தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/தெய்வத் திருமணம் - 11

தெய்வத் திருமணம் - 11

தெய்வத் திருமணம் - 11


ADDED : ஜன 22, 2026 12:32 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 22, 2026 12:32 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சந்திரன் - நட்சத்திர தேவியர் திருமணம்

சிவன், திருமால், பிரம்மா எனும் முப்பெருங்கடவுள்களின் அருளாசியுடன் அத்திரி முனிவர், அனுசுயாதேவி தம்பதிக்கு சோமன், துர்வாசன், தத்தாத்ரேயன் என மகன்கள் பிறந்தனர். இந்த மூவரில், துர்வாசன் வேதம் அனைத்தையும் கற்று மகரிஷியானார். ஞானத்தின் உருவமான தத்தாத்ரேயன் தேவ கணங்களில் ஒருவராக உயர்ந்தார். சோமனின் உடல் அனைவரையும் கவரும் அழகுடன் ஒளி போன்று இருந்ததால் சந்திரன் (ஒளிமயமானவன்) என்ற பெயருடன் நவக்கிரங்களில் ஒருவரானார்.

பூமிக்கு இரவு நேரத்தில் ஒளி தரும் பணிக்காக, பத்து வெள்ளைக் குதிரைகள் அல்லது மான்களால் இழுக்கப்படும் தேரில் சுற்றி வந்தார். பூமியில் உள்ள பெண்கள் மட்டுமின்றி, தேவ உலகத்துப் பெண்களும் குளிர்ச்சியும், ஒளியும் கொண்ட சந்திரனின் அழகில் மயங்கினர். தேவகுரு பிரகஸ்பதியின் மனைவி தாரா, சந்திரனின் அழகில் மயங்கி அவனை அடைய விரும்பினாள். புலவர்களெல்லாம் அழகுக்கு சந்திரனையே அடையாளமாகக் கொண்டனர்.

தட்சன், அவனது மனைவி அக்னிக்குப் பிறந்த அறுபது மகள்களில் அசுவினி முதல் ரேவதி வரையிலான இருபத்தேழு பெண்களும் சிறு வயது முதல் ஒற்றுமையாக இருந்தனர். அதைக் கண்டு தட்சனும் மகிழ்ந்தான்.

ஒற்றுமையாக இருக்கும் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு வரக் கூடாது என்பதற்காக, ஆடை, அணிகலன்களை தேர்வு செய்தாலும், அவை சமமாக இருக்கும்படி பார்த்துக் கொள்வான். அந்தப் பெண்களும், தங்களின் மீது தந்தை சமமான அன்பு கொண்டிருப்பதை எண்ணி மகிழ்ந்தனர்.

ஒருநாள் இருபத்தேழு பெண்களும் சேர்ந்து தோட்டத்தில் விளையாடினர். அப்போது வானத்தில் சந்திரனைப் பார்த்த அவர்கள், “இரவில் வரும் சந்திரன் எவ்வளவு அழகாக இருக்கிறது? சந்திரனில் இருந்து வரும் ஒளி கண்ணிற்குக் குளிர்ச்சியாக இருக்கிறது. பகலில் வரும் சூரியனை விடச் சந்திரனே அழகானவர்” என பேசிக் கொண்டனர்.

அதைக் கேட்ட தட்சன், “உங்களுக்கு சந்திரனைத் திருமணம் செய்ய விருப்பமா?” எனக் கேட்டான். அவர்களும் சம்மதித்தனர். அதன் பின் சந்திரனைச் சந்தித்து, தன் இருபத்தேழு மகள்களையும் திருமணம் செய்யும்படி வேண்டினான். சந்திரனும் சம்மதித்தான். அதன்படி சந்திரனுக்குத் திருமணம் செய்து கொடுத்தான்.

ஒருநாள் தன்னுடைய மகள்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனரா? என்பதை அறிவதற்காகச் சென்றான். ரோகிணி ஒருத்தியைத் தவிர, மற்ற பெண்கள் கவலைப்படுவதை அறிந்தான்.

அந்த பெண்களும், ''எங்களுடன் இருப்பதை விட, ரோகிணியுடன் இருப்பதையே சந்திரன் அதிகம் விரும்புகிறார்” என்றனர்.

கோபமடைந்த தட்சன் மருமகனிடம், “நீங்கள், என் மகள் ரோகிணியிடம் மட்டும் அன்பு காட்டுவதாகவும், மற்றவரிடம் குறை காண்பதாகவும் சொல்கின்றனர். அனைவரையும் சமமாக நடத்துங்கள். இல்லாவிட்டால் அதன் விளைவை சந்திக்க நேரிடும்” என எச்சரித்தார்.

தட்சனின் கோபத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த சந்திரன், “மன்னியுங்கள்; இனி அனைவரிடமும் சமமாக நடப்பேன்” என்றான். ஆனால் சந்திரன் சொன்னபடி நடக்கவில்லை. மீண்டும் ரோகிணியுடன் மட்டுமே நெருக்கமாக இருந்தான். சில மாதம் கழித்து, தட்சன் மீண்டும் விசாரிக்க வந்தான். அப்போதும் ரோகிணியைத் தவிர, மற்றவர்கள் கவலையாக இருப்பதைக் கண்டான். “சந்திரா, உன் உடலில் தோன்றும் கலைகளை இழந்து, அழகு இல்லாமல் போகட்டும்” என சபித்தார்.

தந்தையின் சாபத்தால் கவலையடைந்த அப்பெண்கள், பிரம்மாவை வேண்டினர். “பெண்களே, தட்சன் கொடுத்த சாபத்தில் இருந்து, விடுபட சிவனிடம் வேண்டுங்கள்” எனச் சொல்லி விட்டு மறைந்தார்.

