தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/பாரதியாரின் ஆத்திசூடி - 34

பாரதியாரின் ஆத்திசூடி - 34

பாரதியாரின் ஆத்திசூடி - 34


ADDED : மார் 05, 2026 08:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 05, 2026 08:54 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒற்றுமை வலிமையாம்

ஜாதி, மதம், மொழி வேறுபாடுகளைக் கடந்து ஒற்றுமையாக செயல்பட்டால், அது பெரும் சக்தியாகவும் வெற்றிக்கான வழியாகவும் அமையும். வேற்றுமை எண்ணத்தால் பிரிந்திருப்பது பலவீனம், கூடி இருந்தால் பலம் என்பதை ஆத்திச்சூடியில் கூறுகிறார் பாரதியார்.

ஒற்றுமையே வலிமை என்பது பழமொழி மட்டுமல்ல, அது வாழ்வின் அடிப்படை. நம்மைச் சுற்றி உள்ள வலிமையையும், வளர்ச்சியையும் இது குறிக்கிறது.

வீடோ, நாடோ அனைத்திலும் ஒற்றுமை அவசியம். ஒற்றுமை இல்லாவிட்டால் வீடும், நாடும் அழியும். ஒன்றுபட்டு செயல்பட்டால் அனைவரும் வாழலாம். தனித்தனி குச்சிகளை எளிதில் உடைக்கலாம், ஆனால் கட்டியுள்ள குச்சிகளின் கட்டை உடைக்க முடியாது.

வந்தே மாதரம் பாடலில் இதை,

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

நம்மில் ஒற்றுமை நீங்கில்

அனைவருக்கும் தாழ்வு

நன்றிது தேர்ந்திடல் வேண்டும்

இந்த ஞானம் வந்தால்பின்

நமக்கென வேண்டும்

அதாவது ஒற்றுமை என்ற ஞானம் (wisdom)மட்டும் நமக்குள் வந்தால் போதும் பின் நமக்கு வேறு எதுவும் தேவையில்லை என்கிறார் பாரதியார்.

கோடிக்கணக்கான இந்தியர்கள் வலிமையாக ஒரே சிந்தனையோடு போராடியதால் தான் இன்று சுதந்திர காற்றை சுவாசிக்கிறோம்.

ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்

செத்தாருள் வைக்கப் படும்.

அதாவது ஒற்றுமையை போற்றுபவர் தவிர மற்றவர்கள் இறந்தவராக கருதப்படுவர் என்கிறார் திருவள்ளுவர்.

நான் என்ற எண்ணமே ஒற்றுமையை கெடுத்து பிரச்னைக்குக் காரணமாகிறது. புராண, வரலாற்றுக் காலம் மட்டுமின்றி, பல்வேறு அரசியல் தலைவர்கள், நிறுவனங்கள், குடும்பங்கள் இதனால் பிரிந்து சிதறுவதைப் பார்த்திருக்கிறோம். காரணம் 'நான்' என்ற ஒற்றை எழுத்து படுத்தும்பாடு. அதுதான் ஈகோ.

கவிஞர் வாலி,

நான் நான் என்றே நினைத்தால்

வீண் வீண் என்றே அது அழியும்

தலைக்கனம் அதிகம் என்பதால்தான்

தினம் தினம் சாகிறது தீக்குச்சியும்

என்பார். 'நான்' என்பதைத் தாண்டி 'நாம்' என்று சிந்தித்தால் ஒற்றுமை என்ற விளக்கு மன இருளை விலக்கும்.

குறையில்லாத மனிதர்கள் யாருமில்லை. வேற்றுமைகளைப் பெரிதுபடுத்திப் பார்த்தால் வாழ்வில் ஒன்று சேர்ந்து யாரோடும் வாழ முடியாது. வேற்றுமையில் ஒற்றுமை கண்டு வாழ்வதே வாழ்க்கை.

அதனால் தான் நம் பண்பாடாக விளங்கும் சனாதன தர்மத்தில் குருகுலம் என்ற கல்விப்பட்டறையை அமைத்தனர். அங்கு சிறுவயது முதல் ஒருவரோடு ஒருவர் இணைந்து கல்வி கற்பதோடு, வாழ்வியல் முறைகளை அறியும் வாய்ப்பு கிடைத்தது. கற்றுக்கொடுக்கும் குரு, அவருடைய மாணவன் எப்படி இருக்க வேண்டும் என்பதை தைத்திரிய உபநிஷத்தில் வரும் சாந்தி பஞ்சகம் விளக்குகிறது.

