தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/சித்தர்களின் விளையாட்டு - 20

சித்தர்களின் விளையாட்டு - 20

சித்தர்களின் விளையாட்டு - 20


ADDED : மார் 05, 2026 08:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 05, 2026 08:52 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சட்டைமுனி

“ஒருமுறை சித்தர்கள் அனைவரும் சேர்ந்து குறிப்பிட்ட ஒரு சித்தரை குறை கூறினர். மகேஸ்வரர் அந்த வழக்கை தீர்த்து வைத்த விளையாட்டு தெரியுமா?” என பார்வதி கேட்க நாரதருக்கு ஆர்வம் ஏற்பட்டது.

சித்தர்கள் தங்களின் ரகசியங்களை பிறர் அறியக் கூடாது என பரிபாஷையாக எழுதி வைத்தனர். ஞானம் பெற்றவர் மட்டுமே சித்தராக வேண்டும் என விரும்பினர். அதனால் வெளிப்படையாக எதையும் எழுதி வைக்கவில்லை. பாரதத்தின் தென்கோடியில் ஒரு முதிய தம்பதி வாழ்ந்தனர். ஏழையான அவர்கள் பிழைப்புக்கு வழியின்றி கோயில்களில் யாசகம் பெற்றனர். அவர்களின் மகன் சட்டை நாதனும் யாசகம் பெற்று வந்தார். கோயில் வாசலில் யாசகம் பெறும் போது அவருக்கு ஆன்மிக நாட்டம் ஏற்பட்டது.

ருத்திராட்ச மாலை அணியும் சித்தர்களைக் கண்டு வியந்து அவர்களின் பின்னால் அலைந்தார். அவர்களிடம் உபதேசம் பெற்றார். இருந்தாலும் ஞான மார்க்கத்தில் முழுமை பெற விரும்பி பழநியில் போகரை சந்தித்தார். ரசவாதம், மருத்துவத்தை கற்றுத் தேர்ந்தார். கருவூரார், கொங்கணருடன் இணைந்து பல சித்துகளைச் செய்தார்.

யோகம், ஞானத்தில் சிறந்து விளங்கினார். அரிய மருந்துகளை செயற்கையாக தயாரிப்பதில் கைதேர்ந்தார். பல்லாண்டு உயிர் வாழும் கற்பமுறையை அறிந்தார். உலகத் தோற்றம் பற்றிய உண்மை விளக்கத்தை எழுதினார்.

காகபுஜண்டர், உரோம ரிஷி ஆகியோருக்கு சித்தி அடையும் கலைகளைக் கற்றுக் கொடுத்தார். மலையை முக்கோணமாக உருவகித்து மேருபூஜை செய்யும் முறையை எழுதினார். பெண் தெய்வங்களை வணங்கி வாலைக்குமரி, திரிபலை, புவனையை வணங்குவதன் மூலம் வாசியோகம், சிவாயநம என்ற மந்திரம் மூலம் அடையும் காயசித்தியும் இயற்றினார். இந்த நுால்களை காகபுஜண்டர் சித்தரிடம் ஒப்படைத்தார்.

மூச்சுப் பயிற்சியோடு ஓம் என்ற பிரணவத்தை முறைப்படி பயிற்சி செய்தால் மண்ணுடன் நீரும், நீருடன் நெருப்பும், நெருப்புடன் காற்றும், காற்றுடன் விண்ணும் அடங்கும். அப்போது இந்த உடல் அழிந்து மண்ணில் விழும். அப்போது உடலை அழிய விடாமல் கபால தீட்சை என்னும் உள்அமுதை உட்கொண்டு மோட்சம் பெற்றால் மறுபிறப்பு இன்றி பெருவாழ்வு வாழலாம் என்றார் சட்டைமுனி.

இதை வெளிப்படையாக கூறியது மற்ற சித்தர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. சட்டை முனியின் பிரணவ ரகசியத்தை எல்லோரும் பயிற்சி செய்தால் பிறப்பு இன்றி பூமியே அழியும். இயற்கை நியதி மாறி விடும் என சித்தர்கள் எண்ணினர்.

பிரணவ கலையை மறைத்து பரிபாஷையில் சொல்லாமல் நேரடியாக சொன்ன சட்டைமுனி மீது கோபம் கொண்ட அவர்கள் திருமூலரிடம் முறையிட்டனர். திருமூலர், உரோமரிஷி இருவரும் சேர்ந்து காகபுஜண்டரிடம் ஒப்படைத்த நுால்களை பெற்றனர். அவற்றை தீயிட்டு கொளுத்தினர். இருந்தாலும் சட்டைமுனி தொடர்ந்து நுால்களை இயற்றவே திருமூலர் சித்தர்களுடன் சேர்ந்து கயிலாயம் சென்று சிவபெருமானிடம் முறையிட்டார்.

சட்டைமுனி ஞான ரகசியத்தை எல்லாம் வெளிப்படையாக சொல்வதால் உலக இயக்கம் தடைபடும். இதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்றார். சிவபெருமான் புன்னகைத்தபடி, “சட்டைமுனி என் பக்தன். அனைவரும் முக்தி பெற வேண்டும் என நினைக்கும் அவருக்கு இதை நீங்களே புரிய வையுங்கள். அதை விட்டு அவரை எதிர்ப்பதும், அவர் எழுதிய நுால்களை தீயிட்டு கொளுத்துவது, ஆற்று வெள்ளத்தில் இட்டு அழிப்பதும் சரியல்ல” என அறிவுறுத்தினார். அசரீரியாக சட்டைமுனி பெற்ற ஞானத்தை எழுதவும் ஆணையிட்டார்.

சிவனின் ஆணைப்படி நிகண்டு 1200, வாதகாவியம் 1000, சரக்கு வைப்பு 500, நவரத்தின வைப்பு 500, வாகடம் 200, முன் ஞானம் பின் ஞானம் 200, கற்பம் 100, தத்துவம் 51 ஆகிய நுால்களை எழுதி கைலாயத்திற்குச் சென்று, சிவபெருமானின் திருவடியில் நுால்களை அர்ப்பணித்து வணங்கினார். கயிலாயத்திற்கு வந்த போது குளிரைத் தாங்க கம்பளிச் சட்டையை அணிந்ததால் 'சட்டை முனி' எனப் பெயர் பெற்றார்.

நாரதர் வியப்புடன், “மகேஸ்வரா! எல்லாம் தங்களின் திருவிளையாடல் தானா? சாதாரண மக்களும் ஆன்மிக அறிவு பெற வேண்டும் என்பது நல்ல விஷயமே. அதில் மாற்றுக் கருத்து இல்லை. தங்களின் திருநாமம் வாழ்க” என வணங்கினார்.

அப்போது பார்வதி, “அது மட்டுமா நாரதரே, இந்த சட்டைமுனிக்காக தன் ஆபரணத்தை எல்லாம் ரங்கநாதர் கழற்றிக் கொடுத்தது தெரியுமா?” எனக் கேட்க நாரதர் சுவாரசியமானார்.



-விளையாட்டு தொடரும்

ஜெ.ஜெயவெங்கடேஷ்

90030 00250

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us