sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 22, 2026 ,மாசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

தெய்வத் திருமணம் - 12

/

தெய்வத் திருமணம் - 12

தெய்வத் திருமணம் - 12

தெய்வத் திருமணம் - 12


ADDED : ஜன 28, 2026 12:42 PM

Google News

ADDED : ஜன 28, 2026 12:42 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நந்திதேவர் - சுயசாம்பிகை திருமணம்

வீதஹவ்யர் என்ற முனிவர் தவத்தின் பயனாக சொர்க்கம், நரகத்தைக் காணச் சென்றார். நரகத்திற்குச் செல்லும் வழியில் ஒரு குன்றைக் கண்ட முனிவர், எமதர்மனிடம் அது பற்றிக் கேட்டார். அதற்கு எமதர்மன், “தாங்கள் சிறு வயதில் சிவனடியார் ஒருவரின் பாத்திரத்தில் விளையாட்டாகப் போட்ட கல், இப்போது குன்றாக வளர்ந்து விட்டது. இறப்பிற்குப் பின் இங்கு வரும் போது, இந்தக் குன்றை தாங்கள் முழுமையாகத் தின்று தீர்க்க வேண்டியிருக்கும்” என்றார்.

அங்கிருந்து எமதர்மனுடன் நரகத்திற்குள் முனிவர் சென்ற போது சிலர், “எங்கள் இறப்பிற்குப் பின் செய்ய வேண்டிய முன்னோர் கடனைச் செய்யத் தவறியதால், நாங்கள் இன்னும் நரகத்திலேயே துன்பப்பட்டு கிடக்கிறோம். எங்களுக்கான முன்னோர் கடன்களை நிறைவேற்றி இந்த நரகத்திலிருந்து காப்பாற்று” என வேண்டினர். அதைக் கேட்டு வருத்தமடைந்தார்.

பூவுலகம் திரும்பிய வீதஹவ்யர், நரகத்தில் உள்ள குன்றைத் தின்று தீர்க்க வேண்டுமென்ற தனக்கான தண்டனையைப் பூமியில் இருந்த ஒரு குன்றைத்தின்று போக்கியதால் 'சிலாத முனிவர்' எனப் பெயர் பெற்றார். நரகத்தில் துன்பமடைந்து கொண்டிருக்கும் முன்னோருக்கான கடனை நிறைவேற்றுவதற்காக சிலாதர், சித்திரவதி என்ற பெண்ணைத் திருமணம் செய்தார். நீண்டகாலமாகக் குழந்தைப்பேறு கிடைக்கவில்லை. இந்நிலையில் குழந்தை வேண்டி யாகம் நடத்த நிலத்தைச் சமன் செய்ய முயன்றார். அப்போது அவருக்குத் தங்கப்பெட்டி ஒன்று கிடைத்தது.

அதை திறந்த போது, அழகிய குழந்தை ஒன்று இருந்தது. அதனைக் கண்டு மகிழ்ந்த அவர், குழந்தையை மனைவியிடம் கொடுத்தார். சித்திரவதியும் மகிழ்ச்சி அடைந்தார். இருவரும் 'சபேஸ்வரன்' என பெயரிட்டு அந்தக் குழந்தையை வளர்க்க தொடங்கினர்.

சபேஸ்வரன் சிறு வயதிலேயே அனைத்துக் கல்விகளையும் கற்றுத் தேர்ந்தான். தேவ உலகத்திலிருந்து சிலாதர் வீட்டிற்கு வந்த வர்ணன், மித்திரன் என்பவர்கள் சபேஸ்வரனின் வாழ்நாள் பதினாறு ஆண்டு மட்டுமே. இன்னும் ஓராண்டு மட்டுமே அவன் வாழ்வான் என்றனர்.

அதனைக் கேட்டு சிலாதரும், அவரது மனைவி சித்திரவதியும் கவலையடைந்தனர். பெற்றோரின் கவலையை அறிந்த சபேஸ்வரன், “என் வாழ்நாள் குறித்து கவலைப்பட வேண்டாம். சிவனிடம் வேண்டி என் வாழ்நாளை நீட்டித்து வரம் பெற்று உங்களுடன் இருப்பேன்” என தவம் செய்யச் சென்றான்.

திருவையாற்றில் உள்ள சூரியக்குளத்தில் சிவபெருமானை வேண்டி தவத்தைத் தொடங்கினான். அங்கிருந்த மீன்கள் நீரில் மூழ்கியிருந்த அவனது கால்களைக் கடித்துத் தின்னத் தொடங்கின. கால்களின் சதைப்பகுதியை இழந்த நிலையிலும் தவத்தைத் தொடர்ந்தான். அவனது மன உறுதியைக் கண்ட சிவபெருமான் அவன் முன் தோன்றி, அவனுடைய வாழ்நாளை நீட்டித்து அருள்புரிந்தார். அதன் பிறகு சபேஸ்வரன் சைவ ஆகமம் பற்றி விளக்கம் தர வேண்டும் என வேண்ட, சிவபெருமானும் அதை அறிவுரையாக வழங்கினார்.