ஓம் ஸஹனாவவது

ஸஹநௌ புனக்து

ஸஹ வீர்யம் கரவாவஹை

தேஜஸ்வினாவதீதமஸ்து

மா வித்விஷாவஹை

ஓம் சாந்தி: சாந்தி: சாந்தி:

பொருள்

ஓம் ஸஹனாவவது பரம்பொருள் நம் இருவரையும் (ஆசிரியர், மாணவர்) ஒருசேர காப்பாற்றட்டும். ஸஹநௌ புனக்து நம் இருவரையும் ஒரே நேரத்தில் பாதுகாக்கட்டும். (அறிவை வளர்க்கட்டும்). ஸஹ வீர்யம் கரவாவஹை நாம் இருவரும் இணைந்து சிறந்த ஆற்றலுடன் செயல்படுவோம். தேஜஸ்வினாவதீதமஸ்து நம் கற்றல் தேஜஸ் (ஒளி/அறிவு) உடையதாக இருக்கட்டும். மா வித்விஷாவஹை: நாம் இருவரும் ஒருவரையொருவர் வெறுக்காமல் அன்புடன் இருப்போம்.

ஓம் சாந்தி : சாந்தி : சாந்தி : மூன்று வகையான தடைகள் (பவுதீக, தெய்வீக, ஆன்மிக) நீங்கி அமைதி நிலைக்கட்டும்.

3000 ஆண்டுக்கு முன் ஒற்றுமை பற்றியும், ஆசிரியர் மாணவர் உறவு பற்றியும் பேசப்பட்டிருப்பது எவ்வளவு பெருமையான விஷயம். இவை போன்ற நீதிமுறைகளை மாணவர்கள் பாடத் திட்டத்தில் சேர்த்தால், ஆசிரியரை எந்த மாணவராவது தாக்குவார்களா? மாணவர்கள் கைகளில் கம்பும், கத்தியும், தேவையற்ற அரசியலும், சினிமாவும் தோன்றுமா? ஒரு நல்ல மகனே, நல்ல மாணவன். நல்ல மாணவனே நல்ல குடிமகன். இதையெல்லாம் தந்த மண் இது என்பதை பாரதியார்,

பாருக்குள்ளே நல்ல நாடு - எங்கள்

பாரத நாடு

சாரத்திலே மிகு சாத்திரங் கண்டு

தருவதிலே உயர் நாடு

யாகத்திலே தவ வேகத்திலே - தனி

யோகத்திலே பல போகத்திலே

ஆகத்திலே தெய்வ பக்தி கொண்டார்தம்

அருளினிலே உயர் நாடு

எனப் பாடுகிறார்.

புராணத்தில் ஒரு கதை உண்டு. தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்த பின் விருந்து நடந்தது. அப்போது கையை மடக்காது விருந்துண்ண வேண்டும் எனத் திருமால் கூற, இது எப்படி முடியும்? கையை மடக்காது யாராலும் உண்ண முடியாது என்றனர் அசுரர்கள். அத்துடன் இது பழி வாங்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட நிபந்தனை என விருந்துண்ணாமல் சென்றனர்.

ஆனால் தேவர்கள் ஒருவருக்கு ஒருவர் எதிர் எதிராக அமர்ந்து உணவைப் பிசைந்து எதிரில் உள்ளவர் வாயில் கையை மடக்காமல் ஊட்டினர். தேவர்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டதால் வெற்றி பெற்றனர். அசுரர்கள் ஒற்றுமையின்றி செயல்பட்டதால் விருந்துண்ண முடியாமல் போனது. ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்பதற்கான கதை இது. இவை போன்ற நீதிக்கதைகள் பாடத்தில் இருந்தால், மாணவர்களுக்கு அறம், வாழ்வியல் நெறிகள் தெரியவரும்.

பஹூனாம் ச ஏவ சத்வானாம்

சமவாயோரிபுஞ்ஜய:

என்கிறது சாணக்கிய நீதி.