உடனே சிவனை நினைத்து வழிபட்டனர். அவர்கள் முன்பு சிவன் தோன்றி, “சந்திரன் தன் தவறை உணர்ந்து என்னை வழிபட்டால் விமோசனம் கிடைக்கும்” என்றார்.

இதற்கிடையில் சாபம் பெற்ற சந்திரனின் உடல் இருளடையத் தொடங்கியது. இந்நிலையில் மனைவிகளின் வேண்டுதலை ஏற்று சந்திரனும் பூவுலகம் வந்தான். சிவனை வழிபடச் சரியான இடத்தை தேடி அலைந்தான். அவனுக்குச் சரஸ்வதி நதி சங்கமமாகும் பிரபாசம் என்னுமிடம் பிடித்துப் போனது. அந்த இடத்தில் சிவலிங்கத்தை நிறுவி வழிபட்டான்.

இதற்கிடையில், சந்திரனின் அமுதக் கலைகள், ஒளி இல்லாததால் பயிர்கள் தழைக்க முடியாமல் தவித்தன. மனிதர்கள் இரவில் குளிர்ச்சியான ஒளி கிடைக்காமல் துன்பமடைந்தனர். தேவர்கள் தங்களின் காலத்தைக் கணக்கிட முடியாமல் கவலையடைந்தனர். சந்திரனை அடிப்படையாகக் கொண்ட பணிகள் பாதிப்படைந்தன.

அதனையறிந்த பிரம்மாவும் கைலாயம் சென்றார். தட்சனின் சாபத்தில் இருந்து சந்திரனை விடுவிக்கும்படி வேண்டினார். அதன்படி, “சந்திரனே... உனக்கு தட்சன் அளித்த சாபத்தில் இருந்து முழுமையாக விடுவிக்க முடியாது. உன்னுடைய கலைகள் இழந்து அழகு தேய்ந்து கொண்டுதானிருக்கும். நான் உன் மூன்றாம் பிறை நிலையை என் தலை மீது சூடிக் கொள்கிறேன். இதனால் தேய்ந்து போன உன் அழகு மீண்டும் வளர்ந்து, உன் கலைகள் அனைத்தும் உனக்கு மீண்டும் கிடைக்கும். அடுத்து, தட்சன் சாபப்படி நீ தேய்வதும், என் வரத்தின்படி நீ வளர்வதுமாக இருப்பாய். இனி உன் மனைவிகள் இருபத்தேழு பேரும் நட்சத்திரங்களாக உனக்குத் துணையாக இருப்பார்கள். அவர்கள் அனைவரிடமும் சமமாக அன்பு காட்டுவாய். இனி வரும் காலங்களில் உன் நிலையை அடிப்படையாகக் கொண்டு புதிய காலமுறை கணக்குகள் உருவாகும்” என அருள்புரிந்தார்.

ஒருபுறம் அழகை இழந்தாலும், அது மீண்டும் தன்னை வந்தடையும் என்பதுடன், தன்னைக் கொண்டு புதியக் காலக்கணக்கு உருவாகும் என்பதை நினைத்து சந்திரன் மகிழ்ந்தான். சாப விமோசனம் தந்த சிவனை வணங்கி விடைபெற்றான். தன் மனைவியரின் மனம் வருந்தாமல் அவர்களை சமமாக நடத்த முடிவு செய்தான்.

அதன் பின்னர் தட்சன் சாபத்தின்படி அழகு சிறிது சிறிதாகத் தேய்ந்து சந்திரன் மறைந்தான். அன்றைய நாள் அமாவாசையானது. அதன் பின் சிவன் அளித்த வரத்தின்படி, அழகு சிறிது சிறிதாக வளர்ந்து முழு அழகை பெற்றான் சந்திரன். அன்றைய நாள் பவுர்ணமியானது. இப்படியே சந்திரனைக் கொண்டு புதியக் காலக்கணக்கு தோன்றியது. இந்த சுழற்சியில், சந்திரன் ஒவ்வொரு நட்சத்திர தேவியரை சந்தித்து மகிழ்ச்சியாக வாழத் தொடங்கினான்.



தட்சனின் 60 மகள்கள்

பத்ம புராணத்தின்படி, தட்சன் தான் படைத்த பெண்களின் எண்ணிக்கை இன்னும் போதுமானதாக இல்லை என்று உணர்ந்த போது, அவர் தனது மனைவி அக்னியிடமிருந்து மேலும் 60 மகள்களைப் பெற முடிவு செய்தார். மச்ச புராணத்தின்படி, இந்த மகள்களில் ஒருவர் கூட, தங்கள் தந்தையைப் போல இல்லை. அவர்கள் தெய்வங்களுடனும் முனிவர்களுடனும் திருமணம் செய்து உயர்ந்த நிலையை அடைந்தனர்.

1. எமதர்மனைத் தட்சனின் 10 மகள்கள் திருமணம் செய்தனர்.

2. காஷ்யப முனிவரை தட்சனின் 13 மகள்கள் திருமணம் செய்தனர்.

3. சந்திரனை தட்சனின் 27 மகள்கள் திருமணம் செய்தனர்.

4. அரிஷ்டனேமியினை தட்சனின் 4 மகள்கள் திருமணம் செய்தனர்.

5. பிருகு முனிவரின் இரு மகன்களை தட்சனின் 2 மகள்கள் திருமணம் செய்தனர்.

6. அங்கரிசர் முனிவரை தட்சனின் 2 மகள்கள் திருமணம் செய்தனர்.

7. கிருஷஸ்வாவை தட்சனின் 2 மகள்கள் திருமணம் செய்தனர்.



-திருமணம் தொடரும்

தேனி மு.சுப்பிரமணி

99407 85925

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us