தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/சித்தர்களின் விளையாட்டு - 15

சித்தர்களின் விளையாட்டு - 15

சித்தர்களின் விளையாட்டு - 15


ADDED : ஜன 22, 2026 01:04 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 22, 2026 01:04 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சுந்தரானந்தர்

“சித்தர் சுந்தரானந்தர் பற்றித் தானே சொல்கிறீர்கள். தாங்கள் திருவிளையாடல் நிகழ்த்திய மதுரையில்தானே அவர் கல்சிலைக்கு உயிர் கொடுத்து யானையாக மாற்றினார்” என பார்வதி ஆர்வமுடன் கேட்டாள்.

அதற்கு மகேஸ்வரன், ''கிஷ்கிந்த மலையில் தவக்கோலத்தில் ஆழ்ந்திருக்கும் நவகண்ட ரிஷியின் வம்சத்தில் தோன்றியவர் சுந்தரானந்தர். ஆரம்பத்தில் இல்லற வாழ்வில் ஆர்வம் கொண்டு தன் பெற்றோருடன் வசித்து வந்த சுந்தரானந்தருக்கு நாட்கள் செல்ல செல்ல சிவ வழிபாட்டில் ஆர்வம் ஏற்பட்டது.

சிவனை வணங்கி கொஞ்சம் கொஞ்சமாக ஆன்மிகத்தில் திளைக்க ஆரம்பித்தார். தன் குருநாதர் சட்டைமுனி சித்தரிடம் உபதேசம் பெற்று துறவு வாழ்வைத் தொடங்கினார். சதுரகிரி மலைக்குச் சென்று அகத்தியரை வணங்கி அவரிடம் வேண்டிப் பெற்ற சிவலிங்கத்தை சதுரகிரியில் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். ஆடி அமாவாசையன்று அனைத்து சித்தர்களுடன் சிவ வழிபாட்டில் ஈடுபட்டார்.

அட்டமாசித்தி என்ற எட்டு சித்து விளையாட்டுகளை கற்றுத் தேர்ந்தார். ஜோதிடக்கலையில் வல்லவரானார். மனிதர்களுக்கு ஜோதிடம் பார்ப்பது போல் மூலிகைகளுக்கும் ஜோதிடம் பார்க்கும் திறமை பெற்றிருந்தார். ஒரு மூலிகையை பார்த்து அதன் ஆயுட்காலம் எவ்வளவு என்பதை ஜோதிடம் மூலம் கணித்து, அந்த மூலிகை அழியும் முன்பே அதனை பயிர்ப் பெருக்கம் செய்து சாதனை படைத்தார். பூச்சி, விலங்குகளால் ஏற்படும் விஷக் கடிகளுக்கு மருந்துகள் கண்டுபிடித்தார்.

சுந்தரானந்தர் சதுரகிரி முழுவதையும் மூலிகை வனமாக மாற்றினார். தன் குருநாதர் சட்டைமுனியுடன் இணைந்து சித்த மருத்துவம், ஜோதிடம் மந்திரத்தை கற்றுத் தேர்ந்தார். மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரரை தரிசிக்க சதுரகிரியில் இருந்து மதுரைக்கு வந்தார். சுந்தரானந்தர் சதுரகிரி மலையில் இருந்து மதுரை வருவதை அறிந்த சிவனடியார்கள் அவரை வணங்கி வரவேற்றனர். அவர் பார்வை பட்டாலே போதும் நோய் தீரும் என நம்பி அவர் வரும் பாதையெல்லாம் மக்கள் வணங்கி ஆசி பெற்றனர். அவரிடம் ஆசி பெற்ற அனைவருக்கும் சூரியனைக் கண்ட பனி போல நோய் நீங்கியது. இதை அறிந்து மதுரையே விழாக்கோலம் பூண்டு சுந்தரானந்தரை வரவேற்றது.

தன்னை சந்தித்த வறியவரின் ஏழ்மையை நீக்க சித்து விளையாட்டால் தரையில் கிடக்கும் கற்களை எல்லாம் பொற்காசுகளாக மாற்றி வழங்கினார். சித்தர் மீது பொறாமை கொண்ட மதுரை மன்னன் அபிஷேக பாண்டியன் அரண்மனை காவலர்களை அனுப்பி “சுந்தரானந்தர் மதுரைக்குள் நுழையும் முன் என்னை வந்து பார்க்க வேண்டும்” எனக் கட்டளையிட்டார்.

காவலர்களும் சித்தரை வணங்கி “ பாண்டிய மன்னர் தங்களை உடனே சந்திக்க வேண்டுமாம். ஆகவே உங்களை அரண்மனைக்கு அழைத்து வரச்சொன்னார்” என்றனர்.

