ADDED : ஜன 22, 2026 12:30 PM

அக்ரூரரைப் போலே...
மரப்பெஞ்சில் உட்கார்ந்த தேவாமிர்தம் தன் தோழி கிருஷ்ணவேணிக்காக காத்திருந்தார்.
“என்ன சீக்கிரமே வந்துட்ட. திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம் கேட்கற ஆர்வமா?” எனக் கேட்டபடியே கிருஷ்ணவேணி வந்தார்.
''அழைத்து வருகிறேன் என்றேனோ அக்ரூரரை போலே' விளக்கம் கேட்கணுமே''
“கண்டிப்பா... கண்ணனின் தந்தை நந்தகோபன் இருக்காரே... அவரது உறவினர்தான் அக்ரூரர். அக்ரூரர் என்றால் சாது என பொருள். இவர் கண்ணனிடம் ரொம்ப அன்பு கொண்டவர் தங்கையின் மகன் கண்ணனைக் கொல்ல கம்சன் பலமுறை முயற்சித்து தோல்வி அடைந்தான். அதனால் சதி திட்டம் தீட்டினான். விழா ஒன்றை நடத்த ஏற்பாடு செய்தான்.
அதற்கு கண்ணனை அழைத்து 'குவலயா பீடம்' என்ற மதயானை மூலம் கொல்ல நினைத்தான். இதிலும் தப்பினால் மல்லர்களான சாணுாரன், முஷ்டிகனுடன் போர் நடத்திக் கொல்ல நினைத்தான். ஆனால் எப்படி கண்ணனை அழைத்து வருவது என யோசித்தான். அக்ரூரரின் நினைவு வந்தது. உடனே அவரிடம் கண்ணனை அழைத்து வருமாறு ஆணையிட்டான். கம்சனின் பணியாளராக இருந்ததால் அவரால் மறுக்க முடியவில்லை.
கம்சனின் சதித்திட்டம் பற்றி தெரிந்தாலும் கண்ணனை காணும் ஆசையால் கோகுலத்திற்கு தேரில் புறப்பட்டார். வழி எங்கும் கண்ணனின் நினைவாகவே இருந்தது. அவன் என்ன நிறத்தில் ஆடை உடுத்தியிருப்பான், அவனிடம் என்ன பேசலாம் என யோசித்தபடி சென்ற போது வழியில் கண்ணனின் பாத சுவடு கண்ணில் பட்டது. தேரை விட்டு இறங்கினார். மண்ணில் புரண்டு ஆனந்தக் கண்ணீர் விட்டார். மீண்டும் பயணத்தை தொடர்ந்தார். கோகுலத்தில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியாக இருந்தனர். காரணம் கண்ணன் தான் என்பதை அறிந்தார். அவனைக் காண மனம் ஏங்கியது.
தேரின் வேகத்தை கூட்டிக் கொண்டே போனார். ஒரு வழியாக நந்தகோபனின் அரண்மனைக்கு வந்தார். அங்கு கண்ணனை கண்ட மகிழ்ச்சியில் துள்ளினார். அக்ரூரரை கண்ட கண்ணனோ தழுவிக் கொண்டான்.
வந்த விஷயத்தை சொன்னார் அக்ரூரர்.
தாராளமாக வருகிறேன் என தன் அண்ணன் பலராமனையும் அழைத்துக் கொண்டு மதுராவுக்கு புறப்பட்டார் கண்ணன். இருவரும் குழந்தைகள் அல்லவா... அதனால் அக்ரூரருக்கு பயம் ஏற்பட்டது. போகும் வழியில் உள்ள யமுனை ஆற்றில் குளித்து பூஜை செய்ய விரும்பினார். குளிக்கும்போது சிறுவர்களான கண்ணனும், பலராமனும் வேகமாக செல்லும் யமுனையில் அடித்துச் செல்லப்பட்டால் என்ன செய்வது என யோசித்தார். இருவரும் இங்கேயே இருங்கள் எனச் சொல்லி விட்டு நதியில் நீராடினார். கண்ணன் தான் சாமர்த்தியசாலி ஆயிற்றே! அக்ரூரரின் பயத்தை போக்க வேண்டும் என எண்ணினான்.
