sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 06, 2026 ,மாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

பெண்பிள்ளை ரகசியம் - 7

/

பெண்பிள்ளை ரகசியம் - 7

பெண்பிள்ளை ரகசியம் - 7

பெண்பிள்ளை ரகசியம் - 7


ADDED : மார் 05, 2026 08:51 AM

Google News

ADDED : மார் 05, 2026 08:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாய்க்கோலம் செய்தேனோ அனுசூயை போலே

“கிருஷ்ணவேணிம்மா... நேத்து தாய்க்கோலம் செய்தேனோ அனுசூயை போலேன்னு ராமானுஜர் கிட்ட திருக்கோளூர் பெண் பிள்ளை சொன்ன வாக்கியத்தை சொன்னீங்களே... ஆமா யார் அந்த அனுசூயை?”

“அட! இன்னிக்கு உங்க நடையிலும், கேள்வியிலும் வேகம் அதிகமா இருக்கே. வந்ததும் ஆரம்பிச்சிட்டீங்க ஏதாவது டானிக் குடிச்சிட்டு வந்தீங்களா?' என அமிர்தத்தை பார்த்து சிரித்தபடி, ''அனுசூயை ராமாயணத்தில் வரும் கதாபாத்திரம் தான். கற்புக்கரசி. இவளின் கற்பு திறம் பற்றி மூவுலகமும் பேசியது. அதையறிந்த மும்மூர்த்திகளின் மனைவியர் அவளின் கற்பை சோதிக்க தம் கணவர்களை அனுப்பினர். மும்மூர்த்திகளும் மாறுவேடம் பூண்டு இவளின் ஆசிரமம் முன்பாக பிச்சை கேட்டு நின்றனர். அவளும் வரவேற்று அமர வைத்தாள். தலைவாழை இலையிட்டாள். அவர்கள் மூவரும் 'ஆடை இன்றி உணவு பரிமாற வேண்டும்' என நிபந்தனை இட்டனர்.

'ஐயோ! அப்புறம் என்னாச்சு?' என பரபரத்தார் அமிர்தம்.

''முதலில் அதிர்ந்த அனுசூயை பின் தெளிந்தாள். கையில் இருந்த நீரை மூவர் மீதும் தெளித்து அவர்களை குழந்தையாக்கினாள். பசும்பாலைக் காய்ச்சி மூவருக்கும் நிபந்தனைபடியே ஊட்டினாள். வயிறு நிரம்பியதால் துாங்கத் தொடங்கினர். அதன் பின் ஆடையை உடுத்தினாள். மும்மூர்த்திகளையும் அனுப்பிய தேவியர் விஷயம் அறிந்து ஓடி வந்தனர். அனுசூயையிடம் மன்னிப்பு கேட்டனர். தங்களின் கணவன்மாரை மீண்டும் பழைய வடிவத்தில் எழுப்பித் தருமாறு கெஞ்சினர். கருணையே வடிவான அனுசூயை மீண்டும் நீர் தெளித்து மும்மூர்த்திகளாக மாற்றி அனுப்பினாள்.

இப்படிப்பட்ட கருணை மனம் கொண்டவள் தான் அனுசூயை. இவர் அத்திரி முனிவரின் மனைவி. இப்போது பெண்பிள்ளையின் ரகசியத்துக்குள் வருவோம். ராமாவதாரத்தில் ராமனும், சீதையும் லட்சுமணனுடன் காட்டுக்குச் சென்றார்கள் இல்லையா... அப்போது காட்டில் முனிவர்களின் ஆசியை பெற்றனர். அப்படி ஒரு சமயம் அத்திரி முனிவரின் ஆசிரமத்துக்குச் சென்றார் ராமர். அவரின் மனைவியான அனுசுயை அவர்களை வரவேற்று உபசரித்தார். பொறுமையே வடிவான சீதையின் அழகும், இனிய பண்பும் அனுசூயையின் மனதை கவர்ந்தன.

சீதையை தன் மகளாக கருதினாள் அனுசூயை. தன்னுடைய பட்டாடைகளை உடுத்தச் செய்து, வாசனை மலர்களைச் சூட்டி மகிழ்ந்தாள். தாயைப் போல அறிவுரையும் வழங்கினாள். சீதைக்கும் அந்த உணர்வு மகிழ்ச்சியை தந்தது. இப்படி அனுசூயை போல ராமனின் மனைவி சீதைக்கு தாயன்பை நான் தரவில்லையே என ராமானுஜரிடம் வருந்தினாள் பெண்பிள்ளை.

இதுதான் பெண்பிள்ளை சொன்ன ஏழாம் ரகசியம் என முடித்தார் கிருஷ்ணவேணி.

ஆர்வமாக கேட்ட அமிர்தம்மா “இந்த இடத்தில சிவனே 'அம்மைன்னு' கூப்பிட்ட காரைக்கால் அம்மையார் தான் நினைவுக்கு வராங்க” என உற்சாகமானார்.

“பேய் உருவமா தலைகீழாக நடந்தவங்க தானே? ஆமா அவங்களுக்கு ஏன் பேய் உருவம் வந்தது?” எனக் கேட்டார் கிருஷ்ணவேணி.

''இவரின் இயற்பெயர் புனிதவதி. காரைக்காலைச் சேர்ந்த செல்வந்தரின் மகளான இவர் சிவபக்தி கொண்டவர். பரமதத்தன் என்பவரை மணம் புரிந்தார். சிவபூஜை, அன்னதானம் என ஆன்மிகப் பணிகளில் ஈடுபட்டார்.

