தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/தெய்வத் திருமணம் -16

தெய்வத் திருமணம் -16

தெய்வத் திருமணம் -16


ADDED : மார் 05, 2026 08:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 05, 2026 08:52 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒப்பிலியப்பன் - பூமாதேவி திருமணம்

பாற்கடலில் திருமாலுக்கு சேவை செய்த மகாலட்சுமிக்கு அவரின் மார்பில் இடம் பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அதைத் தொடர்ந்து பூமிக்கு வந்த அவள், செண்பக மரங்கள் நிறைந்த 'செண்பகாரண்யம்' என்ற பகுதியில் தவமிருந்தாள். மனைவியின் பிரிவைத் தாங்க முடியாத திருமால், ஐப்பசி மாதம் வளர்பிறை, வெள்ளி அன்று பூமிக்கு வந்து மகாலட்சுமியை மார்பில் ஏற்றார்.

திருமாலின் மார்பில் வசிக்கும் வரம் பெற்ற மகாலட்சுமி போல, தானும் திருமாலின் மார்பில் இடம் பெற வேண்டும் என துளசி விரும்பினாள். விருப்பத்தை நிறைவேற்ற பூமியில் துளசிச் செடியாகத் தோன்றி, திருமாலை நோக்கி தவமிருந்தாள்.

அவள் தவம் செய்த பகுதியில், தினமும் ஒரு துளசிச் செடி தோன்றியதால் அப்பகுதியே துளசிவனமாக மாறியது. இந்த நேரத்தில் மிருகண்டு முனிவரின் மகனான மார்க்கண்டேய முனிவர் துளசி வனத்திற்கு வந்தார். அப்போது மகாலட்சுமியை மகளாகப் பெற்று, திருமாலை மருமகனாக அடைய வேண்டுமென்ற எண்ணம் மனதிற்குள் தோன்றியது. உடனே ஓரிடத்தில் அமர்ந்து தவத்தில் ஈடுபட்டார்.

மார்க்கண்டேய முனிவரின் தவத்தைக் கண்டு இரங்கிய மகாலட்சுமி, துளசிச்செடி ஒன்றின் கீழ் குழந்தையாகத் தோன்றினாள். குழந்தையின் அழுகுரல் கேட்டதும் முனிவரின் தவம் கலைந்தது. அந்த குழந்தையும் அழுகையை நிறுத்தி, முனிவரைப் பார்த்துச் சிரித்தது. பூமியில் கிடைத்த அந்தக் குழந்தைக்கு 'பூமாதேவி' என பெயரிட்டுத் தன் மகளாக வளர்த்தார். குழந்தை வளர்ந்து திருமண வயதை அடைந்தது. அவளுக்கு ஏற்ற மணமகனுக்கு திருமணம் நடத்த விரும்பினார்.

அந்த நேரத்தில் ஒரு முதியவர் தனக்குப் பூமாதேவியைத் திருமணம் செய்து தரும்படி வேண்டினார். இளம்வயது பெண்ணைத் திருமணம் புரிய விரும்பும் முதியவரின் மீது கோபம் வந்தாலும் முனிவர் வெளிக்காட்டவில்லை. தற்போது அவளுக்குத் திருமணம் செய்வதாக இல்லை. திருமணம் செய்ய இன்னும் சில காலமாகும் என்றார். ஆனால் முதியவர், தங்களின் மனநிலையை அறிந்தே பெண் கேட்டு வந்தேன். ஆனால் தற்போது மறுக்கிறீர்களே? எனக் கேட்டார்.

“என் மகள் பூமாதேவியின் திருமணத்திற்கு மணமகன் தேடுவது உண்மைதான். ஆனால் அவள் சமைப்பதில் தேர்ச்சி பெறவில்லை. உணவுக்குத் தேவையான உப்பை சரியான அளவில் சேர்க்கத் தெரியவில்லை. அவள் அதைக் கற்ற பின்னரே திருமணம் செய்ய முடியும்” என்றார்.

“தங்கள் மகளை திருமணம் செய்யும் முடிவோடு வந்திருக்கிறேன். அவள் உப்பின்றி சமைத்தாலும் நான் ஏற்றுக் கொள்கிறேன்” என்றார் முதியவர். அதைக் கேட்டுக் கோபம் அடைந்த முனிவர், “முடியாது என மறைமுகமாகச் சொல்லியும் புரியவில்லையா... என் மகளுக்கு ஏற்ற நபரை நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் புறப்படலாம்” என்றார்.

உடனே முதியவர், “ தங்களின் மகளைக் கூப்பிடுங்கள். என்னைப் பிடிக்காவிட்டால் நான் புறப்படுகிறேன்” என்றார். முனிவர் மேலும் கோபத்துடன், “என் மகள் சிறியவள். அவளுக்கு நல்லது கெட்டது எதுவும் தெரியாது. அவளின் திருமணத்தில் நான் எடுக்கும் முடிவே இறுதியானது. நீங்கள் இங்கிருந்து செல்லுங்கள்” என்றார் வேகமாக.

அமைதியாக, “ஏன் கோபப்படுகிறீர்கள்? என்னை மருமகனாக்கிக் கொள்ள ஆசைப்பட்டவரே நீங்கள்தான். ஆனால் தற்போது முடியாது என மறுக்கிறீர்கள்” என்றார்.

“நான் இதற்கு முன்பு உங்களைப் பார்த்ததே இல்லை. என் மகளைத் திருமணம் செய்து கொடுப்பதாக எப்போதும் நான் சொல்லவும் இல்லை” என எச்சரிக்கை செய்தார்.

