தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/சித்தர்களின் விளையாட்டு - 18

சித்தர்களின் விளையாட்டு - 18

சித்தர்களின் விளையாட்டு - 18


ADDED : பிப் 12, 2026 11:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 12, 2026 11:15 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இடம் மாறிய சிவன்

“அம்மையே, என்ன சொல்கிறீர்கள்? மதுரை மீனாட்சியம்மன் கோயிலை விட்டு சுந்தரேஸ்வரர் வெளியேறினாரா? வியப்பாக இருக்கிறதே. அதைப் பற்றி சொல்லுங்கள் தாயே” எனக் கேட்கத் தயாரானார் நாரதர்.

மதுரையை ஆண்ட குலசேகரப் பாண்டிய மன்னன் செருக்குடன் ஆட்சி செய்தான். ஏழைகள் தவறு செய்தால் கடுமையாக தண்டிப்பதும், செல்வந்தர் தவறு செய்தால் அவர்களை மன்னிப்பதுமாக இருந்தான். இதனால் பலரும் மனம் வருந்தினர்.

குலசேகர பாண்டியன் செருக்குடன் ஆட்சி செய்தாலும் சிவபக்தனாக இருந்தான். தினமும் மீனாட்சியம்மன் கோயிலுக்குச் சென்று வழிபட்ட பின்னரே அரசப் பணிகளில் ஈடுபடுவான். எந்த விஷயத்திலும் முடிவு எடுக்க வேண்டுமானால் சுந்தரேஸ்வரர் சன்னதி முன்பு தான் முடிவு செய்வான். அவ்வளவு பக்தி இருந்தாலும் அரசன் என்ற ஆணவம் தலைதுாக்கியதால் நீதி அனைவருக்கும் சமம் என்பதை உணர மறந்தான். மன்னருக்கு புத்திமதி சொல்ல அனைவரும் பயந்தனர்.

நீதிக்கு புறம்பாக செயல்படும் மன்னரை கண்டிக்க வேண்டிய அமைச்சர்களும் உடந்தை என்பதால் நாடு அழியும் நிலையில் இருந்தது. மக்கள் எப்போது விடிவு காலம் கிடைக்கும் என சிவனை வணங்கியபடி வீட்டுக்குள் முடங்கினர். இது தெரியாமல் மன்னனும் தன்னை பார்ப்பதற்கே அனைவரும் பயப்படுகிறார்கள் என தற்பெருமை கொண்டான்.

அப்பொழுது சித்தர் இடைக்காடர் மதுரைக்கு வந்தார். அவரைப் பார்க்க கோயிலின் முன் கூடிய மக்கள் இடைக்காடரை வணங்கி, “இடைக்காடரே, நீங்கள்தான் எதிர்காலத்தை கணிப்பதில் வல்லவராச்சே! குலசேகர மன்னனின் மனதில் மாற்றம் ஏற்படுமா, பணவசதி உள்ளவர்களிடம் மட்டுமே கரிசனம் காட்டுகிறார். ஏழைச் சொல் அம்பலத்தில் ஏறாது என்பது போல நாங்கள் தவிக்கிறோம். மன்னனுக்கு புத்தி சொல்லி எங்களை வாழவிடுங்கள். ஆனால் புத்திமதி சொல்லப் போய் உங்களை எதுவும் செய்து விடுவாரா என்றும் தோன்றுகிறது” எனக் கூறினர்.

இடைக்காடர் ஜோதிட அறிவால் மன்னரின் குணத்தை ஆராய்ந்தார். அவர் பிடிவாதமானவர் என்பது தெரிந்தது. ஆனால் சுந்தரேஸ்வரர் பக்தர் என்பதால் அவர் சொன்னால் மட்டுமே ஏற்பார் என்பதும் புரிந்தது.

கோயிலுக்குள் சென்ற இடைக்காடர், “சுந்தரேஸ்வரரே! நீங்கள் சில நாட்கள் இங்கு இருக்கவேண்டாம், என்னுடன் வாருங்கள். நாம் வேறிடத்திற்கு செல்லுவோம்” எனக் கூறி, சுந்தரேஸ்வரரை அருகிலுள்ள ஆதிசொக்கநாதர் கோயிலுக்கு அழைத்துச் சென்றுவிட்டார்.

இது தெரியாமல் சுந்தரேஸ்வரரை தரிசிக்க மறுநாள் கோயிலுக்கு வந்த மன்னர் கருவறையில் சுந்தரேஸ்வரர் இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். “கடவுளே, இது என்ன சோதனை? சுந்தரேஸ்வரர் எங்கே?” எனப் பதறினார்.

ஊர் முழுவதும் தண்டோரா போட்டார். கருவறையில் உள்ள சுந்தரேஸ்வரர் சிலையை யார் எடுத்துச் சென்றாலும் அவர்களுக்கு கடும் தண்டனை தரப்படும் என்றார். யாரோ ஏழை தான் பொருளுக்கு ஆசைப்பட்டு சிலையை எடுத்துச் சென்றிருக்கலாம் என எண்ணி அரண்மனை காவலர்களை அனுப்பி ஏழைகளை சோதனையிடச் சொன்னார்.