ஒரு சமயம் பரமதத்தனின் நண்பர் அவருக்கு இரண்டு மாங்கனிகள் தந்தார். அதை பணியாளர் மூலம் வீட்டுக்கு அனுப்பி வைத்தார். அதை பத்திரமாக எடுத்து வைத்த புனிதவதி, வீட்டுக்கு வந்த சிவனடியார் ஒருவருக்கு சாப்பிடக் கொடுத்தார். அவரும் அதை சாப்பிட்டு வாழ்த்திச் சென்றார்.

மதிய உணவுக்காக வீட்டுக்கு வந்தான் பரமதத்தன். மாங்கனியில் ஒன்றை எடுத்து வருமாறு புனிதவதியிடம் சொன்னான். அதை சாப்பிட்டதும் இன்னொரு பழத்தையும் கொண்டு வரச் சொல்கிறான். இதை எதிர்பார்க்காத புனிதவதி, இன்னொரு பழம் இல்லையே என நினைத்து சிவனிடம் வேண்டினாள். என்ன ஆச்சரியம்! அவள் வேண்டியதும் இன்னொரு மாம்பழம் கிடைத்தது. சிவனுக்கு நன்றி சொல்லியபடி அதை பரமதத்தனுக்கு கொடுத்தாள். இரண்டாவது பழத்தை சாப்பிட்ட பரமதத்தன் முதல் பழத்தை விட சுவையாக உள்ளதே என கேட்க புனிதவதி நடந்ததைச் சொன்னாள்.

இதை நம்பாத பரமத்தன் மீண்டும் எனக்காக ஒரு பழத்தை கேள் சிவபெருமான் தருகிறாரா பார்ப்போம் என்றான். இப்போது புனிதவதிக்கு தர்ம சங்கடமான நிலை. ஆனாலும் வேண்டினாள். புனிதவதியின் பக்திக்காக மாங்கனியை பரமதத்தன் கண்முன்னே கிடைக்கச் செய்தார்.

'தெய்வப் பெண்ணான இவளை மனைவியாக கொண்டிருப்பது தவறு' என்ற உணர்வு ஏற்பட, வியாபாரத்திற்காக வெளியூர் செல்வதாக சொல்லி விட்டு பிரிந்தான் பரமதத்தன். பின்னொரு நாளில் அவனுடைய இருப்பிடத்தை அறிந்து பெற்றோருடன் புனிதவதி சென்ற போது பரமதத்தன் இரண்டாம் திருமணமாகி குழந்தையுடன் இருந்தான். அந்த குழந்தைக்கு 'புனிதவதி' என பெயர் சூட்டியதை அறிந்து மனம் நெகிழ்ந்தாள். புனிதவதியின் காலில் விழுந்து வணங்கினான் பரமதத்தன். தன் கணவனே காலில் விழுந்ததை எண்ணி வருந்திய புனிதவதி துறவறம் பூண்டாள். தன் இளமை பக்திக்கு தடையாகக் கூடாது எனக் கருதி பேய் வடிவை வேண்டினார். சிவனும் அதை ஏற்று பேய் வடிவை அளித்தார்.

காரைக்கால் அம்மையார் கைலாயத்தை அடைந்தார். அங்கு கால்களால் நடப்பது கூடாது என எண்ணி தலையாலே நடந்து சென்றார். அந்த அன்பைக் கண்ட சிவன் 'அம்மையே' என அழைத்தார். அதனால் தான் சிவனுக்கே தாயான பெருமை பெற்றார் காரைக்கால் அம்மையார்.

சிவனின் தாண்டவத்தை எப்போதும் தரிசிக்க வேண்டும் என்ற வரத்தையும் பெற்றார். சிவபெருமானே கதி எனச் சரணடைந்தால் தெய்வீக நிலைக்கு உயரலாம் என்பதை இவரது வாழ்வு உணர்த்துகிறது”

“இளமை வேண்டாம்; முதுமையை கொடு எனக் கேட்ட அவ்வையாரை தெரியும். எனக்கு அழகு வேண்டாம்; பேய் உருவத்தை கொடு எனக் கேட்ட பெண்ணை நினைக்கும் போது ஆச்சரியமா இருக்கு. எந்த பெண்ணுமே அழகு வேண்டாம் என துளியும் நினைக்க மாட்டா. ஆனா ஆழ்ந்த பக்தி எதையெல்லாம் துச்சம் என துாக்கிப் போட வைத்திருக்கு என நினைக்கும் போது கண்ணீர் வருது”

“கிருஷ்ணவேணிம்மா... கண்ணை துடைங்க. ஏழாம் வாக்கியத்தில் தாய் வந்தாச்சு, அப்ப எட்டாம் வாக்கியத்தில் தந்தை வருவாரோ?”

“எட்டாம் வாக்கியம் தந்தை எங்கே என்றேனோ துருவனை போலே”

துருவ நட்சத்திரம் தான் கேள்விப்பட்டிருக்கேன் எனச் சொல்லி விட்டுப் போனார் அமிர்தம்.

-தொடர்வாள் பெண்பிள்ளை

முனைவர் பவித்ரா நந்தகுமார்

82204 78043






      Dinamalar
      Follow us