sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 16, 2026 ,மாசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

பாரதியாரின் ஆத்திசூடி - 32

/

பாரதியாரின் ஆத்திசூடி - 32

பாரதியாரின் ஆத்திசூடி - 32

பாரதியாரின் ஆத்திசூடி - 32


ADDED : பிப் 12, 2026 11:16 AM

Google News

ADDED : பிப் 12, 2026 11:16 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துன்பம் மறந்திடு

அவ்வையாரின் ஆத்திசூடி 'அறம் செய விரும்பு' எனத் தொடங்குகிறது. இதற்கு மாறாக பாரதியாரோ 'அச்சம் தவிர்' என ஆரம்பிப்பதே கவலை, துன்பங்களை மறப்பதற்கே என புரிகிறது. அச்சமே நரகம்; அதனைச் சுட்டு நல்லதை நம்பி நல்லதே செய் எனக் கூறுவதுடன், கீழோர்க்கு அஞ்சேல், தீயோர்க்கு அஞ்சேல், சாவதற்கு அஞ்சேல், பேய்களுக்கு அஞ்சேல் என்றும், கிலி படைத்த நெஞ்சினாய் போ போ போ என்றும் பாடுகிறார். இவை தானே துன்பத்திற்குக் காரணம்.

துன்பத்தை கண்டு அஞ்சாமல் தைரியமாக முன்னேற வேண்டும் என்கிறார் பாரதியார். துன்பத்தை மறக்க மனம் எழுச்சியுடன் இருக்க வேண்டும் என்பதை 'குன்றென நிமிர்ந்து நில்' என்கிறார். தன் அரசியல் குருவான திலகர் பற்றி சொல்லும் போது, 'துன்பம் என்னும் கடலைக் கடக்கும் தோணி அவனுடைய பெயர்' என்கிறார். கடல் போல் துன்பம் இருந்தாலும் திலகரைப் போன்ற தலைவர்களின் வழிகாட்டுதலை, அறிவுரைகளைத் தோணியாகக் கொண்டு துன்பக் கடலைக் கடக்க வேண்டும் என்கிறார்.

நாட்டுக்காக விடுதலை போரில் ஈடுபட்டவர்கள் பட்ட துன்பம் தான் எத்தனை எத்தனை? நீலகண்ட பிரம்மச்சாரி, சுப்ரமணிய சிவா, வ.உ.சி., வ.வே.சு.அய்யர், வாஞ்சிநாதன் போன்றோர் அரசுப்பணியில் சேர்ந்து வசதியாக வாழ்ந்தவர்கள். ஆனால் தாங்கள் பட்ட துன்பத்தை எல்லாம் மறந்து, சுதந்திரம் விரைவில் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருந்தவர்கள். பாரத தாயையே வணங்கி நின்றவர்கள்.

கல்லுாரிப் படிப்பு முடித்த பின், நேர்முகத் தேர்வில் இடம் பெற்ற பயிற்சியின் போது கீழே விழுந்து கழுத்துக்குக் கீழே அனைத்து உறுப்புகளும் செயல் இழந்த நிலையிலும், துன்பத்தை மறந்து, எதிர் நீச்சல் போட்டு, இன்று பலருக்கு ஆலமரமாகி நிற்கும் ஆய்க்குடி அமர்சேவா சங்கத்தை அமைத்த ராமகிருஷ்ணன் நமக்கு ஒரு உதாரணம்.

மூதறிஞர் ராஜாஜி, பேராசிரியர் கல்கி கிருஷ்ணமூர்த்தி, கணிதமேதை ராமானுஜம் போன்றவர்கள் தொடர் உடல் உபாதை இருந்தும், துன்பத்தை மறந்து, எடுத்த முயற்சியில் வெற்றி பெற்றனர். புராண காலத்தில் தர்மபுத்திரன், ஹரிச்சந்திரன் போன்றோர் அனுபவித்த துன்பங்களை எல்லாம் அவர்களின் பக்தியால் கடந்ததைப் பார்க்கிறோம். பாரதியாரும்,துன்பமும் நோயும் மிடிமையும் தீர்த்துச் சுகமருளல் வேண்டும்' என்றும்,

துன்பம் இனியில்லை, சோர்வில்லை, தோற்பில்லை

அன்பு நெறியினில் அறங்கள் வளர்த்திட

என்றும் பாடுகிறார்.

