தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/பாரதியாரின் ஆத்திசூடி - 29

பாரதியாரின் ஆத்திசூடி - 29

பாரதியாரின் ஆத்திசூடி - 29


ADDED : ஜன 22, 2026 01:07 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 22, 2026 01:07 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தோல்வியில் கலங்கேல்

விழுவதைக் கூட வெற்றி ஆக்கலாம் நீ நியூட்டன் ஆக இருந்தால் என ஒரு புதுக்கவிதை எழுதி இருந்தேன். காலம் காலமாக எத்தனையோ பேர் ஆப்பிள் மரத்தின் கீழ் அமர்ந்து, பழம் விழுவதைப் பார்த்து இருந்தாலும், நியூட்டன் மனதில் மட்டும் பொறி தட்டியது. அவரால் புவியீர்ப்பு விசை பற்றி அறிய முடிந்தது. எந்தக் கண்டுபிடிப்பும் ஒரே நாளில் அறியப்பட்டதல்ல.

ஆம். நாளுக்கு நாள், படிப்படியாக, அங்குலம் அங்குலமாக முன்னேறச் சொல்கிற ஆக்கப்பூர்வமான செயல் திட்டமே வெற்றியின் நோக்கு. யாராக இருந்தாலும், ஒட்டு மொத்தமாக ஒரே நாளில், எதையும் சாதிக்க முடியாது. அப்படி கிடைக்கும் வெற்றியும் நிலைக்காது.

நீண்ட காலத் தொடர் வினைகளின் விளைவாக நீடித்த நன்மை விளையும் என்ற உண்மையை, இரு சொற்களில் அடக்கி விட்ட அற்புதமே பாரதியாரின் ஆத்திசூடி.

வாழ்வில் ஏற்படும் தோல்வியைக் கண்டு மனம் தளராமல் தொடர்ந்து முயற்சிக்க வேண்டும் என்ற கருத்தை

செய்தல் உன் கடனே அறம் செய்தல் உன் கடனே

அதில் எய்திடும் விளைவினில் எண்ணம் வைக்காதே

என்கிறார் பாரதியார். பகவத் கீதையில் கண்ணன் கூறும் 'கடமையைச் செய்; பலனைப் பற்றி கவலைப்படாதே' என்ற வரிகள்தான் இவை. கீதையின் இரண்டாம் அத்தியாயமான சாங்க்ய யோகத்தில், 15, 48 வது ஸ்லோகங்களில், அர்ஜுனா, மகிழ்ச்சி மற்றும் துன்பத்தால் பாதிக்கப்படாமல் இரண்டிலும் நிலையாக இருப்பவனே உன்னதமான மனிதன். அத்தகையவன் விடுதலைக்குத் தகுதி பெறுகிறான்.

வெற்றி, தோல்வி மீதான பற்றைக் கைவிட்டு கடமையைச் செய்வதில் உறுதியாக இரு. அத்தகைய சமநிலை யோகம் எனப்படும். இந்நிலையை அடைந்தவனே 'ஸ்திதப்ரக்ஞன்'. அவனுக்கு வெற்றி - தோல்வி, மகிழ்ச்சி - துக்கம், குளிர் - கோடை, மேடு - பள்ளம் என எல்லாமே ஒன்றுதான் என்கிறான். மேலும் கீதையில்,

பூர்யமானம் அசலப்ரதிஷ்டம் ஸமுத்ரமாப : ப்ரவிசந்தி யத்வத்

த்வத்வத்காம யம் ப்ரவிசந்தி ஸர்வே ஸ சாந்திமாப்நோதி ந காமகாமீ

அதாவது, கடலில் எவ்வளவு மழை நீர் வந்து சேர்ந்தாலும் அது ஒரு போதும் துள்ளிக் குதித்துக் கரையை மீறுவது கிடையாது. அதே போல அந்தக் கடலின் நீர், வெய்யிலின் தாக்கத்தால் நீராவியாகிப் போகும் போதும் அது உள்ளே சென்று மறைவதில்லை. என்றும் நிலைகுலையாமல் அமைதியாக உள்ளது.

