தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/பெண்பிள்ளை ரகசியம் - 5

பெண்பிள்ளை ரகசியம் - 5

பெண்பிள்ளை ரகசியம் - 5


ADDED : பிப் 12, 2026 10:29 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 12, 2026 10:29 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே

“என்ன கிருஷ்ணவேணிம்மா... ஏதோ யோசனையா இருக்கீங்க” என்றார் அமிர்தம் “அதுவா இந்த 2026ல உலகம் எவ்வளவோ வேகமாக போயிடுச்சு. பேரப்பிள்ளைங்க எல்லாம் போனும் கையுமா இருக்காங்க. அவங்க காலத்துல கோயில், குளம் போவாங்களான்னு தெரியல. அதைத்தான் யோசிச்சிட்டிருந்தேன்”

“இப்பவே அவசரம் ஏன். காலத்துக்கு ஏத்த மாதிரி எல்லாம் புது அவதாரம் எடுக்கும். கதை மூலமா தான் ஒருத்தர ஆழமா தொட முடியும்னு நம்ம பெரியவங்க புராணம், இதிகாசங்களை கதை வடிவில் கொடுத்திருக்காங்க. ஏன்னா கதை ஆன்மாவோட கதவை சுலபமா திறக்கும்னு சொல்லுவாங்க. சில நேரங்களில் உண்மையை வெளிப்படையா பொது வெளியில் சொல்ல முடியாது.

ஆனால் கதைகள் மூலமா அதை சொல்லும் போது அதை ஏற்கும் பக்குவம் கேட்பவர்களுக்கு இயல்பாக வரும். குழந்தைகளுக்கு கதை மூலம் பல நல்ல விஷயம் மனசுக்குள்ள போயிடும். அதனால நீங்க பயப்பட வேண்டாம். கடவுள் சிந்தனை நம்ம குழந்தைகளோட எப்பவும் கூடவே இருக்கும். வாங்க நாம நடப்போம். இன்னைக்கு திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியத்தோட நான்காம் வாக்கியத்தை நீங்க சொல்லணும். ஞாபகம் இருக்கா?”

“ஏன் இல்லாம... பெண்பிள்ளை ரகசியத்தோட நான்காம் வாக்கியமான தசமுகனை செற்றேனோ பிராட்டியைப் போலே பற்றி பார்ப்போம். இது ராமாயணக் கதைதான்னு பெண் பிள்ளை ராமானுஜரிடம் சொல்றா”

“அப்படியா, அதுசரி பிராட்டினா சீதைன்னு புரியுது. தசமுகன்னா யாரு?”

“பத்துத் தலை கொண்ட ராவணன். பத்துத் தலைக்கு பத்து முகம், அதுதான் தசமுகன். நமக்கு தான் ராமாயணக் கதை தெரியுமே... சீதையை ராவணன் சிறை பிடித்து இலங்கைக்கு கொண்டு போய் அசோக வனத்தில் சிறை வைத்தான். ஆற்றல் மிக்க அனுமனிடம் கடல் தாண்டிச் சென்று சீதை இருக்கிறாரா என பார்த்து வரச் சொன்னான் ராமன். அவனும் பெரிய வடிவம் எடுத்து மகேந்திர மலையில் இருந்து கடல் தாண்டி இலங்கையில் குதித்தான். அங்கு அசோக வனத்தில் அரக்கியர் சூழ சீதையை பார்த்தான்.

ராமனின் வரவை எதிர்பார்த்து தவக்கோலத்தில் அவள் இருப்பதை அறிந்து மகிழ்ந்தான். ஆடினான், பாடினான், துள்ளி குதித்தான். நள்ளிரவில் பெரும் ஆரவாரம் கேட்டது. ராவணன் கம்பீரத்துடன் பெரும் படையுடன் வந்து கொண்டிருந்தான். தேவலோக மங்கையர் அவனுடன் பவனி வந்தனர். ராமனை பிரிந்த துக்கத்தால் சீதை அழுது கொண்டிருந்தாள். ராவணன் அப்போதும் அவளை விடுவதாக இல்லை. அவ்வப்போது தொந்தரவு செய்து கொண்டே இருந்தான். நீ ராமனை விட்டு என்னுடன் வந்து விடு. நான் பெரிய பலசாலி, என்னிடம் பல பேர் போரில் தோற்றுப் போய் உள்ளனர். என்னிடம் உள்ள அனைத்தையும் தருகிறேன்.