உடனே முதியவர், “என்னை நன்றாகப் பாருங்கள். இதற்கு முன் என்னைத் தாங்கள் பார்த்தில்லையா உண்மையைச் சொல்லுங்கள்” எனக் கேட்டார்.

“இல்லை” எனச் சொல்வதற்காக திரும்பிய முனிவருக்கு தன் உண்மையான உருவத்தில் திருமால் காட்சியளித்தார். அதனைக் கண்ட முனிவர் அப்படியே சரணடைந்தார்.

மகாலட்சுமியை மகளாகவும், திருமாலை மருமகனாகவும் அடைய வேண்டும் என தவம் இருந்த நாட்கள் நினைவுக்கு வந்தது. தன் மகள் மகாலட்சுமி என்பதும், அவளைத் திருமணம் செய்ய வந்திருப்பவர் திருமால் என்பதையும் அறிந்து மகிழ்ந்தார்.

பின்னர் திருமாலிடம், “என் மகள் பூமாதேவியைத் திருமணம் செய்து தரச் சம்மதிக்கிறேன். பங்குனி திருவோணமான இன்றே என் மகளை திருமணம் செய்து தர விரும்புகிறேன். ஆனாலும் நீங்களே ஒரு நல்ல நாள் பார்த்துச் சொல்லுங்கள்” என்றார்.

“எல்லா நாளும் நல்ல நாளே. ஆனாலும் திருமணத்தில் மூவுலகத்தை சேர்ந்தவர்களும் பங்கேற்க வசதியாக, ஐப்பசி திருவோண நட்சத்திரத்தன்று திருமணம் நடத்தலாம்” என்றார் திருமால். அதற்கு முனிவரும் சம்மதித்தார். உடனே திருமால் அங்கிருந்து மறைந்தார்.

ஐப்பசி திருவோண நட்சத்திரத்தன்று மூவுலகைச் சேர்ந்தவர்கள் எல்லாம் உடன் வர, திருமால் மணமகனாக துளசிவனத்தை அடைந்தார். மார்க்கண்டேய முனிவர் அவருக்குத் துளசி மாலையை அணிவித்து வரவேற்றார். அப்போது அவர், இனி எப்போதும் இந்த துளசி மாலையை அணிந்திருக்கும்படி என வேண்டினார்.

திருமாலும் சம்மதித்தார். திருமால் அணிந்த மாலை கழுத்தில் இருந்து அவரது மார்பு, வயிறு வரை படர்ந்து அழகுபடுத்தியது. மார்க்கண்டேயரின் வேண்டுதலால் திருமாலின் மார்பில் துளசி இடம் பிடித்தாள். இதனால் துளசியின் வேண்டுதலும் நிறைவேறியது.

திருமணத்திற்கு முன்பாக, “எப்போதும் என் மகளை விட்டுப் பிரியாதிருக்க வேண்டும்” என்ற நிபந்தனையை முனிவர் முன் வைக்க திருமால் சம்மதித்தார். அதன் பிறகு, மூவுலகத்தைச் சேர்ந்தவர்கள் முன்னிலையில், திருமால், பூமாதேவி திருமணம் நடந்தது. பூமாதேவியாகத் தோன்றிய மகாலட்சுமி, முனிவரின் மகளாக வளர்ந்து, திருமாலைத் திருமணம் செய்ததால் அவர் முனிவரின் மருமகன் ஆனார்.

“தங்களின் திருமணம் நடந்த இத்தலத்தில் எப்போதும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்புரிய வேண்டும்” என முனிவர் வேண்டினார். அதை ஏற்று பூதேவியுடன் இங்கு கோயில் கொண்டார் திருமால்.

ஒப்பிலியப்பன் கோயில்

கும்பகோணத்தில் இருந்து 8 கி.மீ., தொலைவில் உள்ள தலம் திருநாகேஸ்வரம். இங்குள்ள நாகநாதசுவாமி கோயிலுக்கு அருகில் ஒப்பிலியப்பன் கோயில் உள்ளது. நின்ற கோலத்தில் உள்ள சுவாமியை 'வேறு எவருக்கும் ஒப்பு இல்லாதவன்' என நம்மாழ்வார் பாடியதால், 'ஒப்பிலியப்பன்' எனப் பெயர் பெற்றார். இதே போல பூமாதேவி உப்பு இல்லாமல் சமைத்தாலும், அதை ஏற்பதாக சொன்னதால், இங்கு உப்பில்லாத உணவே நைவேத்யம் செய்யப்படுகிறது. இதனால், 'உப்பிலியப்பன்' எனப்படுகிறார்.

திருமாலுக்கு இடது புறத்தில் பூமாதேவி இருப்பது வழக்கம். இங்கு பூமாதேவிக்கு திருமணம் நடந்ததால் சுவாமிக்கு வலதுபுறம் அவளே இருக்கிறாள். மகளை விட்டுப் பிரியக்கூடாது என்ற நிபந்தனையால் ஒப்பிலியப்பன், பூமாதேவியுடன் மார்க்கண்டேயர் காட்சி தருகிறார்.

108 திவ்யதேச கோயில்களில் பதின்மூன்றாவது தலம் இது. பேயாழ்வார், திருமங்கையாழ்வார், நம்மாழ்வார் பாசுரம் பாடியுள்ளனர்.



-திருமணம் தொடரும்

தேனி மு.சுப்பிரமணி

99407 85925

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us