கவலைகளையும் துன்பங்களையும் மனதில் ஏற்றி வருந்திப் பயனில்லை என பாரதியாரின் வழியில் தென்காசியை சேர்ந்த கவிஞர் பூலாங்குளம் மாயவநாதன்,

கவலைகள் கிடக்கட்டும்

மறந்துவிடு

காரியம் நடக்கட்டும்

துணிந்து விடு

சுட்டதும் தங்கத்தின்

நிறம் போமோ

தொட்டதும் மலர்களின்

மணம் போமோ

கற்றவன் கலங்குதல்

அழகாமோ

நிச்சயம் இரவுக்குப் பகலுண்டு

நீதியின் கண்களில் ஒளியுண்டு

என்றே நம்பிக்கை கூறுகிறார்.

மண்ணில் நல்ல வண்ணம் மனிதன் வாழும் முறைமையை உணர்த்தும் வகையில் பாரதியார்,

நின்னைச் சரண் அடைந்தேன்

என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று

நின்னைச் சரண் அடைந்தேன்

என்றும்,

துயர்கள் தொலைந்திடுக

கவலைப்படுதலே கருநாகமாம்

கவலையற்றித்தலே முக்தி

என துன்பத்தை மறந்திட பாரதி வழிகாட்டுகிறார்.

மேலும் தேசமுத்துமாரியிடம்,

துன்பமும் இல்லை - கொடும்

துன்பமும் இல்லை.

என தத்துவ தரிசனத்தில் பாடுகிறார்.

மனிதரில் சிலர் எப்போதும் நடந்ததையே நினைந்து மனம் வருந்துவர். இவர்களை 'மூடர்' என்கிறார். நடக்கப் போவதையே எண்ணி மனம் மயங்கிக் கொண்டிருப்பர்.

''சென்றது இனி மீளாது; மூடரே, நீர்

எப்போதும் சென்றதையே சிந்தை செய்து

கொன்றழிக்கும் கவலை எனும் குழியில் வீழ்ந்து

குமையாதீர்; சென்றதனைக்

குறித்தல் வேண்டா;

இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நெஞ்சில்

எண்ணமதைத் திண்ணமுற

இசைத்துக் கொண்டு

தின்று விளையாடி இன்புற்றிருந்து வாழ்வீர்!''

''போனதற்கு வருந்துதல் வேண்டா,

புன்மை தீர்ப்ப முயலுவம் வாரீர்'' என்கிறார். கண்ணதாசனும் தனக்கே உரிய பாணியில், நடந்ததை எண்ணி கவலைப்பட்டால் அவன் மடையன், ஆஹா நடப்பதை எண்ணி வருத்தப்பட்டால் அவன் மூடன்,

போடா வருவது வரட்டும் என்பவனே

நல்ல ரசிகன் அவன் இவனே இவன் அவனே,

அட இன்றும் இல்லை நாளை இல்லை

இரவில்லை பகலில்லை

இளமையும் முதுமையும் முடிவும் இல்லை

ஆண்டவன் படைச்சான் - என்கிட்ட கொடுத்தான்

அனுபவி ராஜானு அனுப்பி வச்சான் என்கிறார்.

கடவுளிடம் ஒருவன் தனக்கு மட்டுமே அதிகமாக துன்பங்கள் இருக்கின்றன என புலம்பினான். கடவுள் அவனை மறுநாள் ஒரு மண்டபத்திற்கு வந்து அங்குள்ளவர்களிடம் உள்ள கவலை, துன்பங்களை மாற்றிக் கொள்ளுமாறு கூறினார். இவனும் அங்கு வந்து ஒவ்வொருவராக சந்தித்து அவர்களின் கவலை, துன்பம் பற்றிக் கேட்டான். பலர் தங்களின் நோய் பற்றிக் கூறி, அதை எடுத்துக் கொண்டால் அளவற்ற பணம், நகை, சொத்துகளை தருவதாக கூறினர். அவர்களுடன் ஒப்பிடும் போது தனக்குள்ள கவலையும் துன்பமும் எவ்வளவோ பரவாயில்லை என கடவுளுக்கு நன்றி சொன்னான்.

