
விநாயகர் - சித்தி, புத்தி திருமணம்
படைப்புக் கடவுளான பிரம்மாவுக்குத் தான் செய்து வந்த தொழிலில் ஈடுபாடு குறைந்தது. உயிரினங்கள் தங்களின் முற்பிறவியில் செய்த தீவினைக்கேற்ப குறைகள் ஏற்படுவதற்கு பதிலாக, அவர் படைத்த அனைத்து உயிரினங்களிலும் குறைபாடு தோன்ற ஆரம்பித்தன. இதற்கு காரணம் என்ன என்று தெரியாமல் பிரம்மா கவலையடைந்தார்.
அந்த நேரத்தில் அங்கு வந்த நாரதரிடம் இது பற்றிச் சொல்லி வருந்தினார் பிரம்மா. அதைக் கேட்டு, “தந்தையே... எந்த ஒரு தொழிலையும் தொடங்கும் முன்பாக விநாயகரை பிரார்த்திக்க வேண்டும் என்பதைத் தாங்கள் மறந்து போனதால்தான் குறை ஏற்படுகிறது” என்றார்.
தவறை உணர்ந்த அவர் விநாயகரிடம் மன்னிப்பு கேட்ட போது அவர், “ ஒரு செயலை தொடங்குபவர் என்னை வழிபட்டால் அந்தச் செயலில் மனம் ஒன்றி விடும். அந்நிலையில் என் சக்தியான புத்தி (அறிவு) அவரது அறிவைத் துாண்டி செயல்பட வைக்கும். சித்தி (செயல்) அந்தச் செயலைச் சிறப்பாக செய்து முடிக்கும். இந்த இரண்டு சக்திகளையும் வேண்டியபடி தொழிலில் ஈடுபடுங்கள். உங்களுக்கு எந்தக் குறையும் வராது” என அறிவுறுத்தினார். விநாயகர், அவரது சக்திகளான சித்தி, புத்தியை வேண்டித் தனது படைப்புத் தொழிலைச் செய்யத் தொடங்கினார் பிரம்மா. அதன் பிறகு அவர் படைத்த உயிரினங்கள் அனைத்தும் எந்தக் குறையுமில்லாமல் வாழ்ந்தன. அதனைக் கண்டு மகிழ்ந்த பிரம்மா, தன் படைப்புக்குப் பெருமை சேர்க்கும் சித்தி, புத்தி இருவரும் தன் மகள்களாகப் பிறக்க வேண்டும் என வேண்டினார்.
அவரது வேண்டுதலை ஏற்று சித்தியும், புத்தியும் அவருக்கு மகள்களாகப் பிறந்தனர். பிரம்மா எந்தக் குறையும் இல்லாமல் அவர்களை வளர்த்தார். திருமண வயதை அடைந்த போது, நல்ல மணமகனைத் தேடத் தொடங்கினார். அதைக் கேள்விப்பட்ட நாரதர் பிரம்மலோகத்துக்கு வந்தார். “தந்தையே, என் சகோதரிகளான சித்தி, புத்தி இருவருக்கும் ஒரே நேரத்தில் திருமணம் நடத்த வேண்டும். இருவருக்கும் தனித்தனியாக மணமகன் தேடாமல் ஒரே மணமகனைத் தேர்வு செய்வோம்” என்றார்.
நாரதர் சொன்னதைக் கேட்ட பிரம்மா, “இருவருக்கும் ஒரே மணமகனா? இது தவறாகத் தெரியவில்லையா? நம் சகோதரனே இப்படித் தவறாக வழிகாட்டுகிறானே… என உன் சகோதரிகள் வருத்தப்பட மாட்டார்களா?” என நாரதர் மீது கோபப்பட்டார்.
“பொறுமையாகக் கேளுங்கள். என் சகோதரிகள் இருவரும் விரும்பும் நல்ல மணமகனை நானே தேர்வு செய்து வருகிறேன். இருவரும் அதற்கு சம்மதிப்பார்கள்” என்றார்.