''நீரில் மூழ்கியபடி இருந்த அக்ரூரருக்கு எப்படி காட்சி கொடுத்தான் தெரியுமா?” என நிறுத்தினார் கிருஷ்ணவேணி. ''எப்படி” என ஆர்வமாக கேட்டார் தேவாமிர்தம்.
பல தலைகளுடன் கூடிய ஆதிசேஷனாக தரிசனம் கொடுக்க அவரது மடியில் கண்ணன்! சங்கு, சக்கரம், முத்து, மாணிக்க மாலையுடன் மஞ்சள் பட்டாடை, தலையில் மயில் தோகை என காட்சியளித்தான். இதைக் கண்ட அக்ரூரர் யமுனையை விட்டு எழுந்தார். அங்கே கண்ணனும், பலராமனும் அமைதியாக இருந்தனர். மீண்டும் நீரில் மூழ்கினார். மீண்டும் அதே காட்சி. வெளியே பார்த்தால் தேரில் கண்ணனும் பலராமனும். ஆக கண்ணனே... நாராயணன். அவனே எல்லா இடத்திலும் இருக்கிறான் என்ற உண்மை புரிந்தது. இதன்பின் அவருக்கு பயமே வரவில்லை. இந்த அக்ரூரரைப் போல கண்ணனைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையுடன் நான் இல்லையே... அதனால் ஊரை விட்டு போகிறேன் என ராமானுஜரிடம் சொன்னாள் திருக்கோளூர் பெண்பிள்ளை”
''அது சரி, கம்சன் போட்ட சதித்திட்டம் என்னாச்சு?” எனக் கேட்டார் தேவாமிர்தம்.
''அதுவா... மதயானை, மல்லர்களை வதம் செய்தான் கண்ணன்” எனச் சிரித்துக் கொண்டே சொன்னார் கிருஷ்ணவேணி.
''ஓ! அக்ரூரருக்குத் தான் கண்ணன் மீது எவ்வளவு பக்தி! இதைக் கேட்டதும் சைவத்தில் சிவனை பூசலார் அழைத்தது தான் ஞாபகத்துக்கு வருது.”
''பூசலாரின் பெருமைகளை சொன்னா நல்லா இருக்கும்” என்றார் கிருஷ்ணவேணி.
''நிச்சயமா, இது எனக்கு கிடைச்ச பாக்கியம் தானே...பூசலார் கோயில் கட்ட ஆசைப்பட்டார். ஆனால் ஏழை. என்ன செய்வது என யோசித்தார். மனதிற்குள் கோயிலை கட்டக் கூடாதா என எண்ணி அப்படியே ஆரம்பித்தார். அதுவும் எப்படி தெரியுமா? சாஸ்திரத்தை பின்பற்றி நல்ல நாள் பார்த்து மனதிற்குள் அடிக்கல் நாட்டினார். இப்படி படிப்படியாக ஒவ்வொரு கற்களாக எடுத்து வைத்து கோயிலைக் கட்டி முடித்தார்.
கும்பாபிஷேகம் நடத்த நாள் குறித்தார். சிவனுக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் விதி விளையாடியது. பல்லவ மன்னனும் காஞ்சிபுரத்தில் கைலாசநாதர் கோயிலை நிர்மாணித்து பூசலார் குறித்த அதே நாளில் நாள் குறித்தான். மன்னரின் கனவில் சிவன், ''நீ குறித்த அதே நாளில் திருநின்றவூரில் என் பக்தன் பூசலார் கட்டிய கோயில் கும்பாபிஷேகத்துக்கு போகிறேன். அதனால் வேறொரு நாளை தேர்வு செய்'' என்றார்.