பொருள்: சாதுக்களாக இருந்தாலும் ஒன்று சேர்ந்தால் எதிரிகளை வென்று விடலாம்.

பஞ்ச தந்திரம் என்ற நீதி நுால்,

அபி சாராணாம் சமவாயோ ஹி துர்ஜய

த்ருணைர்விதீயதே

ரஜ்ஜுர்பத்யந்தே மத்ததந்தின:

என்கிறது. புற்களை எல்லாம் சேர்த்து செய்யப்படும் கயிறு மதயானையும் கட்டி விடும். வலிமையற்ற ஒருவனின் துன்பத்தை உணர்ந்த மனிதநேயம் கொண்ட ஒருவன் அவனுடன் சேர்ந்து துன்பத்தைப் போக்கி, வலிமையை அதிகரிக்க செய்யும் போது ஒற்றுமை பிறக்கிறது. இப்படி வலிமை இல்லாத ஒருவனுக்கு அதிகரிக்கும் வலிமையையே 'ஒற்றுமை வலிமையாம்' என்கிறார் பாரதியார்.

எந்த வேலையிலும் சிரமம் இருக்கலாம், அதை முடிக்க திறமை தேவைப்படலாம். ஒருவரிடமே அனைத்து திறமைகளும் இருப்பதில்லை. ஒருவர் போல் மற்றொருவர் சிந்திப்பதில்லை. எனவே ஒற்றுமையோடு செயல்பட்டால், ஒவ்வொருவருக்கும் உள்ள தனித்திறமை, சிந்தனையால் செயலை சுலபமாக முடிக்கலாம். இதன் மூலம் நன்மை அனைவருக்கும் கிடைக்கும்.

இன்றைக்கு பல குடும்பங்கள், கூட்டுக் குடும்பம் என்பதில் இருந்து விலகியதுடன், கணவன், மனைவி இணைந்திருப்பது கூட சவாலாகி விட்டது. இதற்கு காரணம் நான் என்ற எண்ணமும், விட்டுக்கொடுப்பது என்ற எண்ணம் இல்லாததும் தான். பிறருக்காக விட்டுக் கொடுப்பதும், மற்றவரின் கருத்தை ஏற்பதும், பிறருக்காக தன்னை மாற்றிக் கொள்வதும் ஒற்றுமைக்கு அவசியம். இதை ஆங்கிலத்தில் மூன்று AAA (Adjust, Adapt, Acknowledge) குடும்ப ஒற்றுமையைக் காக்கும் என்பர். பிறரது உதவியின்றி யாரும் இயங்க இயலாது. ஒருங்கிணைந்தே வாழ முடியும்.

ஒரு மரத்தை தோப்பு என்றோ, தனி மனிதனை சமுதாயம் என்றோ சொல்வதில்லை. ஒற்றுமையுடன் செயல்பட்டுத் தானும் முன்னேறிக் கொண்டு நாட்டையும் முன்னேற்ற வேண்டும் என்ற வாழ்வியல் அறத்தை 'ஒற்றுமையே வலிமையாம்' என வலியுறுத்துகிறார்.

செப்புமொழி பதினெட்டுடையாள் - எனில்

சிந்தனை ஒன்றுடையாள்

ஒற்றுமை என்ற சொல்லுக்கு இந்த வரிகள் தரும் விளக்கத்தை தவிர வேறு எதுவும் வேண்டாம். அதாவது செப்புமொழி பதினெட்டாகவும், சிந்தனை ஒன்றாகவும் இருப்பதுதான் ஒற்றுமை என்றும், மாறாக செப்புமொழி ஒன்றாகவும் சிந்தனை பதினெட்டாகவும் இருப்பின் அது ஒருமை என்றும் கூறுகிறார்.

ஒற்றுமையின்றி சிந்தனை பதினெட்டாக இருப்பின் பெருமை, வளர்ச்சி ஏற்படாது. எனவே ஒரே சிந்தனையோடு ஒற்றுமையாக பாரதி கண்ட புதியதோர் உலகை காண பயணிப்போம்.



- ஆத்திசூடி தொடரும்

முனைவர் தென்காசி கணேசன்

94447 94010

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us