தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/சிவனே எங்கள் சொத்து

சிவனே எங்கள் சொத்து

சிவனே எங்கள் சொத்து


ADDED : பிப் 12, 2026 10:35 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 12, 2026 10:35 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிவபக்தி கொண்ட மகான் ஒருவர் பாடல்கள் பாடி அரிசியை காணிக்கையாக பெறுவார். அதில் அவருடைய மனைவி சமையல் செய்வாள். அடியார்களுக்கு தர்மம் செய்து மீதியை இருவரும் சாப்பிடுவர். எளியவரான அந்த மகானைப் பற்றி அரசர் கேள்விப்பட்டார்.

“வாழ வசதியும், உழைக்க மனசும் இல்லாதவர் மகான் எனச் சொல்லிக் கொண்டு, உழைக்காமல் வாழ்கிறார். இவருக்கு பணம் கிடைத்தால் கடவுளை மறந்து விட்டு, மற்றவர் போல வாழ்வார்” என்றார் அரசர்.

ஆனால் அமைச்சரோ, “இப்படி பேசி பக்தரை இழிவுபடுத்தாதீர்கள்” என்றார். அரசர் அதை ஏற்கவில்லை.

“மகானுக்கு சோதனை வைப்போம். அதில் அவர் வெற்றி பெற்றால் என் தோல்வியை ஒப்புக் கொள்கிறேன்'' என்றார் அரசர். அடுத்த நாள் அவர் பாடிக் கொண்டு வரும் வழியில் காத்திருந்து நவரத்தினங்களை பிச்சை இடுமாறு பணியாளர்களுக்கு உத்தரவிட்டார். அப்படியே அவர்களும் செய்தனர்.

''நவரத்தினங்களை நம்மிடமே ஒப்படைப்பார்'' என்றார் அமைச்சர்.

அரசரோ ''அப்படி அவர் திருப்பி தர வாய்ப்பே இல்லை'' என மறுத்தார். மகானும் வரவே இல்லை. மறுநாளும் மகானின் பிச்சை பாத்திரத்தில் வைரங்களை இடச் சொன்னார் அரசர். இந்த முறையும் திருப்பித்தரவில்லை. அரசரின் உத்தரவால் மூன்றாம் நாளில் முத்துக்களை இட்டனர். அதையும் தரவில்லை. அன்று மாலையில் பணியாளர்கள் மூலம் மகானை அரண்மனைக்கு வரவழைத்தார் அரசர். ''தினமும் நாங்கள் இடும் அரிசி போதுமானதாக உள்ளதா?'' எனக் கேட்டார் அரசர்.

“அரசே... அன்றாடம் கிடைப்பதை மனைவியிடம் கொடுப்பேன். அவள் சமைத்து அடியார்களுக்கு அளித்த பின் மீதியை நாங்கள் சாப்பிடுவோம். ஒன்றும் கிடைக்காவிட்டாலும் சிவனின் அருளே என நினைப்போம்” என்றார்.

''அரிசி மட்டும் தான் கிடைக்கிறதா, வேறு ஏதேனும் கிடைக்கவில்லையா?” எனக் கேட்க, அதற்கு மகான் அமைதியாக நின்றார். ''அரிசியுடன் நவரத்தினங்களை கொடுத்தோமே! என்ன செய்தீர்கள்” எனக் கேட்டார்.

''அப்படியே மனைவியிடம் கொடுப்பேன். வேண்டுமானால் என் மனைவியிடம் கேட்டு பார்க்கிறேன்'' என்றார் மகான். “நாங்களும் வருகிறோம்” என உடன் சென்றனர். மனைவியிடம் நடந்ததை மகான் விளக்கமாகச் சொல்ல அவள், “நீங்கள் கொண்டு வரும் தானியத்தில் கற்கள் இருப்பதுண்டு. அவை என்னவென்று எனக்குத் தெரியாது. அரிசியைக் களையும் போது அவற்றை ஜன்னல் வழியாக எறிவேன்'' என்றாள்.

“அப்படியானால் குடிசையின் பின்புறம் சென்று பார்க்கலாம்” என்றார் அரசர். அங்கு சென்ற போது நவரத்தினங்கள் கீழே கிடப்பதைக் கண்டு அதிர்ந்தனர். “அரசே! எங்களுக்கு அரிசியில் கிடக்கும் கல்லும், வைரமும் ஒன்று தான். உங்களுக்கு வேண்டுமானால் அவை பெரிதாக இருக்கலாம். எங்களின் ஒரே சொத்து சிவன் மட்டுமே” என்றார் மகான்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us