உலக அரசியாக இருக்கிறார் என்ற எண்ணம் ஏற்படும். அசுரர்களுக்கும் தேவலோகத்தை தனதாக்கிக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் போகும். தேவர்களுக்கு நம் அரசி அசுர குலத்திலிருந்து வந்தவர் என்கிற எண்ணம் ஏற்படுவதுடன் அசுரர்களை நண்பராக, உறவினராகக் கருதுவர்” என்றார்.

ஷாச்சிக்கும் இது சரியெனப்பட்டது. அவள் அங்கிருந்த அசுரர்களிடம், '' நான் இந்திரனைத் திருமணம் செய்து கொள்ளட்டுமா?'' எனக் கேட்டாள். அவர்களும் திருமணம் செய்து கொள்ளச் சம்மதித்தனர்.

அதன் பின் இந்திரனுக்கும் ஷாச்சிக்கும் பங்குனி மாத உத்திர நட்சத்திர நாளில் திருமணம் நடந்தது. இதில் சிவன், பார்வதி, திருமால், திருமகள், பிரம்மா, சரஸ்வதி நேரில் வந்து வாழ்த்தினர். இதே போல தேவர்கள், அசுரர்கள் என இரு பிரிவினரும் பங்கேற்று மகிழ்ந்தனர்.

இதன் மூலம் இந்திரன் தேவர்கள், அசுரர்களுக்கு இடையே ஒற்றுமை உருவானது. இதே போல ஷாச்சியின் சிந்தனை மிக்க பேச்சு, பக்தியால் தேவ உலகத்தின் அரசியாக, இந்திராணியாக சிறப்பிடம் பெற்றாள். இந்திரன், இந்திராணி திருமணம் இரு பிரிவினருக்கு இடையே இருந்த பகையை போக்கி அமைதிக்கு வழிவகுத்தது.



விவசாயிகளின் தெய்வம்

நான்கு தந்தம் கொண்ட வெள்ளை யானை (ஐராவதம்) மீது பவனி வருபவர் இந்திரன். அமராவதியைத் தலைநகராகக் கொண்டு இவர் ஆட்சி செய்கிறார்.

யாகங்களில் வழங்கப்படும் அஹுதியே (காணிக்கை) தேவர்களுக்கு உணவாகும். அதற்கு ஈடாக தேவர்கள் இயற்கை நிகழ்வுடன் தொடர்புடைய பல நன்மைகளை வழங்குகின்றனர். உயிர்கள் செழிக்கவும், பருவங்களின் சுழற்சிக்கும் இந்திரனே முதன்மையான தெய்வம். இடி, மழை, ஆறுகள், வானிலை சக்திகளின் கடவுள் இவரே. மழை பெய்யவும், பயிர்கள் செழித்து வளரவும் விவசாயிகள் இவரை வணங்குகின்றனர். போரில் வெற்றியைத் தர வேண்டுமென இந்திரனை போர்க் கடவுளாக மன்னர்கள் வழிபட்டனர். ரிக்வேதத்தில் முன்னுாறுக்கும் அதிகமான பாடல்களில் இந்திரன் போற்றப்படுகிறார்.



-திருமணம் தொடரும்

தேனி மு.சுப்பிரமணி

99407 85925






      Dinamalar
      Follow us