“காவலர்களே! மீனாட்சி சுந்தரேஸ்வரரை வணங்க மதுரைக்கு வந்திருக்கிறேன். கோயிலில் தரிசனம் முடித்ததும் வருகிறேன். அதற்கு முன்பே மன்னர் என்னைப் பார்க்க விரும்பினால் அவர் வேண்டுமானால் இங்கே வரட்டும்” என சொல்லியபடி நடக்க ஆரம்பித்தார்

சுந்தரானந்தர் மீது கோபம் கொண்ட மன்னன், தன் ஆணைக்கு இணங்க மறுத்ததால் அவருக்கு தண்டனை தர முடிவு செய்தார். அம்மன் சன்னதி தெருவில் இருந்து கோயிலுக்குள் செல்ல முயன்ற சுந்தரானந்தரை தடுத்து நிறுத்தினார்.

“என்ன சித்தரே! நீங்கள் என்ன நாட்டின் மன்னரை விடப் பெரியவரா? உண்மையிலேயே நீங்கள் சக்தி வாய்ந்த சித்தர் தானா அல்லது உங்களை பெரிய சித்தர் போல் காட்டுவதற்காக நாடகமாடுகிறீரா?” எனக் கேட்டார்.

ஆனால் அவரோ புன்னகைத்தார். ஆனால் மன்னன் விடவில்லை. அவரை நோக்கி “சித்தரே! நீர் சித்து விளையாட்டில் வல்லவராமே? உண்மையிலேயே ஆற்றல் பெற்ற சித்தர் என்றால், இங்கே இருக்கும் கல் யானையிடம் இந்தக் கரும்பை கொடுத்து சாப்பிடச் சொல்லுங்கள் பார்ப்போம்” எனக் கேலி செய்தார்.

மன்னரின் ஏளனத்தை புரிந்து கொண்ட சுந்தரானந்தர் புன்னகைத்து விட்டு கரும்பை வாங்கி கல்லால் செய்யப்பட்ட யானையிடம் நீட்டினார். என்ன ஆச்சரியம்! சுந்தரானந்தர் கரும்பை நீட்டியதும் சிலை அசைந்தது. முழு யானையாக உருவம் எடுத்து தன் தும்பிக்கையை நீட்டி சுந்தரானந்தரை வணங்கியது. அவர் கையில் இருந்த கரும்பைப் பற்றி இழுத்து சாப்பிட ஆரம்பித்தது.

அதிசயித்தபடி “சுந்தரானந்தரே! என்னை மன்னியுங்கள். மன்னன் என்ற அகந்தையினால் தங்களின் பெருமை தெரியாமல் அவமதித்து விட்டேன். என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்றுக் கொள்கிறேன்” என சித்தரின் காலில் விழுந்து வணங்கினார்.

ஆசியளித்த சுந்தரானந்தர் அவருக்கு அறிவுரை கூறினார். பின்னர் அமைதியாக கோயிலின் உள்ளே சென்று மீனாட்சி சுந்தரேஸ்வரரை தரிசித்தார். அங்கிருந்து செல்ல மனமின்றி ஈசனின் காலடியில் என்றும் இருக்க விரும்பி கோயிலிலேயே தியானக் கோலத்தில் அமர்ந்து முக்தியடைந்தார். இன்றும் சுந்தரானந்தர் சன்னதியில் நோய்கள் தீரவும், மன அமைதி பெறவும் வழிபடுகின்றனர். தங்களின் விருப்பம் நிறைவேற பூக்கூடாரம் சாத்தி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

“சுந்தரானந்தர் சதுரகிரியில் இருந்த போது மனையடி சாஸ்திரம் மூலம் மூலிகைகளின் ஆயுள் காலத்தை நீடிக்கலாம் எனக் கண்டறிந்து இறவா மூலிகைகளை வளர்க்க ஆரம்பித்தார். அது போல விஷ ஜந்துக்களால் ஆபத்து ஏற்படும் போது செய்யும் மருத்துவம் பற்றி விஷநிவாரணி என்ற நுாலை எழுதினார். 'முப்பு' என்ற மருந்து மூலம் கொடிய பிணிகளை நீக்கலாம் என்பதை 'சுந்தரானந்தர் முப்பு' என்ற நுாலில் குறிப்பிட்டார். வைத்தியத் திரட்டு, காவியம், வாக்கிய சூத்திரம், தீட்சாவிதி, பூஜாவிதி, சிவயோகஞானம் போன்ற நுால்களை இயற்றினார்.

சுந்தரானந்தர் எழுதிய ஜோதிட காவியம் ஜோதிடர்களுக்கு முன்னோடியாக விளங்குகிறது. விலங்குகள், பயிர்களுக்கு ஜோதிடம் பார்க்க முடியும் என்பது இவரின் திறமைக்குச் சான்று” என முடித்தார் பரமேஸ்வரர்.

“சுந்தரானந்தரைப் பற்றி கேள்விப்பட்டுள்ளேன். அவரது ஜோதிடத் திறமை என்னை வியக்க வைக்கிறது. ஆன்மிகமும் சித்தர்களும் எப்படி பின்னி பிணைந்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது” என வியந்தார் நாரதர்.

“எல்லாம் மகேஸ்வரனாகிய தங்களின் திருவிளையாடல் தானே” என பார்வதி புன்னகைத்தாள்.



-விளையாட்டு தொடரும்

ஜெ.ஜெயவெங்கடேஷ்

90030 00250

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us