உனக்கும் கீழே உள்ளவர் கோடி

நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு

என்ற வரிகள் வாழ்வின் வேதம் அல்லவா.

கவலைப்படுவதையே வாடிக்கையாகவும் வாழ்க்கையாகவும் கொண்டிருக்கிறான் இன்றைய மனிதன் என்பதை

நெஞ்சிற் கவலை நிதமும் பயிராக்கி

அஞ்சி உயிர் வாழ்தல் அறியாமை

என பாடுகிறார் பாரதியார்.

''விட்டு விடுதலை யாகி நிற்பாய் இந்தச்

சிட்டுக் குருவியைப் போலே''

என பாடியவர் ஒரு கட்டுரையில்,

சிட்டுக்குருவி பறந்து செல்வதைப் பார்த்து எனக்கு பொறாமை உண்டாகும். ஆஹா! உடலை எவ்வளவு லாவகத்துடன் சுமந்து செல்கிறது. இந்தக் குருவிக்கு எப்போதேனும் தலைநோவு வருவதுண்டோ? முகத்திலே இத்தனை தெளிவு இருக்க நியாயமில்லை.

பயமும், மானமும் மனிதனுக்குள்ளது போலவே குருவிக்கும் உண்டு. இருந்த போதிலும், க்ஷணம்தோறும் மனிதருடைய நெஞ்சை செல்லரிப்பது போலே அரிக்கும் கவலையும், அதனால் ஏற்படும் நோய்களும் குருவிக்கு இருப்பதாக தெரியவில்லை'

வாழ்க்கை முழுதும் தெய்வ பக்தியையும் சக்தியையும் இமைப் பொழுதும் மறவாமல் போற்றி வந்த பாரதியார், பாப்பாவுக்குப் பாடினாலும் சரி, பாரத நாட்டைப் பற்றிப் பாடினாலும் சரி - தம் நெஞ்சிற்குப் பாடினாலும் சரி, 'வசன கவிதை' ஆயினும் சரி, தெய்வத்தின்அருளையும் ஆற்றலையும் சுட்டிக்காட்ட தவறியதே இல்லை.

தெய்வம் நமக்குத் துணை பாப்பா - ஒரு

தீங்குவர மாட்டாது பாப்பா

எனப் பாப்பா பாட்டிலும்,

''வலிமையுளது தெய்வம் - நம்மை

வாழ்ந்திடச் செய்வது தெய்வம்''

என முரசுப் பாட்டிலும்,

''வையமெலாம் தெய்வ வலியன்றிவேறில்லை''

என விடுதலை வெண்பாவிலும்,

''எல்லாம் புரக்கும் இறைநமையும் காக்கும் என்ற

சொல்லால் அழியும் துயர்''

என்றும் பாடி இருக்கிறார்.

வாழ்வில் அவ்வப்போது நாம் எதிர்கொள்ளும் சோதனை, துன்பம், தொல்லை எல்லாவற்றையும் 'தெய்வம் நம்மைக் காக்கும்' என்ற நம்பிக்கையால் - வெற்றி கொண்டு விடலாம் என உறுதியாக நம்புகிறார் பாரதியார். தெய்வ நம்பிக்கை இருந்தும் வெற்றி பெற முடியவில்லை என்றால், அதற்கும் தெய்வத்தின் அருளே காரணம் என எண்ண வேண்டும் என்பதை

''சக்தி பல சோதனைகள் செய்தால் அவள்

தண்ணருள் என்றே மனது தேறு''

என்ற வரிகள் சொல்கிறது.

பாரதியார் கூறும்

துன்பமே இயற்கை எனும்

சொல்லை மறந்திடுவோம்;

இன்பமே வேண்டி நிற்போம்;

யாவும் அவள் தருவாள்.

நம்பினார் கெடுவதில்லை; நான்குமறை தீர்ப்பு;

அம்பிகையைச் சரண்புகுந்தால்

அதிகவரம் பெறலாம்

என சிந்தித்தால் துன்பத்தை மறக்கும் மனம் வந்து விடும் என பாரதியார் உணர்த்துகிறார்.

-ஆத்திசூடி தொடரும்முனைவர் தென்காசி கணேசன்

94447 94010






      Dinamalar
      Follow us