பிரம்மனும், “உன் சகோதரிகள் இருவரும் ஒருவரைத் திருமணம் செய்து கொள்ளச் சம்மதித்தால் எனக்கும் சம்மதமே... அப்படியொரு மணமகன் நமக்குக் கிடைப்பாரா?” என்று கேட்டார். நாரதர் அவரிடம் “தந்தையே, நான் தேடிக் கொண்டு வரும் மணமகன் என் சகோதரிகள் மட்டுமில்லாமல், நீங்களும் விரும்புபவராக இருப்பார்” என்று சொல்லிவிட்டுச் சென்றார்.
அங்கிருந்து கயிலாயத்துக்குச் சென்ற அவர் விநாயகரைச் சந்தித்தார்.“ சுவாமி... என் சகோதரிகள் இருவரும் தங்களை திருமணம் செய்ய விரும்புகிறார்கள். தாங்கள் அதற்கு சம்மதிக்க வேண்டும்” என வேண்டினார்.
“நாரதரே, திருமணமே வேண்டாம் என நினைக்கும் எனக்கு இருவரைத் திருமணம் செய்து வைத்து வேடிக்கை பார்க்க விரும்புகிறீர் போலும்'' எனச் சிரித்தார். “உம் சகோதரிகளை திருமணம் செய்ய சம்மதிக்கிறேன்” என்றார். விநாயகரின் சம்மதம் கேட்டு மகிழ்ச்சியடைந்த நாரதர் தந்தையிடம் இந்த நல்ல தகவலைத் தெரிவித்தார். திருமணமே வேண்டாம் என்ற விநாயகர், தன் மகள்களை எப்படித் திருமணம் செய்து கொள்வார்? என்ற கேள்வி எழுந்தாலும் அவர் வெளிக்காட்டவில்லை.
அதன் பின் சகோதரிகளை சந்தித்த நாரதர், “நம் தந்தை உங்கள் இருவருக்கும் திருமணம் நடத்த விரும்புகிறார். உங்களுக்காக சிறந்த மணமகனைத் தேர்வு செய்து கொண்டு வந்திருக்கிறேன். உங்களுக்கு சம்மதம்தானே?” எனக் கேட்டார்.
“சகோதரரே, நாங்கள் இருவரும் திருமணத்திற்கு சம்மதிக்கிறோம்” என்றனர் மகிழ்ச்சியுடன் பிரம்மலோகத்தில் விநாயகர் தன் பெற்றோரான சிவன், பார்வதி, தம்பி முருகப்பெருமான், தேவலோகத்தினர் என அனைவரின் முன்னிலையில் பிரம்மாவின் மகள்களான சித்தி, புத்தியை திருமணம் செய்தார். அப்போது வேண்டாம் என்றிருந்த விநாயகர் திருமணம் செய்ய சம்மதித்தது எப்படி என அறிய விரும்புவது அவரது முகத்தில் தெரிந்தது.
பிரம்மாவின் மனநிலையை அறிந்த விநாயகர் சிரித்தபடி அருகில் வந்தார். “என்ன பிரம்மனே, உம் மகள்களான சித்தி, புத்தி யார் என தெரியவில்லையா? சில காலத்திற்கு முன்பு படைப்புத் தொழிலில் ஏற்பட்ட குறையை சரி செய்ய என் சக்திகளான புத்தி (அறிவு), சித்தி (செயல்) என்ற இரு சக்திகளைக் கேட்டுப் பெற்றதையும், அவர்கள் இருவரும் உம் குழந்தைகளாகப் பிறக்க வேண்டும் என கேட்டு பெற்றதையும் மறந்து விட்டீரா?” என்றார்.
தன் வேண்டுதலுக்காக விநாயகரிடம் இருந்து பிரிந்து வந்த சக்திகளான சித்தியும், புத்தியும் திருமணம் என்ற உறவால் மீண்டும் அவரைச் சென்றடைந்தன என்பது புரிந்தது. தன் மகனான நாரதர், இருவருக்கும் ஒருவரையே மணமகனாகத் தேர்வு செய்ய வேண்டும் எனச் சொன்னதும் ஏன் என்பதும் புரிந்தது.
--திருமணம் தொடரும்
தேனி மு.சுப்பிரமணி
99407 85925