நிலையான உள்ளம் கொண்ட மனிதன் ஒருபோதும் கலங்க மாட்டான். ஆனால் உள்ளம் நிலையற்று இருப்பவன் ஒருபோதும் அமைதி அடையமாட்டான். ஆதிசங்கரரும், விவேகானந்தரும் இதைத் தான் கூறுகிறார்கள்.

இந்த வரிகளை கண்ணதாசன்,

கடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன்

அது கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன்

உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கண்ணா

இதை உணர்ந்து கொண்டேன்

துன்பமெல்லாம் விலகும் கண்ணா

என எளிமையாகச் சொல்கிறார்.

எத்தனை முட்டுக்கட்டைகள் ? தடைகள்? மிரட்டல்கள்? அத்தனையும் மீறி, இன்றைய தோல்வி, நாளைய வெற்றி என்றே பாரதி எதிர்கால தொலைநோக்குடன் பாடி இருக்கிறார்.

ஆயுதம் செய்வோம்,

நல்ல காகிதம் செய்வோம்,

ஆலைகள் வைப்போம்,

கல்விச் சாலைகள் வைப்போம்.

நடையும் பறப்புமுணர்

வண்டிகள் செய்வோம்,

ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் செய்வோம்.

என்றும்,

பாரத நாடு பழம்பெரும் நாடு!

நீரதன் புதல்வர்!

இந்நினைவகற்றாதீர்!

என்றும் தோல்வி காணாத வெற்றியை நோக்கிப் பாடுகிறார்.

ஆங்கில அரசின் அச்சுறுத்தலுக்கு நடுவில்,

ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோம்

என்று ஆடுவோமே - பள்ளுப் பாடுவோமே

என்கிறார். அவருக்குத் தோல்வி பயமே இல்லை. வெற்றி எட்டுத் திக்கு எங்கும் கொட்டு முரசே என பாடுவதுடன், அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும் முற்றிலும் இருக்கக் கூடாது என்கிறார்.

பாரதத்தில் தர்மன் தோல்வியால் கலங்கும் போதெல்லாம், கண்ணன் ஊக்கப்படுத்தினார்.

கணிதமேதை ராமானுஜம், பள்ளியில் படிக்கும்போது மற்ற பாடங்களில் தோல்வி அடைந்தவர். ஆனால் அவர் தொட்ட சிகரம் யாரும் தொட முடியாதது.

ஹரிஹரர், புக்கர் என்ற இளைஞர்கள் நாடிழந்து நாடோடியாக சுற்றிய போது, சிருங்கேரி சாரதா பீடத்தின் 12ம் பீடாதிபதி ஜகத்குரு வித்யாரண்யர் கொடுத்த ஊக்கத்தால் விஜயநகர பேரரசை உருவாக்கினர்.

கவிஞரும் இயக்குனருமான ஆபாவாணன்,

தோல்வி நிலையென நினைத்தால் - மனிதன்

வாழ்வை நினைக்கலாமா?

உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம்

உணர்வை இழக்கலாமா?

உணர்வைக் கொடுத்து உயிராய் வளர்த்த

கனவை மறக்கலாமா?

வரிகள் பாரதியாரின் அடியொற்றி வந்தவை.

இளம் வயதில் ஆதிசங்கரரைச் சந்தித்த கேரள மன்னர் ராஜசேகர், பல ஆண்டுகள் கழித்து மீண்டும் அவரைச் சந்தித்த போது, தான் எழுதிய நாடகங்கள் தொலைந்து போயின என மனம் கலங்கினார். கவலை வேண்டாம் என்றும், அன்று என்னிடம் கூறியதை நான் இப்போது கூறுகிறேன் என தன் அவதானப் பயிற்சியால் நினைவுபடுத்திக் கூறினார் ஆதி சங்கரர்.

குஜராத்தில் உள்ள சோமநாதர் கோயில், பத்து முறைக்கு மேல் இடிக்கப்பட்டு சூறையாடப் பட்டது. ஒவ்வொரு முறையும் அன்றைய மன்னர்களால் மீண்டும் மீண்டும் கட்டப்பட்டது. அதனால்தான் சுதந்திரம் அடைந்தவுடன், அன்றைய துணைப்பிரதமர் படேல், வழிகாட்டலில் ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் தலைமையில் கோயில் புனரமைக்கப்பட்டது.