சீதா...உன்னை பட்டத்து ராணியாக்கி பல பணிப்பெண்களை பணிவிடை செய்யச் சொல்கிறேன் என ஆசை வார்த்தை காட்டினான். சீதைக்கு வந்ததே கோபம். அப்போது கீழே இருந்த ஒரு புல்லை எடுத்து ராவணனின் முன் போட்டு, 'ராவணா நீ இந்த புல்லுக்கு சமானம்' என்றாள். இப்போது ராவணனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. ஆனாலும் சீதை மீதுள்ள ஆசையால் அமைதியாக இருந்தான். உன்னை பார்த்து பேசவும் எனக்கு பிடிக்கவில்லை அதனால் இந்த புல்லைப் பார்த்து பேசுகிறேன் எனத் தொடர்ந்தாள். 'இந்த புல் கூட உன்னை விட உயர்ந்தது. நீ ராணி, பொன், பொருள் என ஆசை காட்டுகிறாயே. அவை எல்லாம் இந்த புல்லுக்கு சமம்' என முகத்தை திருப்பினாள். ராவணனுக்கு கோபம் தலைக்கு ஏறியது.

'என்னுடைய சக்தியால் உன்னை எரிக்க முடியும். ஆனால் நானே என்னை காப்பாற்றிக் கொள்வது இழுக்கு. இது ராமனுக்கும் மரியாதை இல்லை. என் கணவர் ராமர் இருக்கும் போது நான் அவரை மீறி உன்னை தண்டிக்க மாட்டேன். அவரே வந்து என்னைக் காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது' என்றாள்.

சீதை நினைத்திருந்தால் அந்த இடத்திலேயே ராவணனை சுட்டெரித்து விட்டு தன் நாயகன் இருக்கும் இடத்துக்கே சென்று விட முடியும். ஆனால் அவள் பொறுமையோடு இருந்தாள். தான் அப்படி இலங்கையை பொசுக்கி விட்டு தன் நாயகன் ராமனிடம் வந்தால் அது ராமனுக்கு பெருமை ஆகாது. மாறாக பழியைத் தரும்.

அதே போல ராவணன் பலமுறை அவளிடம் மன்றாடியும் ராமன் வந்து என்னைக் காப்பான் என தைரியமுடன் இருந்தாள். அப்படி மனோதிடத்துடன் இருந்து இறுதியில் ராவணனை ராமன் மூலம் அழித்தாள். அதைப் போல மனோதிடம் எனக்கு இல்லையே சுவாமி என ராமானுஜரிடம் பெண் பிள்ளை வருந்தினாள். இது தான் 'தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே' என்ற வாக்கியம். செற்றேனோ என்றால் அழிக்கவில்லையே என்று பொருள் என முடித்தாள் கிருஷ்ணவேணி.

அமைதியாக கேட்டபடி வந்த அமிர்தம், “சுந்தர காண்டம் படிச்சா மாதிரி இருக்கு ம்... பெண்கள்ல ரெண்டு வகை உண்டு. எந்த விஷயத்துக்கும் புருஷன்கிட்ட கேட்டு முடிவெடுக்குறது, தானே முடிவெடுத்து செயல்படுத்தறது. இதில சீதை முதல் வகை. தானே ராவணனை அழிக்க பலம் இருந்தும் ராமன் தான் தன்னை மீட்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது அவள் விருப்பம். ஆனால் மகிஷாசுரமர்த்தினி அப்படி இல்லை. மகிஷனை தானே வதம் செய்தாள். அது தெரியுமா உங்களுக்கு?”