அதைத் தொடர்ந்து பதினாறு செல்வங்களை அளித்து, கைலாயத்தில் இருக்கும் சிவகணங்களின் தலைவர் என்ற பதவியையும், 'நந்திதேவர்' என்ற பட்டத்தையும் வழங்கினார். கைலாயத்தில் கணங்களின் தலைவனாக பணியாற்றும் வாய்ப்பை தந்தமைக்கு நன்றி தெரிவித்தான் சபேஸ்வரன். பெற்றோரிடம் விடைபெற்றுக் கொண்டு கைலாயம் வருவதாகச் சொன்னான். சிவபெருமானும் சம்மதம் சொல்லி விட்டு மறைந்தார்.

பெற்றோரிடம், தனக்குச் சிவன் வழங்கிய வரங்களோடு, தனக்கு 'நந்தி தேவன்' என்ற பெயர் வைத்ததையும் சொல்லி மகிழ்ந்தான். பெற்றோரும் மகிழ்ச்சியடைந்தனர். சிலாத முனிவர், “ உன் கடும் தவத்திற்கு சிவன் கொடுத்த அருட்கொடைதான். இருப்பினும், தற்போது கைலாயம் சென்று பணியாற்ற முடியாது” என்றார். அதனைக் கேட்ட சபேஸ்வரன் அதிர்ச்சியடைந்தான்.

உடனே முனிவர், “சபேஸ்வரா, நீ இப்போதே கைலாயம் செல்வதை எங்களால் அனுமதிக்க முடியாது. உனக்கு, நல்ல மணமகளை கண்டறிந்து மணம் செய்து வைக்க வேண்டும். அதைக் கண்டு நாங்கள் மகிழ வேண்டும். அதன் பின் இருவரும் கைலாயம் செல்லலாம்” என்றார்.

பெற்றோரின் விருப்பத்தை ஏற்ற சபேஸ்வரனும் சம்மதித்தான். இதை அறிந்த சிவனும் மணமகளைத் தேடிக் கண்டுபிடிக்கும்படி தன் கணங்களுக்குக் கட்டளையிட்டார். சிவ கணங்களும் மணமகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். திருமழபாடியைச் சேர்ந்த வசிஷ்ட முனிவரின் பேத்தியும், வியாக்ரபாத முனிவரின் மகளுமான சுயசாம்பிகையை மணமகளாகத் தேர்வு செய்தனர். மணமகள் பற்றிய தகவல்களைச் சிவனிடம் தெரிவித்தனர்.

அதை தொடர்ந்து, சிலாத முனிவர் கனவில் தோன்றி, ''சபேஸ்வரனுக்கு வியாக்ரபாத முனிவரின் மகள் சுயசாம்பிகையைத் திருமணம் செய்'' என சிவன் தெரிவித்தார். இதே போல வியாக்ரபாத முனிவரின் கனவில் தோன்றி ''சுயசாம்பிகைக்கு சிலாகித முனிவரின் மகன் சபேஸ்வரனுக்குத் திருமணம் செய்து கொடு'' என சிவன் தெரிவித்தார்.

சபேஸ்வரன், சுயசாம்பிகை திருமணத்தை திருமழபாடியில் நடத்துவதென்றும், திருவையாறு ஐயாறப்பர், அறம் வளர்த்த நாயகி, திருமழபாடி வைத்தியநாத சுவாமி, சுந்தராம்பிகையை முன்னிலையாகக் கொண்டு, பங்குனி மாதம் புனர்பூசம் நட்சத்திரத்தன்று திருமணத்தை நடத்துவது என பேசி முடித்தனர்.

பங்குனி புனர்பூசத்தன்று திருவையாற்றில் இருந்து ஐயாறப்பர், அறம் வளர்த்த நாயகி பல்லக்கில் முன் செல்ல, சபேஸ்வரன் வெள்ளித் தலைப்பாகையும், கையில் செங்கோலும் ஏந்தியபடி மணமகனாகக் குதிரையில் சென்றார். மணமகன் வீட்டார் வைத்தியநாதன் பேட்டை வழியாகத் திருமழபாடிக்குச் சென்றனர்.

திருமழபாடியில் மணமகள் சுயசாம்பிகை சார்பில், வைத்தியநாத சுவாமி - சுந்தராம்பிகை மற்றும் மணமகள் குடும்பத்தினர் அனைவரும் மணமகன் வீட்டாரை எதிர்கொண்டு அழைத்தனர். அதனைத் தொடர்ந்து திருமணச் சடங்குகளுடன் திருமணம் சிறப்பாக நடந்தது. இதில் அருகிலுள்ள திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருக்கண்டியூர், திருவேதிக்குடி, திருப்பூந்துருத்தி, திருநெய்த்தானம் ஆகிய ஊர்களைச் சேர்ந்தவர்களும் பங்கேற்று மணமக்களை வாழ்த்தி பரிசுகள் வழங்கினர்.

அதன் பின்னர் பெற்றோருக்கு நன்றி தெரிவித்து, மனைவி சுயசாம்பிகையுடன் கைலாயம் சென்றார் நந்தி தேவர். சபேஸ்வரனை அங்கிருந்த அனைவரும் நந்தி தேவராக வரவேற்றனர். சிவகணங்களின் தலைவராகவும், கைலாயத்தின் முதன்மை வாயில் காப்பாளராகவும் பொறுப்பேற்ற சபேஸ்வரன் என்ற நந்தி தேவர் பணியைச் செய்யத் தொடங்கினார்.



--திருமணம் தொடரும்

தேனி மு.சுப்பிரமணி

99407 85925






      Dinamalar
      Follow us