காவலர்களின் மிரட்டலைக் கண்டு பயந்த ஏழைகள், “இடைக்காடரே... இது என்ன விளையாட்டு? மன்னரின் கொடுமையில் இருந்து தப்பிக்க வழி கேட்டால் மேலும் கொடுமை அதிகரிக்கிறதே... எங்களை காப்பாற்றுங்கள்” என கதறினர்.

ஆதி சொக்கநாதர் கோயிலில் இருந்த சுந்தரேஸ்வரரை வணங்கி, “சிவனே, தாங்கள் நினைத்தால் மட்டும்தான் மன்னரின் மனம் மாறும். நீங்கள்தான் ஏதாவது செய்ய வேண்டும்” என இடைக்காடர் வேண்டினார். சுந்தரேஸ்வரர் இல்லாமல் மனம் வருந்தி அன்றிரவு விழித்தபடி இருந்த மன்னரிடம், “நான் எங்கும் செல்லவில்லை. ஆதிசொக்கநாதர் கோயிலில்தான் தான் இருக்கிறேன். எப்போது நீ வறியவர்களிடம் பணிவுடன் நடக்கிறாயோ, அப்போதுதான் மீனாட்சியம்மன் கோயிலுக்கு வருவேன்” என அசரீரி கேட்டது.

திடுக்கிட்ட மன்னர் தவறை உணர்ந்து ஆதிசொக்கநாதர் கோயிலுக்குச் சென்றார். சுந்தரேஸ்வரரின் காலில் விழுந்து வணங்கினார். “என் தவறை பொறுத்தருளுங்கள். இனி நாட்டு மக்களுக்கு நன்மையே செய்வேன், நீதி வழங்குவேன்” என வாக்குறுதி அளித்தார்.

அவர் முன் தோன்றிய சுந்தரேஸ்வரர், “கவலை வேண்டாம் மன்னா! சித்தர் இடைக்காடருடன் நான் ஆதிசொக்கநாதர் கோயிலுக்கு வந்தேன். உன் தவறைப் புரிய வைக்கவே இத்திருவிளையாடலை நிகழ்த்தினேன்” என்றார். இடைக்காடரும் ஆசியளித்து, “மன்னா! தவறை எப்போது உணர்ந்தாயோ, அன்றே சுந்தரேஸ்வரர் தன் கோயிலுக்கு சென்று விட்டார் என பொருள். இனி நல்லாட்சி நடத்துக” என அறிவுரை வழங்கினார்.

மன்னரும் இடைக்காடரை வணங்கி தனக்கு அறிவு புகட்டியமைக்கு நன்றி தெரிவித்தார். கொடுத்த வாக்கினை காப்பாற்றும் விதமாக நல்லாட்சி நடத்தினார். அதன் பின்னர் இடைக்காடர் பழநிக்குச் சென்று போகரை வணங்கி, அவரிடம் கற்றுத் தேர்ந்தார். போகருக்கு சீடரான புலிப்பாணியுடன் சேர்ந்து ஞானம், யோகம், ஜோதிட கலைகளில் சிறந்து விளங்கினார்.

போகரின் ஆணைப்படி திருவண்ணாமலைக்குச் சென்று, அண்ணாமலையாரின் பாதங்களை வணங்கி, கிரிவலப் பாதையில் விநாயகரை பிரதிஷ்டை செய்தார். பிரம்மலிங்க சன்னதிக்குப் பின்புறம் உள்ள குகையில் மகிழ மரத்தின் அருகில் ஒளி வடிவில் முக்தியடைந்தார்.

“ஆம்! மகேஸ்வரரே, இன்றும் திருவண்ணாமலை கோயிலின் உள்ளே ஆடு, மாடு சிற்பங்கள் இருப்பதைக் கண்டு, வியந்திருக்கிறேன். அதற்கான விடை இப்போது தான் தெரிந்தது” என்றார் நாரதர்.

“மகேஸ்வரரே! ஆட்சியாளர்கள் தவறு செய்யும் போது அவர்களை சித்தர்கள் தங்களின் விளையாட்டு மூலம் திருத்தியவிதம் மிக அருமை” என பார்வதி கூற மகேஸ்வரர் புன்னகைத்தார்.

“அதுமட்டுமா... இன்னும் இருக்கிறது. நம் உரையாடலை கேட்டு முக்தி அடைந்த சித்தர் ஒருவர், இப்போது திருப்பரங்குன்றத்தில் தன் விளையாட்டை தொடர்ந்து கொண்டிருக்கிறார் தெரியுமா?” என மகேஸ்வரர் சொல்ல ஆரம்பிக்க பார்வதிக்கு ஆர்வம் அதிகரித்தது.



-விளையாட்டு தொடரும்

ஜெ.ஜெயவெங்கடேஷ்

90030 00250

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us