தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/தெய்வத் திருமணம் - 14

தெய்வத் திருமணம் - 14

தெய்வத் திருமணம் - 14


ADDED : பிப் 12, 2026 10:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 12, 2026 10:30 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அக்னி தேவன் - சுவாஹா தேவி திருமணம்

காஸ்யப முனிவரின் முதல் மனைவியான அதிதிக்கு இந்திரனுக்கு அடுத்துப் பிறந்தவர் அக்னி தேவன். அக்னி தேவன் திசை காவலர்களில் ஒருவராக, தென்கிழக்கு திசையின் பாதுகாவலராக இருக்கிறார். ஆடு வாகனமும், சிவப்பு நிறமும் கொண்ட இவர் இரண்டு முகம், மூன்று கால், மூன்று உடல், ஏழு கைகள் கொண்டவர்.

மனிதர்கள், முனிவர்கள், தேவர்கள் செய்யும் வேள்வியில் சமர்ப்பிக்கும் புனித பொருட்களைப் பெறுபவர் அக்னி தேவன். அப்பொருட்களை உரிய தெய்வங்களுக்கு கொண்டு சேர்க்கும் புனிதப் பணியை செய்கிறார்.

மனிதர்களின் அன்றாட வாழ்வில் வீட்டு பயன்பாடுகளுக்கு பல வழிகளில் உதவுகிறார். திருமணம் உள்ளிட்ட பல்வேறு சடங்குகளை அக்னியைச் சாட்சியாகக் கொண்டு மனிதர்கள் செய்கின்றனர். மனிதனின் இறப்புக்குப் பின் உடலை எரியூட்டிப் புனிதப்படுத்தும் பணியை அக்னி தேவனே செய்கிறார்.

இப்படி மனிதர்களுக்கும், அக்னி தேவனுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. அக்னி தேவன் நெருப்பு என்பதால் அவருடன் சேர்ந்திருப்பது கடினம் என நினைத்த தேவலோகப்பெண்கள் பலரும் அவரிடம் ஒதுங்கியே இருந்தனர். ஆனால் அவர் மீது தட்சன் மகளான சுவாஹா தேவி மட்டும் விருப்பம் கொண்டாள். தன் விருப்பத்தை தந்தை தட்சனிடம் சொல்ல தயங்கினாள்.

இதே போல தன் எண்ணத்தை அக்னி தேவனிடம் எப்படி சொல்வது என தவித்தாள். ஒருமுறை பூவுலகில் பெரும் வேள்வி ஒன்று நடந்தது. அதில் பங்கேற்க சப்தரிஷிகளான அத்திரி, பரத்வாஜர், ஜமதக்கினி, கவுதமர், காசியபர், வசிஷ்டர், விஸ்வாமித்திரர் ஆகிய முனிவர்களும், அவர்களின் மனைவியருடன் வந்திருந்தனர்.

அந்த வேள்வியில் நெருப்பாக எழுந்தருளிய அக்னி தேவன், சமர்ப்பிக்கப்பட்ட நெய்யை ஏற்று ஒளிமயமாகி சுற்றிலும் இருப்பவர்களைக் கண்டார். அங்கிருந்த சப்த ரிஷிகளின் மனைவியர் அவரது கண்ணில் பட்டனர். அவர்களின் அழகைக் கண்டு வியந்த அக்னி தேவன் மயங்கினார். அவர்களை எப்படியாவது அடைய ஆசைப்பட்டார். ஆனால் இந்த விஷயம் சப்தரிஷிக்குத் தெரிந்தால், சாபம் தருவார்களே என பயந்தார்.

வேள்வி நிறைவடைந்த பின்பு அங்கிருந்து சென்றார். சப்தரிஷிகளின் மனைவியர் மீதுள்ள விருப்பம் குறையவில்லை. காட்டிற்குள் அலைந்து திரிந்த அவரது மனதில், சப்தரிஷிகளின் மனைவியர் பற்றிய எண்ணமே ஓடிக் கொண்டிருந்தது.

சப்தரிஷிகளின் மனைவிகள் தன்னை விரும்ப மாட்டார்கள் என்பதை அறிந்தும் கூட, அவர்களின் ஆசிரமப் பகுதிக்குச் சென்று யாருக்கும் தெரியாமல், அவர்களுடைய விருப்பத்தை அறிந்து நிறைவேற்றி அவர்களை அடையலாம் என நினைத்தார். சப்தரிஷிகளின் மனைவியரை பின் தொடர்ந்து, அவர்களின் விருப்பங்களைச் சேகரித்து வந்தார். இதையறிந்த சுவாஹா தேவி கவலை அடைந்தாள்.