தனது முதல் ஏவுகணை முயற்சி தோல்வி அடைந்ததால் கலங்கிய இளம் விஞ்ஞானி அப்துல் கலாமை ஊக்கப்படுத்தி, அடுத்த முறையே வெற்றி பெற வைத்தவர் கலாமின் உயரதிகாரியான தாவன். 1983ல் உலகக் கோப்பை விளையாட்டில் தொடக்கப் போட்டிகளில் தோல்வி அடைந்தாலும், அணித்தலைவர் கபில்தேவ் சிறப்பாக விளையாடி, உலகக் கோப்பையை வென்றது சாதனை தானே.

வித்து முளைக்கும் தன்மை போல என்ற வரிகளை நோக்குங்கள். நாளுக்கு நாள் சிறு மாற்றம் ஏற்படுவது போல, விதையானது முளைவிட்டுச் செடியாகி, மரமாகிப் படர்ந்து நிற்கிறது. இங்கே பொறுமை, முயற்சியின் முக்கியத்துவம் வெளிப்படுகிறது.

பலரது வாழ்வில் வந்து விட்ட வியாதியை விட, வந்து விடுமோ என பயப்படும் வியாதியே கீழே தள்ளி வீழ்த்துகிறது. பலப்படுவோம் என்ற எண்ணங்களால், நம்பிக்கைகளால்... மனதளவில் பலத்தோடு இருப்போம்.

சக்தியை வணங்குவதன் மூலம் மன வலிமை, வெற்றியை பெற முடியும் என 'சக்திப் பாடல்கள்' மூலம் வலியுறுத்திய பாரதி, தோல்விகளைக் கண்டு தளராமல், எழுந்து போராட வேண்டும் என்ற செய்தியை 'காணி நிலம் வேண்டும்' போன்ற பாடல்களில் தந்திருக்கிறார்.

தேசம், மொழி, சமூகம் தாண்டி, தனி மனித உணர்வுகளை, நுண்ணிய வாழ்வியல் கருத்துகளைத் தாங்கிய பாரதியாரின் கருத்துக்களை எல்லோரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என்பார் விவேகானந்தா கல்லுாரியின் மேனாள் முதல்வர் பேராசிரியர் வ.வே.சு., அவர்கள்.

தோல்வியில் கலங்காமல் அந்த மீசைக்கவி தலை நிமிர்ந்து, பீடு நடையுடன் பாடுவது எவ்வளவு சிறப்பு?

நல்லறம் நாடிய மன்னரை வாழ்த்தி

நயம் புரிவாள் எங்கள் தாய் - அவர்

அல்லவர் ஆயின் அவரை விழுங்கிப் பின்

ஆனந்தக் கூத்திடுவாள்

திடமனத்துடன் நம் கடமையைச் செய்வோம். எதிரே வருபவன் தீயவன் என்றால், எனது மண்ணின் அன்னை அவனைப் பார்த்துக் கொள்வாள் என்பதில் தான் அவனுக்கு எத்துணை கர்வம் ?

யாதுமாகி நின்றாய் காளி!

எங்கும் நீ நிறைந்தாய்;

தீது நன்மை யெல்லாம் காளி!

தெய்வ லீலை யன்றோ;

பின்பு நின்னை யல்லால் காளி!

பிறிது நானும் உண்டோ?

அன்பளித்து விட்டாய் காளி!

ஆண்மை தந்து விட்டாய்;

துன்பம் நீக்கிவிட்டாய் காளி!

தொல்லை போக்கிவிட்டாய்!

என துதித்து நம் பணியைச் செய்தால், தோல்விபயம் தேவையில்லை என்றும் காளி அருள் நமக்குண்டு என்கிறார் நம்பிக்கையுடன்.

எனவே தோல்வி என்பதும் வெற்றியின் ஒரு பகுதியே. பாரதியாரின் பாடல்கள், தனிப்பட்ட தோல்விகளை மட்டுமின்றி, தேசத்தின் தோல்விகளையும் கடந்து, எழுச்சியுடனும், நம்பிக்கையுடனும் முன்னேற வழிகாட்டும் கருவிகளாகவும், விடுதலை வேட்கையைத் துாண்டவும் உதவின.



-ஆத்திசூடி தொடரும்

முனைவர் தென்காசி கணேசன்

94447 94010

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us