“கேள்விப்பட்டிருக்கேன், அதையும் நீங்களே சொல்லுங்க” என்றார் கிருஷ்ணவேணி.

“மகிஷாசுரன் என்பவன் தேவர்களை துன்புறுத்தினான். அதனால் அவர்கள் சிவனை சரணடைந்தனர். மகிஷனின் அழிவு ஒரு பெண்ணால் தான் என நிகழும் என பிரம்மா வரம் அளித்திருந்தார். அதற்கேற்ப சிவன் தன் சக்தியின் மூலம் ஒளியை உருவாக்கினார்.

இதைத் தொடர்ந்து பிரம்மா, விஷ்ணு, இந்திரன், வருணன், வாயு, குபேரன் என அனைவரும் தங்களின் சக்தியையும் கொடுத்து ஒரு பெண்ணை உருவாக்கினர். அவளுக்கு தங்களின் ஆயுதங்களையும் கொடுத்தனர். மகிஷனை வதம் செய்ய உருவாக்கப்பட்ட அவள் மகிஷாசுரமர்த்தினி என்னும் பெயரில் போருக்கு புறப்பட்டாள். அசுரன் மாயாசக்தி மூலம் பல வடிவெடுத்து எதிர்த்தான். கடைசியாக எருமைக் கடாவின் உருவில் அவன் இருந்தபோது திரிசூலத்தால் மகிஷாசுரமர்த்தினி கொன்றாள்.

“இந்த மகிஷாசுரமர்த்தினி யாரு? ஆக்ரோஷமான கண்களோடு நாக்கை துறுத்திக் கிட்டு இருப்பாங்களே... அவங்களா?”

“ஆமா... ஆனா மகிஷாசுரமர்த்தினி வேற, காளி வேற, கொற்றவை வேற. காளியை பத்தி நிறைய கேள்விப்பட்டிருக்கோம். ஆனா கொற்றவை பத்தி சங்க இலக்கியத்துல படிச்சிருப்போம். போர் தெய்வமான கொற்றவை பெண் சக்தியின் பழமையான வடிவம். அரக்கர், பகைவர்களை அழிக்கிற தாய் தெய்வமா இருப்பவங்க. ஆண்களுடன் பாதுகாப்பில் நிற்கும் தெய்வம் அல்ல. தானே போரிட்டு தானே தீர்ப்பு வழங்கும் தெய்வம். பெண் என்பவள் பலவீனம் இல்லை. அவள் சமூகத்தை காக்கும் சக்தி என்பதை பழங்காலத்தில் இருந்தே நம் மரபு சொல்லிட்டு வருது. இந்த கொற்றவையைத் தான் துர்கை, காளியின் அம்சம்னு சிலர் சொல்றாங்க”

''கொற்றவை! ஆமா பழமையான பெண் தெய்வம் தான். எனக்கும் படிச்ச ஞாபகம் இருக்கு” என யோசனையில் ஆழ்ந்தார் கிருஷ்ணவேணி.

“சரி, திருக்கோளூர் பெண் பிள்ளை ஐந்தாவதா சொன்ன வாக்கியம் என்ன” என்றார் அமிர்தம்

''அதுவா பிணம் எழுப்பி விட்டேனோ தொண்டைமானைப் போலேன்னு ராமானுஜர் கிட்ட சொல்றா திருக்கோளூர் பெண்பிள்ளை. சரி இப்போ எந்த கதை ஞாபகத்துக்கு வருது?”

இப்போதைக்கு எந்த தொண்டைமானை பற்றியும் எனக்கு நினைவில்லை. சரி நேரமாயிடுச்சு, நாளைக்கு பேசலாம் என்றபடி இருவரும் லிப்ட்டை நோக்கி நடந்தனர்.



-தொடர்வாள் பெண்பிள்ளை

முனைவர் பவித்ரா நந்தகுமார்

82204 78043

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us