இந்த விஷயம் வெளியே தெரிந்தால் அக்னி தேவனைக் கணவனாக அடைய வேண்டும் என்ற எண்ணம் நிறைவேறாமல் போகுமே என யோசித்தாள். அக்னி தேவனிடம் நேரில் சென்று கண்டித்தால், தன்னைத் திருமணம் செய்யாமல் போவாரோ என்றும் சுவாஹா தேவி பயந்தாள். அப்போது யோசனை ஒன்று தோன்றியது. உடனடியாக அதை செயல்படுத்தும் முடிவுக்கு வந்தாள்.

சப்தரிஷியின் மனைவியரில் ஒருவராகத் தன்னை மாற்றிக் கொண்ட சுவாஹா தேவி தனியாக, ஆற்றில் நீராடச் போவது போல சென்றாள். அங்கு வந்த அக்னி தேவனும் அவளைக் கண்டார். ஆற்றில் நீராடிய அவள், சப்தரிஷியின் மனைவியின் தோற்றத்தில் நடந்து வந்தாள். பின் தொடர்ந்த அக்னி தேவன் தன் விருப்பத்தைச் சொல்ல, அவளும் சம்மதித்தாள். சப்தரிஷிகளின் மனைவியரில் ஒருவரை அடைந்ததாக எண்ணி அக்னி தேவன் மகிழ்ந்தார்.

இப்படியாக சுவாஹா தேவியும் மற்ற சப்தரிஷிகளின் மனைவியரின் தோற்றத்திற்கு மாறி அக்னி தேவனுடன் சேர்ந்தாள். இப்படியாக அக்னி தேவன் ஆறு பேர்களுடன் சேர்ந்து விட்டதை எண்ணி மகிழ்ந்தார். கடைசியாக சுவாஹா தேவி, வசிஷ்டரின் மனைவியான அருந்ததியின் வடிவில் மாற விரும்பினாள். ஆனால் அவள் பலமுறை முயற்சித்தும் வசிஷ்டரின் மீது உண்மையான பதிபக்தி கொண்ட அருந்ததியின் உருவத்தை அவளால் எடுக்க முடியவில்லை.

அக்னி தேவனுக்கு உண்மை தெரிந்தது. சப்தரிஷிகளின் மனைவியரில் ஆறு பேரின் உருவத்தில் வந்தது சுவாஹா தேவி என்பதும் புரிந்தது. தன்னை ஏமாற்றிய சுவாஹா தேவியின் மீது அக்னி தேவன் முதலில் கோபம் அடைந்தார். அதன் பின்பு சிறிது நேரம் அமைதியாக இருந்தார். அப்போது அவருக்குத் அவரது தவறு தெரிந்தது.

தன் மீதுள்ள அன்பால் சப்தரிஷிகளின் மனைவியர் உருவில் வந்த சுவாஹா தேவியின் மீது அக்னி தேவனுக்கு அன்பு ஏற்பட்டது. சுவாஹாவைத் திருமணம் செய்து கொள்வதாக அக்னி தேவன் சம்மதிக்க சுவாஹா தேவி மகிழ்ச்சியடைந்தாள். அதன் பின் தட்சனிடம் சென்று சுவாஹா தேவியைத் திருமணம் செய்ய அக்னி தேவன் விரும்புவதாக தெரிவித்தார். சுவாஹா தேவியும் நடந்ததைச் சொல்லி அக்னி தேவனைத் திருமணம் செய்ய விரும்புவதாகச் சொன்னாள். மகளின் விருப்பத்தை ஏற்று அக்னி தேவனுக்கே திருமணம் செய்து கொடுத்தார்.

அதன் பிறகு அக்னி தேவன் தன் மனைவியான சுவாஹா தேவியிடம் வேள்விகளில் வேள்விப் பொருட்களைச் சமர்ப்பிக்கும் போது, 'சுவாஹா' என்ற பெயரைச் சொன்னால் மட்டுமே அதை உரிய தெய்வங்களிடம் சேர்ப்பேன் என்றார். அதை தொடர்ந்து வேள்வியின் போது நெருப்பாக இருக்கும் அக்னி தேவனின் மனைவியான சுவாஹாவிற்கும் பெருமை கிடைத்தது. ஆண்கள் பெருமையுடன் வாழ துணை நிற்பவர்கள் பெண்களே. அவர்களை மதிப்புடன் நடத்துவது ஆண்களின் கடமை.



-திருமணம் தொடரும்

தேனி மு.சுப்பிரமணி

99407 85925

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us