மன்னனுக்கோ ஆச்சரியம். எனக்கு தெரியாமல் திருநின்றவூரில் எப்படி கோயில் உருவானது என ஆச்சரியப்பட்டார். ஆனால் விசாரித்த போது அங்கே கோயில் இல்லை என்பது உறுதி ஆனது. ஆனால் மன்னனின் உத்தரவை ஏற்று காவலர்கள் பூசலாரை கண்டுபிடித்து அழைத்து வந்தனர். அவரிடம் விசாரித்த போது, ''அது கற்கோயில் அல்ல, சிவனுக்காக கட்டிய மனக்கோயில் எனத் தெரிந்தது. மனக்கோயிலா என அதிர்ந்த மன்னனுக்கு இணையாக பூசலார் மனதிலும் பெரு வியப்பு. யாரும் அறியாதபடி மனதில் கட்டிய கோயிலை சிவனே அங்கீகரித்து ஊரறியச் செய்து விட்டாரே என ஆனந்த கண்ணீர் விட்டார். பெரிய புராணத்தில் உள்ள வரலாறு இது. வெளிநாட்டு மனோதத்துவ வாதிகளான சிக்மன்ட் பிராய்ட், யாங் போன்றவர்கள் அறிந்ததை விட நாம் மனதின் ஆற்றலை அதிகம் அறிந்திருக்கிறோம். மன ஆற்றல் வலிமை மிக்கது என்பதை இது உணர்த்துகிறது” என்றார் தேவாமிர்தம்.
''வால்மீகி ராமாயணத்தில் உள்ள புஷ்பக விமானம் ராமர் நினைத்தவுடன் பறக்கும், இறங்கும். அது எப்படி பறந்தது? தற்கால விமானம் போல அதற்கு ராமர் பெட்ரோல் ஊற்றினாரா? அல்லது ஹைட்ரஜன் வாயுவால் பறந்ததா? எனக் கேட்போருக்கு விடை கிடைத்துள்ளது. அமெரிக்க பல்கலை ஆய்வாளர்கள் இப்போது அதைச் செய்து காட்டியுள்ளனர். லண்டன் 'மெட்ரோ' பத்திரிகையில் எண்ண அலைகளால் பறந்த ஹெலிகாப்டர் பற்றிய செய்தி (ஜூன்5, 2013) வெளியாகி உள்ளது. அமெரிக்கா மினிசோட்டா பல்கலை அறிவியல், பொறியியல் துறையினர் செய்த ஆராய்ச்சியை 'ஜர்னல் ஆப் நியூரல் இன்ஜினியரிங்' என்ற பத்திரிகை வெளியிட்டுள்ளது.
கல்லுாரி வளாகத்திலேயே மாடல் ஹெலிகாப்டர் ஒன்றைச் செய்தனர். அதைப் பறக்க வைக்க சில ஆய்வாளர்கள் தங்கள் தலைகளில் 'எலெக்ட்ரோட்ஸ்'களைப் பொருத்திக் கொண்டனர். நாம் பொம்மை விமானத்தைப் பறக்கச் செய்யும் 'ரிமோட்டை' பயன்படுத்தவில்லை. அதற்குப் பதிலாக 'விமானமே பற, விமானமே இறங்கு, வலது பக்கம் போ, இடது பக்கம் போ' என மனதிற்குள் நினைத்தனர். மூளையில் இருந்து கிளம்பிய எண்ண அலைகள், எலெக்ட்ரோட்ஸ் மூலம் ெஹலிகாப்டருக்குச் செல்ல அதில் இருந்த கருவிகள் அதைப் பறக்க வைத்தன. ஆக மனதிற்கு அவ்வளவு சக்தி உள்ளது என ஆன்மிகத்தில் சொல்லப்பட்டது இன்றைய அறிவியல் ஆராய்ச்சியில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆஹா! இன்னிக்கு 40 நிமிஷம் நடந்ததே தெரியல. அக்ரூரரும், பூசலாரும் நம் மனசெல்லாம் நிறைஞ்சு இருக்காங்க. கூடவே ராமருடைய புஷ்பக விமானமும் சிந்தனையை துாண்டி விட்டிருக்கு. 'அகமொழிந்து விட்டேனோ விதுரரை போலே' என்பதில் உள்ள ரகசியத்தை நாளை பார்க்கலாம்'' என்றார் கிருஷ்ணவேணி.
இருவரும் நடைபாதையை விட்டு விலகி லிப்ட் நோக்கி நடந்தனர்.
--தொடர்வாள் பெண்பிள்ளை
முனைவர் பவித்ரா நந்தகுமார்
82204 78043
